Skip to main content

2. பேட்டி : அன்புராஜ்

  

நீதித்துறை என்பது சாமானியர்கள், வழக்காடிகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், குற்றவாளிகள், நீதித்துறை ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர்கள் வாழ்வில் அங்கம் வகிப்பது.  அவ்வகையில் ஒரு முன்னாள் தண்டனை கைதி அன்புராஜின் நேர்காணல் இது. இவர் வாழ்க்கை சில நம்ப இயலாத சம்பவங்கள் அடங்கியது, செறிவானது. ஆகவே இந்த நேர்காணல் சற்று நீளமானது. இது 3 பகுதிகளாக வெளிவரும். வீரப்பனுடன் இருந்த நாட்கள், குற்றம், வன அனுபவங்கள் முதல் பகுதி, சிறையிலேயே நாடக குழுவில் இணைந்து நடிகராக ஆனது, பத்திரிக்கை நடத்தியது இரண்டாவது பகுதி, நீதிமன்ற விசாரணை சிறை வாழ்க்கை மூன்றாவது பகுதி. அந்தியூர் திரு. அன்புராஜை 2018 ல் சந்தித்த போது இந்த பேட்டியின் பெரும்பகுதியை செய்துவிட்டேன், இப்போது இந்த இதழுக்காக சில கேள்விகளை சேர்த்து உள்ளேன்.

 

அன்புராஜ், தாமரைக்கரையில், ஜூன் 2022

அன்புராஜ் 1994 முதல் 1997 வரை வீரப்பனுடன் 3 ஆண்டுகள்  காட்டில் தலைமறைவாக அவர் குழுவில் இருந்துள்ளார். வீரப்பனுடன் இணைந்து 9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள் 9 மாதங்கள் தொடர்ந்து 9 பகுதிகளாக தமிழக மற்றும் கர்நாடக சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையானவர். 7ம் வகுப்பு படித்திருந்த 45 வயதுடைய அன்புராஜ் சிறையிலேயே ஒரு பட்டயப்படிப்பும் ஒரு முடிக்காத பட்டப்படிப்பும் படித்திருக்கிறார், ஒரு நாடக கலைஞராக உருவானார், சக சிறைவாசியை திருமணம் செய்துகொண்டு, தற்போது மனைவி குழந்தைகளுடன் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவருகிறார். வயதுக்கு மீறிய இளமையுடன் காணப்படும் அன்புராஜ் ஒரு வெளிப்படையான உற்சாகமான உரையாடல்காரர். தேன் வியாபாரம், கடலை எண்ணையை பிழிந்து விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்.

 

கிருஷ்ணன்

 

1. வீரப்பன் பால் ஈர்க்கப்பட்டதற்கு ஒரு சாகச உணர்வு தான் காரணமா ?

 

அல்ல, வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக எங்கள் கிராமங்களில் முகாமிடும் போலீசார் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். கிராம மக்கள் மேய்த்துக் கொண்டிருக்கும் சில ஆட்டுக்குட்டிகளையும் மாட்டு கன்றுகளையும் அராஜகமாக கவர்ந்து சென்று சமைத்து உண்டு விடுவார்கள். எங்கள் ஊர் ஆரம்பப்பள்ளி நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெளியேற்றிவிட்டு அங்கு தங்கிக் கொள்வார்கள், ஊரில் முக்கியமானவர்களை தேடிப்பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து துன்புறுத்துவார்கள், அச்சத்தை விளைவிக்க வேண்டும் என்றும் சுயமரியாதையை குன்ற செய்ய வேண்டுமென்றும் ஒரு நோக்கம் அவர்களிடம் இருந்தது. நான் ஒருமுறை எங்கள் கிராமத்தில் மிகவும் மதிக்கப்பட்ட தலைவரை பலர் முன்னிலையில் அறைந்து காலால் மிதித்து அவரை சிறுமைப்படுத்தியதை பார்த்தேன். இதுபோன்ற சம்பவங்களை பார்த்துக்கொண்டே இருந்த நான் எதிர் எல்லைக்கு செல்ல முடிவெடுத்தேன், இந்த சமயத்தில் தான் வீரப்பனை சந்தர்ப்பவசமாக காட்டில் சந்தித்ததும் ரேஷன் பொருட்களை வாங்கி கொடுத்ததும் பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகள் சென்று விட்டதும் நடந்தது.

 

அது போக நான் ஒரு இயற்கை விரும்பி, எனது பாட்டியுடன் சிறுவயதில் இருந்தே அருகில் காடுகளுக்குள் செல்வேன், பின்பு தனியாகவும். எனது பாட்டி எனக்கு மரங்களையும் பறவைகளையும் விலங்குகளையும் அறிமுகப்படுத்தினார். ஒரு உச்சிப் பாறையில் அமர்ந்து காட்டை ரசித்துக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமானது. காட்டின் வசீகரம் கூட என்னை உள் இழுத்திருக்கலாம்.

 

2. வீரப்பனுடன் இருந்த காட்டு அனுபவம் எப்படி இருந்தது ?

 

நான் இணைந்தபோது 1994இல் 18 பேர் குழுவில் இருந்தோம். சேத்துக்குளி கோவிந்தன் தான் அசலான அதிகாரம் படைத்தவர். கூர்மையான அவதானிப்புடையவர், ஆட்களை எடைபோடுவதில் வல்லவர், ஆயுதப் பயிற்சி அளிப்பவர். அவர் தான் எனக்கு சுமார் 50 பறவைகளின் சப்தங்களை எழுப்ப கற்றுக் கொடுத்தார், தற்போது சுமார் 10 நினைவில் உள்ளது.

 

வீரப்பன், காட்டில் தன் கூட்டாளிகளுடன்


ஒவ்வொருவரும் ஆயுதம் உட்பட சுமார் 40 கிலோ எடையை சுமக்க வேண்டும். நான் இருந்த சமயம் எங்களுடன் ஒரு தம்பதியும் இருந்தனர். பழங்குடிகளிடம் இருந்து சேத்துக்குளியும் வீரப்பனும் காட்டில் வேட்டையாடுவது மற்றும் எஞ்சி வாழ்வது எப்படி எனக்கற்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு 25 ஆண்டு கால அனுபவம் இருந்தது. காட்டின் பருவநிலை, புவியமைப்புகள் ஆகியவைகள் வரைபட உதவியின்றி மனப்பாடமாகவே அவர்களுக்கு தெரியும். பெரும்பாலும் ஓரிரு நாட்கள் தான் ஒரு இடத்தில் டென்ட் அமைத்து தங்குவோம், அரிதாக 15 நாட்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறோம். எனக்கு 303 மற்றும் ஏ கே 47 ஐ இயக்கத் தெரியும். சேத்துக்குளி கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து நாங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டே இருப்போம், சேத்துக் குளியின் இலக்கு தவறி இதுவரை நான் பார்த்ததில்லை.

 

வேட்டையாடுவதில் நாங்கள் பழங்குடியை விட சிறப்பாக இயங்குபவர்கள். வேட்டை நிலத்தின் காற்று வீசும் திசையே வேட்டையை தீர்மானிக்கிறது. எதிர்காற்றில் வேட்டையாட இயலாது. ஆனால் சில பகுதியில் மென்மையாக சுழலும் தன்மையுடன் காற்று வீசும் அங்கு வேட்டை சாத்தியமே இல்லை. அரிதாக பழங்குடிகள் சிலர் வேட்டையாடுவார்கள். அங்கு அதிக அளவில் பிள்ளை வகை மான்கள் காணப்படும். காற்றில் இரு அடுக்குகள் உள்ளது கீழடுக்கில் சுழலும் காற்று கீழே தான் அமைந்திருக்கும், அது மேல் அடுக்கு காற்றுடன் கலக்காது. எனவே முந்தைய நாள் இரவே நாங்கள் மர உச்சியில் பரண் அமைத்து இரவுக்காக காத்திருப்போம். காட்டில் வாசனை போக ஓசையும் அசைவுகளும் முக்கியமானது. இயற்கையற்ற அசைவுகளையும் ஓசையையும் விலங்குகள் ஒரு பார்வை வீச்சில் கண்டுவிடும். எனவே எங்கள் ஆயுதத்தின் முனையில் தேன்மெழுகை தடவி மின்மினியை பிடித்து ஒட்டி விடுவோம். திரும்பும் அசைவை கவனிக்கும் விலங்கு அது மின்மினி என ஏமாந்துவிடும், ஓடிச்செல்லாது. நாங்கள் அடித்துவிடுவோம். இந்த முறை வீரப்பனால் கண்டுபிடிக்கபட்டது. இது அப்பகுதி வாழ் பழங்குடிகளுக்குத் தெரியாது.

 

நானும் வீரப்பன் சமூகத்தை சேர்ந்த வன்னியர் என்றாலும் எனக்கு சில மருத்துவ முறைகளைக் கற்றுத்தரவே இல்லை. சேத்துக்குளி மருத்துவ தாவரங்களை சேகரித்துக் கொண்டே இருப்பார். குறுமிளகை கருங்குரங்கின் பித்தப்பையில் இட்டு நிழலில் உலர்த்தி வைத்திருப்பார், சாதாரண காய்ச்சலுக்கு ஓரிரு குறுமிளகுகளை கொடுப்பார் சில மணிகளில் வேர்த்து காய்ச்சல் அகன்றுவிடும். ஒருமுறை என்னை தேள் கொட்டி விட்டது சேத்துக்குளி காயத்தின் மீது ஒரு பச்சிலையை பிழிந்து விட்டு கரடியின் பித்தபையில் இட்டு வைத்திருந்த பச்சரிசி பருக்கைகளை உண்ண கொடுத்தார். கடிபட்ட இடத்தில் மஞ்சளாக திரவம் வெளியேறியது, ஓரிரு நிமிடங்களில் வலி அகன்று பயணத்திற்கு தயாரானேன்.

 

ஒரு முறை ஒரு மாடுமேய்க்கும் இளைஞனை பாம்பு கடித்துவிட்டது, நங்கள் அவ்வழியாக மறைவாக சென்றுகொண்டிருந்தோம். சேத்துக்குளி என்னை கூட்டிக்கொண்டு அவனருகே சென்றார், அவனின் நண்பர்கள் பதட்டத்துடன் இருந்தனர், அவன் மயங்கிக் கிடந்தான். காயத்தை பார்த்த சேத்துக் குளி பற்தடம் மேலும் கீழும் இருந்ததை கண்டு அதன் வகையை அறிந்துவிட்டார். கொத்துமல்லி போல காணப்பட்ட ஒரு தாவரத்தை அவன் வாயில் திணித்து தண்ணீர் கொடுத்தார், லேசாக மயக்கம் தெளிந்து அதை குடித்தான், மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருந்தான். பின்னர் என்னை நோக்கி இப்போது வேடிக்கையை பார் என்றார், அவன் காலில் இருந்து திரவம் முதலில் வெளியேறியது, பின்னர் மிகுதியாக ரத்தம் பீய்ச்சி அடித்தது. அவ்விளைஞன் பழைய மாதிரி எழுந்து நின்றான். எங்களிடம் விடைபெற்று தானாக நடந்து அவனது கிராமத்திற்குள் சென்றான்.

 

வீரப்பன் குழுவினர் உள் உணர்வு மிக்கவர்கள், சகுனங்களை நம்புபவர்கள். தனது குலதெய்வம் அனுதினமும் தங்களிடம் பேசுவதாகவும் நம்புகிறவர்கள். ஒரு தர்க்கவாதி ஆகிய நான் இதை ஏற்பதில்லை. தான் கண்ட கனவுகள் குறித்து சேத்துகுளியும் வீரப்பனும் நாள் முழுக்க பேசிக்கொண்டிருப்பார்கள். குழுவில் உள்ளவர்களுக்கு தங்களது கனவுகளைப் பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார்கள் நல்ல அல்லது கெட்ட அறிகுறி என கூறிக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் வியக்கத்தக்க வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தேறும்.

 



ஒரு முறை வீரப்பன் காட்டு எருதை வேட்டையாடுவதாக கனவு கண்டதாகவும் நெற்றியில் அடிபட்ட அந்த காட்டு எருது தன்னை நேராக பார்த்ததாகவும் தானும் ஒரு போதும் காட்டு எருதை சுட மாட்டேன் என்பதால் குடும்பத்துடன் திரும்பியதாகவும் பின்னர் எங்கள் கேம்பில் குண்டு பட்டு ரத்தம் ஒழுக மாதையன் முனகிக் கொண்டு இருந்ததாகவும் எப்படி இது ஆயிற்று என தான் கேட்க சுட்டுவிட்டு தெரியாதது போல் இப்படி கேட்கிறீர்களா என கேட்டதாகவும் கூறினார். இந்தக் கனவு ஒரு தீய சகுனம் என சொன்னார் பின்னர் மறுநாள் எங்களுக்கும் போலீஸாருக்கும் ஒரு நெருக்கமான மோதல் நிகழ்ந்தது மாதையனுக்கு வீரப்பனின் கனவில் வந்தது போலவே காலில் குண்டு பட்டது.

 



வீரப்பனிடம் ரேடார் போல இயங்கும் ஒரு ரேடியோ இருந்தது, நாங்கள் எங்கிருந்தாலும் 2 கிலோ மீட்டர் சுற்றுக்கு யாரேனும் வயர்லெஸ் கருவியுடன் வந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும், போலீசார் பேசுவதையும் கேட்கலாம். இன்றுவரை இது போலீசாருக்கு தெரியாது என எண்ணுகிறேன். ஆயுதங்களை காவல் நிலையத்தில் இருந்தும் போலீசாரிடம் இருந்தும் பிடுங்கிச் செல்வது தான், அதை தவிர்த்து வெளியில் கள்ளத்தனமாக எனக்குத் தெரிந்து ஆயுதங்கள் வாங்கியதில்லை. ஆனால் ரேஷன் தான் எங்களுக்கு பெரிய பாடு. ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வோம். ஒருமுறை தலையில் பட்டையாக நரைமுடியுடன் ஒரு இளைஞனை வீரப்பன் அணுகி பேச்சுக் கொடுத்தார், அவனை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவன் நம்பிக்கையானவன் எனவும் அவனிடம் ரூ 6000 கொடுத்து பொருட்களை வாங்கி வர சொல்லி சேத்துக்குளியிடம் கூறினார். சேத்துக்குளி அவனை நம்ப முடியாது எனவும் வேண்டுமானால் ரூ 2000 தருகிறேன் எனவும் அதை அனாமத்து கணக்கில் எழுதிக்கொள் எனவும் கூறி கொடுத்தார். மறுநாள் பொருட்களை பெற்றுவர குறித்த இடத்தில் அதிகாலை 3 மணிக்கே எழுந்து கிளம்பி 6 மணிக்கு சென்று மதியம் 3 வரை காத்திருந்து, பசியில் எங்கள் கேம்புக்கு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் வீரப்பனுக்கு உண்மை விளங்கியது, தகவலை வெளியிட்டு விடுவான் என அவன் குறித்து அச்சப்பட்டார். அதற்கு சேத்துக்குளி அவன் எதற்கும் லாயக்கற்றவன் ஒரு டீக்கடையை பிடித்து உட்கார்ந்து 2000 ரூபாய் தீரும்வரை அனைவருக்கும் செலவு செய்வான் எனக் கூறினார். பின்னர் சுமார் 6 மாதம் கழித்து அதே கிராமத்தை சேர்ந்த ஒருவனை சந்தித்தோம், அடையாளம் சொல்லி வெள்ளை நரைமுடிக்காரனை பற்றி கேட்டேன். அவன் 2 மாதங்களாக எவ்வித வேலைக்கும் செல்லாமல் ஒரு டீ கடையில் போவோர் வருவோருக்கு செலவுசெய்துகொண்டிருந்தான் என்றார்.

 

1996-இல் நாங்கள் கர்நாடகாவில் உள்ள எல்லா வழக்குகளையும் தமிழ் நாட்டுக்கு மாற்றும் பட்சத்திலும் 10 ஆண்டுகளில் விடுவிப்போம் என்கிற உறுதியை அளிக்கும் பட்சத்திலும் சரண் அடைகிறோம் என கலைஞருக்கு நக்கீரன் கோபால் மூலமாக வேண்டுகோள் விடுத்தோம். கலைஞர் ஒரு மேம்போக்கான உறுதியை ஒரு கேசட்டில் பதிவுசெய்து அனுப்பினார். கூடவே ரஜினியும் ஒரு கேசட் அனுப்பி இருந்தார் அதில் தான் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவதாகவும், ஆட்சியை பிடிக்கும் சாத்தியம் உண்டு எனவும் அப்போது சரண் அடைந்தால் இக்கோரிக்கையை ஏற்பேன் எனவும் கூறி இருந்தார். வீரப்பன் கொடுங்குற்ற வழக்குகள் இல்லாத 3 பேரை தேர்வு செய்தார் அப்படி சரண் அடைந்தோம். பின்னர் அரசு எந்த வாக்குறுதியையும் பேணவில்லை.

வீரப்பன் தன் கூட்டாளிகளுடன், வலதுபக்க வட்டத்திலிருப்பவர் அன்புராஜ்

 

ஒரு ஆபரேஷனில் சுமார் 10 வயது சிறுவனை வீரப்பன் கொன்றது எனக்கு மறுநாள் தெரியவந்தது. நான் அவரை கடுமையாக ஏசிவிட்டேன், பின்னர் சுமார் 3,4 நாட்கள் அவருடன் பேசவில்லை. பின்னர் சமாதானமடைதோம், ஆனால் அவருடன் தொடர்ந்து இருந்தது ஏன் என என்னால் கூற இயலவில்லை, அவர் எங்களது பாதுகாவலர் என்பது காரணமாக இருக்கலாம். பின்னர் அரசு அதிகாரி ஸ்ரீநிவாசன் கடத்தி கொல்லப் பட்டதும் என்னால் ஏற்க இயலவில்லை.

 

 

3. நீங்கள் வீரப்பனுடன் சென்றது உங்கள் தாய் தந்தையருக்கு எப்போது தெரியும், உங்கள் தம்பி , தங்கை இது குறித்து என்ன நினைத்தார்கள், பின்னர் உங்கள் குடும்பம் உங்களை காத்ததா?

 

முன்பே வீரப்பனுடன் தொடர்பில் இருந்தது அவர்களுக்கு தெரியாது. நான் என் வயதொத்த எனது சித்தப்பா பெரியப்பா மகன்கள் இருவருடன் சென்று சேர்ந்துவிட்டேன். அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த டபுள் மைன்ட் கோபால் என்பவன் வழியில் பார்த்துவிட்டான், அவன் மிகுதியாக மது அருந்தி நடந்தது மற்றும் நடக்காதது ஆகியவற்றை ஊரில் உளறிக்கொண்டு திரிபவன். வீரப்பன் அவனை அழைத்து மிரட்டி ரூ 500 அளித்து வெளியே சொன்னால் அவ்வளவுதான் என அனுப்பி வைத்தார். இது 6 மாதங்களுக்கு யாருக்கும் தெரியாது. எங்கள் பெற்றோர்கள் அந்தியூர் காவல்நிலையத்தில் ஆள் காணவில்லை என வழக்கு ஒன்றை கொடுத்து அது பதியப்பட்டது. பின்னர் போலீசாரும் நாங்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை என்கிற கருத்தை எங்கள் குடும்பத்திற்கு தெரிவித்துவிட்டனர். எனது பெரியப்பா மகனுக்கு காரியம் செய்துவிட்டார். வேறொரு தகராறில் தற்செயலாக டபுள் மைன்ட் கோபால் போலீசாரால் கைதுசெய்யப்பட்டான், இத்தகவலை தான் அறிந்து வைத்திருந்ததால் தான் கைது செய்யப்பட்டான் என எண்ணிய அவன் இந்த தகவலை போலீசாரிடம் சொல்லிவிட்டான். அவ்வாறு தான் 6 மாதங்களுக்கு பின் போலீசாருக்கு அது தெரியும். எனது குடும்பத்திற்கு நான் உயிருடன் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் வீரப்பனுடன் சேர்ந்த மனச்சோர்வு ஒருபுறம் ஒரேசமயத்தில். பின்னர் போலீசார் எனது தந்தையை கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்து பலநாட்கள் துன்புறுத்தினார்கள், உடனே எனது பெற்றோர் எனது தங்கைக்கு திருமணம் செய்து அருகில் உள்ள ஊருக்கு அனுப்பிவிட்டனர், எனது தம்பியும் தாயும் இன்னலுக்கு ஆளானார்கள். ஆனால் விரைவில் நான் வீரப்பனுடன் சென்றதற்கு எனது குடும்பத்திற்கும் தொடர்பில்லை என அறிந்துகொண்ட போலீசார் எனது குடும்பத்தை விட்டுவிட்டனர். பின் எனது தம்பிக்கு ராணுவத்தில் வேலைகிடைத்தது, எனக்கு வீரப்பனுடன் ஆன தொடர்பால் அவனுக்கு அவ்வேலை மறுக்கப்பட்டது.

 

நான் சரணடைந்து நீதிமன்றத்திற்கு காவல் நீட்டிப்புக்காக வரும் ஒவ்வொரு நாளும் எனது பெற்றோர் என்னை பார்க்க வருவார்கள், அடிக்கடி சிறையிலும் என்னைப் பார்ப்பார்கள். எனது தம்பிக்கும் தங்கைக்கும் கூட என் மீது அவ்வளவாக சினமில்லை. பின்னர் கர்நாடக சிறைக்கு மாற்றப்பட்டவுடன் சிரமம் எடுத்து என்னை காண வரவேண்டாம் என நான் கூறிவிட்டேன், அவ்வப்போது தான் அங்கு வருவார்கள். அன்று முதல் இன்று வரை என்னை எனது குடும்பம் கைவிடவே இல்லை. நான் இன்று இப்படி இருப்பதற்கு எனது குடும்பத்தின் அறுபடாத தொடர்பே காரணம்.

 

4. வீரப்பன் இதுவரை எத்தனை பேரை கொன்றிருப்பார் என கருதுகிறீர்கள்?

 

30 ஆண்டுகளில் சுமார் 70 கும் மேல் இருக்கும்.

 

5. வீரப்பன் ஒரு நல்ல மனிதன் என்று சொல்ல முடியுமா?

 

நிச்சயமாக. இந்த சமூக சராசரி அளவுகோலின்படியும் நமது போலீசாருடன் ஒப்புநோக்குகையிலும் வீரப்பன் ஒரு நல்ல மனிதன் தான்.

 

6. வீரப்பன் நினைவிடம் கோரிக்கைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?

 

நான் வீரப்பன் ஒரு தொன்மம் ஆக்கப்படுவதை ஏற்கவில்லை, அது வீரப்பன் போன்ற ஆட்கள் உருவாகும் சூழலை மறக்கடித்துவிடும். போகவே அரசியல் தலைவர்களால் அவர் ஒரு தமிழ் தேசிய போராளியாக நிலை நிறுவப்படுவதையம் நான் ஏற்கவில்லை. அவருக்கு அவ்வாறான எண்ணமோ புரிதலோ இருந்ததில்லை.

 

7. சந்தனக்கட்டை வெட்டுதல், யானைகளை தந்தத்திற்காக கொல்வது ஆகியவை குறித்து ?

 

தனது ஆயுளில் மொத்தமாக சுமார் 15 லோடுகள் தான் வீரப்பன் சந்தன விற்பனை செய்திருப்பார், கீழிருந்து வரும் வனக்கொள்ளையர்கள் தான் அதிகமாக சந்தனமரத்தை வெட்டுவார்கள். அவர்கள் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யானைகளை அதிகம் கொல்வார்கள். வீரப்பனும் மிகுதியாக யானைகளை கொன்றிருப்பார், நான் இணைந்த சமயத்தில் அதையும் நிறுத்திக் கொண்டார். பழங்குடிகள் இதில் வீரப்பனுக்கோ அல்லது வெளியாட்களுக்கோ உதவுவதில்லை

 

 

8. தற்போது வீரப்பனின் இறப்புக்குப்பின் வனவிலங்குகளின் குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளதே ?

 

ஆம். ஆனால் இதற்கு வீரப்பனின் இறப்புமட்டுமே காரணமல்ல. குறிப்பாக கர்நாடகத்தில் இன்றும் சட்டபூர்வமாக தந்த அலங்காரப் பொருட்கள் விற்கப்படுகிறது, அங்கு அது போக இறந்த அரியவகை பறவைகளையும் ஏலத்தில் எடுத்து stuff செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். கேரளத்தில் சந்தன கலைப்பொருட்கள் சட்டபூர்வமாக விற்கப்படுகிறது. இந்த வியாபாரம் முதலில் மிகுதியாக நடந்துகொண்டிருந்தது இப்போது இது குறைவாக நடக்கிறது, இதுவும் காரணமாக இருக்கலாம்.

......

(தொடரும்)

Comments