Skip to main content

2. Prayer at executing court - நிறைவேற்று நீதிமன்றத்தில் புதிய பரிகாரம்


....T. Senthulkumar, Advocate, Erode.

 

 தீர்ப்பாணையில் வழங்கப்படாத பரிகாரத்தை நிறைவேற்று நீதிமன்றம் (Executing Court) செயல்படுத்த முடியுமா?.

 

https://indiankanoon.org/doc/114735325/

 

சங்கதி:

 

வாதி ஏற்றுகை ஆற்றுதல் பரிகாரம் கோரி வழக்கு தொடுத்திருந்தார் ஆனால், சுவாதினம் வழங்க பரிகாரம் கேட்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பாணையிலும் சுவாதீனம் வழங்குவது பற்றி குறிப்படப்படவில்லை இந்நிலையில் நீதிமன்றம் மூலம் கிரையப் பத்திரம் எழுதிப்பெற்ற வாதி சுவாதீனம் கேட்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்கிறார். கீழ் அமை நீதிமன்றத்தில் இது அனுமதிக்கப் பட்டது. இதை எதிர்த்து பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்கிறார். 

 

பொதுவாக நிறைவேற்று நீதிமன்றம் தீர்ப்பாணையில் வழங்கப்படாத பரிகாரங்களை கோரினால் தீர்ப்பாணை ஷாத்துக்கள் இல்லாமல் அவற்றை வழங்க முடியாது ( Executing court cannot go beyond the decree) என்பது பொது விதி இந்த பொது விதிக்கு உள்ள விதிவிலக்கில் ஒன்று இந்த வழக்கின் சாராம்சம்.

 

குறித்தவகை பரிகார சட்டம் (Specific Relief Act)-ன்படி, தரப்பினர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட கிரைய உடன்படிக்கையை நிறைவேற்றவும்,  ஒப்பந்தப்படி கிரையப் பத்திரம் எழுதிக்கொடுக்கவும் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ஆனால், சுவாதீனம் ஒப்படைக்க கோரி பரிகாரம் கோரப்படவில்லை. நீதிமன்றம் கிரைய ஒப்பந்தப்படி கிரையம் எழுதித்தர தீர்ப்பாணை பிறப்பித்து அதனடிப்படையில் நீதிமன்றம் மூலம் கிரையப் பத்திரமும் எழுதித்தரப்பட்டது. பின்னர், சுவாதீனம் கோரி வாதி மனு செய்த போது அப்பரிகாரம் தீர்ப்புரையில் வழங்கப்படாததால் நிறைவேற்று நீதிமன்றத்திற்கு சுவாதீனம் வழங்க உத்தரவிடும் அதிகாரம் இல்லை என பிரதிவாதி தரப்பின் ஆட்சேபிக்கப்பட்டது.

 

இது குறித்து பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் குறித்தவகை பரிகார சட்டத்தில் பிரிவு 22 ஐ ஆராய்கிறது சட்டப்பிரிவு 22 (1) ல் ஏற்றுகை ஆற்றுதல் பரிகாரம் கோரும் நபர், பொருத்தமான வழக்குகளில், கூடுதலாக சுவாதீனம், பாகப்பிரிவினை, கிரைய முன்பணத்தை திருப்பி கேட்டல் ஆகிய பரிகாரங்களையும் கோரலாம் என்று கூறுகிறது அதே வேளையில் சட்டப்பிரிவு 22 (2)-ல் மேற்படி பரிகாரங்கள் குறிப்பாக கோரப்படாமல், வழக்குரை திருத்தப்படாமல் வழங்க முடியாது என்றும் சொல்கிறது.

 

இவற்றை பரிசீலித்த உயர்நீதிமன்றம் தன் தீர்ப்புரையில் சுவாதீனம் வழங்கப்படாவிட்டாலும் சட்டப்பிரிவு 22(2)-ன் அடிப்படையில் நிறைவேற்று நீதிமன்றம் சுவாதீனம் வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது

 

குறிப்பு:

 

இவ்வழக்கில் சட்டப்பிரிவு 22(2) ஐ தவிர வேறு சட்டப்பிரிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

 

ஆனால், சட்டப்பிரிவு 28 (3)-ல், கிரையம் பெரும் நபர் கிரையத் தொகையை நீதிமன்ற தீர்ப்புப்படி குறித்த காலத்திற்குள் செலுத்தி விட்டால், பொருத்தமான சூழ்நிலைகளில், அதே வழக்கில் கிரையம் எழுதித்தரவும், சுவாதீனம், பாகப்பிரிவினை ஆகிய பரிகாரங்களை மனு செய்து பெறலாம் என்று கூறுகிறது. இதனடிப்படையில் நீதிமன்றம் மூலம் கிரையம் பெற்ற வாதிக்கு அதே வழக்கில் சுவாதீனப் பரிகாரம் கோர உரிமையுண்டு என்பது தெளிவாகும். இதை பரிசீலித்த பஞ்சாப் & ஹரியான உயர் நீதிமன்றம் கடந்த 22.11.2018-ல் R.P.Malhotra Vs. Subash Chandar என்ற வழக்கில். தீர்ப்பாணையில் சுவாதீனம் வழங்கப்படாவிட்டாலும் பிரிவு 28 (3) ன்படி நிறைவேற்று மனு தாக்கல் செய்து சுவாதீனம் பெறலாம் என்றும் மேற்படி பிரிவில் சொல்லப்பட்டுள்ள (அதே நீதிமன்றம்) என்ற பதம் நிறைவேற்று நீதிமன்றத்தையும் குறிக்கும் என்றும் எனவே நிறைவேற்று நீதிமன்றம் தீர்ப்பாணையில் இல்லாவிட்டாலும் சுவாதீனம் வழங்கலாம் என்றும் தீர்ப்பளிக்கிறது.

 

எனவே, 2020 (4) LW 851 ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இறுதி முடிவு சரியாக இருப்பினும் அந்த முடிவு குறித்தவகை பரிகார சட்டம் பிரிவு 22(2)-ன்படி அல்லாமல் பிரிவு 28 (3) ன்படி அமைந்திருந்தால் சரியாக அமைந்திருக்கும்.

 

....T. Senthulkumar, Advocate, Erode.

.........

Comments