நீதித்துறை என்பது சாமானியர்கள், வழக்காடிகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், குற்றவாளிகள், நீதித்துறை ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர்கள் வாழ்வில் அங்கம் வகிப்பது. அவ்வகையில் ஒரு முன்னாள் தண்டனை கைதி அன்புராஜின் நேர்காணல் இது. இவர் வாழ்க்கை சில நம்ப இயலாத சம்பவங்கள் அடங்கியது, செறிவானது. ஆகவே இந்த நேர்காணல் சற்று நீளமானது. இது 3 பகுதிகளாக வெளிவரும். வீரப்பனுடன் இருந்த நாட்கள், குற்றம், வன அனுபவங்கள் முதல் பகுதி, சிறையிலேயே நாடக குழுவில் இணைந்து நடிகராக ஆனது, பத்திரிக்கை நடத்தியது இரண்டாவது பகுதி, நீதிமன்ற விசாரணை சிறை வாழ்க்கை மூன்றாவது பகுதி. அந்தியூர் திரு. அன்புராஜை 2018 ல் சந்தித்த போது இந்த பேட்டியின் பெரும்பகுதியை செய்துவிட்டேன், இப்போது இந்த இதழுக்காக சில கேள்விகளை சேர்த்து உள்ளேன். அன்புராஜ், தாமரைக்கரையில், ஜூன் 2022 அன்புராஜ் 1994 முதல் 1997 வரை வீரப்பனுடன் 3 ஆண்டுகள் காட்டில் தலைமறைவாக அவர் குழுவில் இருந்துள்ளார். வீரப்பனுடன் இணைந்து 9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள் 9 மாதங்கள் தொடர்ந்து 9 பகுதிகள...