ஈரோடு சின்னியம் பாளையத்தில் 1969 ஆம் ஆண்டு துளசிமணி செல்லம்மாள் தம்பதிக்கு
மகனாக பிறந்த T. செந்தில் குமார், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளங்கலை தாவரவியல்
படிப்பும் , பெங்களூரு BMS சட்டக்
கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்து 1992 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். 13 ஆண்டுகள் மறைந்த திரு சுந்தரம் அவர்களிடம்
இளநிலை வழக்கறிஞர் ஆக பணியாற்றி தற்போது ஈரோட்டில் மனைவி 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் . இவர் தலைமுறை வழக்கறிஞரிடையே குறிப்பிடத் தக்கவர், உரிமையியல்
துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரை ஈரோட்டில் அவர் அலுவலகத்தில் செய்த
நேர்காணல் இது.
....A.S. Krishnan, Advocate, Erode
...................
1. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை
மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ?
நான் இளநிலை வழக்கறிஞராக சேர இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஒன்று திரு
A.C. முத்துசாமி அலுவலகம், இன்னொன்று திரு சுந்தரம். திரு A.C. முத்துசாமி அலுவலகம் நவீனமானது.
திரு சுந்தரம் அலுவலகம் பாரம்பரியம் மிக்கது, நான் பாரம்பரியத்தை தேர்வு செய்தேன். முன் தீர்ப்புகளை படித்து
அதற்கு ஏற்றார் போல வழக்குரை ஏதிர்உரை ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன்,
இது முக்கியமானது. முதல் மூன்று ஆண்டுகளிலேயே ஒரு கட்சிக்காரரை எதிர்கொள்வது எப்படி என கற்பது அதே அளவு முக்கியம்
என கற்றுக் கொண்டேன். ஆங்கில நாவல்களை படித்து புதிய சொற்களுக்கு அர்த்தம் கற்றுக் கொண்டேன்.
வட்டார வழக்கு போல ஊருக்கு ஊர் வழக்குரை மாறும் என கற்றுக் கொண்டேன். நம் ஈரோட்டு வழக்கெழுத்து வேறு கோவை,
மதுரை, கரூர் வழக்கெழுத்து வேறு.
2. மூத்தவர்கள் இளையவர்களுக்கு கற்றுத் தருவது இல்லை என்கிற கருத்தில்
உண்மை உண்டா ?
இதில் உண்மை இல்லை, கற்றுக் கொள்பவர் தான் அறிய முன்வர வேண்டும். அப்படி
ஆர்வத்துடன் முன்வரும் இளையோருக்கு மூத்தோர் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். மேலும்
ஒருவர் கற்றுத் தரவில்லை என்றால் இன்னொருவர் இதைச் செய்வார், ஆகவே இந்த "கற்றுக் கொடுப்பது இல்லை" என்கிற கூற்றில்
சிறிதும் உண்மை இல்லை.
3. இப்போது 5 ஆண்டுகளுக்கு கீழ் அனுபவம் உள்ள வழக்கறிஞர்களின் குறைபாடுகள்
என நீங்கள் எண்ணுவது என்ன ? அவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் என்ன ?
தங்கள் வழக்கு ஆவணங்களை கூட முழுமையாக படிப்பது இல்லை, தமிழ் மொழித்
திறன் இல்லை தப்பும் தவறுமாக எழுதுகிறார்கள். ஐந்து ஆண்டுகள் வருவாய் கருதாது ஒரு மூத்தவரிடம்
பணியாற்றுதல் இன்றியமையாதது, ஆனால் இந்த பொறுமை அவர்களுக்கு இல்லை. உடனே வருவாய் ஈட்ட
வேண்டும் என எண்ணுகிறார்கள், இது தவறு . இது போட்டி மிக்க தொழில் ஒன்று எதிர் தரப்பை
சமாளிக்க வேண்டும் மற்றது நீதிபதியை சமாளிக்க வேண்டும் ஆகவே சட்டம் கற்றுக் கொள்ளுதல்
இன்றியமையாதது. உள்ளே ஒரு கனல் இருந்தால் ஒழிய உங்களால் போராட இயலாது, இதை அணையாமல் வைத்துக் கொள்ள
வேண்டும்.
4. கடந்த 10 ஆண்டுகளில் நமது வழக்கறிஞர் துறை அடைந்திருக்கும் மாற்றம்
என எதை நினைக்கிறீர்கள் ? இந்த மாற்றத்திற்கு நாம் எவ்வாறு தயாராக வேண்டும் ?
வழக்கறிஞர் நீதிபதி இடையே இருக்கும் சகஜ நட்பு மங்கிவிட்டது. முன்பு
உங்கள் சொந்த பந்தம் வழி கட்சிக்காரர்கள் வருவார்கள், இப்போது கட்சிக்காரர் கல்வி பெற்றுவிட்டார்,
விசாரித்து உகந்த வழக்கறிஞரை தேடிச் செல்கிறார். இப்போது இணையம் வழி தீர்ப்புகளை படிப்பது
தேடுவது எளிது. ஆகவே தீர்ப்புகளை குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளும் காலம் முடிந்து
விட்டது. தேவையான அம்சத்தில் தேவையான தீர்ப்புகளை எளிதில் பெறலாம். தீர்ப்புகள் தேடும்
பரப்பு குறைந்து விட்டது, இது இக்காலத்து சாதக அம்சம் ஆகும்.
,
5. வழக்குரை, எதிருரை வரைவு செய்தல் (draft), குறுக்கு விசாரணை, இறுதி
வாதம் இவற்றில் அடிப்படை கல்வி (basics) எது என்பது பற்றி கூற முடியுமா ?
என் உரிமையியல் வழக்கு அனுபவத்தில் :
வழக்குரை சீரான வடிவத்தில் வேண்டும். தெளிவுடன் வழக்கு பிரச்சனை ஒன்றன்
பின் ஒன்றாக இருக்குமாறு வழக்குரை எழுத வேண்டும், அதே போல எதிர் உரை. வழக்கெழு வினாக்களை
(issues) சரியாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கிய எழு வினாக்களை நீதிமன்றம்
அமைத்துக் கொள்ள மனுச் செய்து கொள்ள வேண்டும். ஒரு உரிமையியல் வழக்கில் இந்த எழு வினாக்கள்
தான் மிக மிக முக்கியம் என எண்ணுகிறேன்.
குறுக்கு விசாரணை செய்யும்போது அதை சில பகுப்புகளாக பிரித்துக் கொண்டு
ஒவ்வொன்றாக கேட்க வேண்டும். சாட்சியிடம் நீங்கள் தொடுக்கும் கேள்விகள் நேரடியாக அமையக்
கூடாது, ஒரு சதுரங்க ஆட்டத்தில் ராஜா தப்பும் அனைத்து வாசல்களையும் அடைத்து விட்டு
"செக்" வைப்பது போல துணை கேள்விகளை தொடுத்து இறுதியான அந்த முக்கிய கேள்வியை
தொடுக்க வேண்டும். ராஜா வீழ்ந்து விடுவார்.
இறுதி வாதத்தை பொறுத்த வரை முதலில் உங்கள் துணை தலைப்புகளை
(synopsis) சுருக்கமாக கூறிவிட்டு பின் ஒன்றன்பின் ஒன்றாக விளக்க வேண்டும்.
6. ஒரு வழக்குக்கு தயாராதல் (வழக்குரை, எதிருரை) எப்படி என கூற இயலுமா
?
முதலாவது அசல் ஆவணங்களை அதன் அனைத்து வரிகளை முழுமையாக படித்தல். சில
வழக்குகளை வழக்குரை எழுத காலம் பிடிக்கும், அதற்கு உரிய காலத்தை அளிக்க வேண்டும். உதாரணமாக இப்போது மூன்று மாதங்களாக
ஒரு சிக்கலான வழக்கை எழுதிக் கொண்டு இருக்கிறேன். சில சமயம் எழுதி அச்சிட்டுவிட்டு
மறுபடி வாசிக்கும்போது திருத்தம் தேவைப்படும், அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
7. உங்கள் நோக்கில் வழக்குரை கலை (Art of advocacy) என்றால் என்ன என்று கூற
இயலுமா ?
நினைவாற்றல் அவ்வளவு முக்கியமில்லை என உணர வேண்டும். அதாவது தேவையான
அம்சத்திற்கு முன் தீர்ப்பு அல்லது சட்டப் பிரிவு உள்ளது என நினைவில் இருந்தால் போதும்.
அது எந்த பக்கம், எந்த பிரிவு என துல்லியமாக தெரிய வேண்டியது இல்லை. ஆகவே வாதிடும்
பொது தடுமாறாமல் இருக்கும் அளவுக்கு
முக்கிய அம்சங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வரிசையிடுதல் தான்.
8. ஒரு வழக்கறிஞர் சட்டம் தவிர்த்து எதைப் பற்றி எல்லாம் வாசிக்க வேண்டும்
என நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பி வாசித்த சில புத்தகங்கள் யாவை ?
நான் Grisham, Chase, Sydney Sheldon நாவல்களை புதிய புதிய ஆங்கில பிரயோகத்திற்காக
வாசிக்கிறேன். "May I please to" என்கிற பதத்தை Grisham நாவலில் தான் கற்றுக்
கொண்டேன். கல்கி, சாண்டில்யன் எழுதியவற்றை அனைத்தையும் படித்துளளேன். கல்லூரி காலத்தில்
என் பெயர் சாண்டில்ய செந்தில். வாசிப்பு மிகவும் அவசியம் என எண்ணுகிறேன்.
9. பொதுவாக ஒரு வழக்கறிஞரின் சட்ட அறிவுக்கும் தீர்ப்புகள் வாசிப்பிற்கும்
அவரது தொழில் வெற்றிக்கும் தொடர்பில்லை, அவருக்கு வழக்குகள் தேடி வருவது பிரபல்யத்தின்
அடிப்படையில் தான் என்கிற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
இதில் உண்மை இல்லை. உங்கள் சட்ட அறிவுக்கும் தொழில் திறனுக்கும் தான்
கட்சிக்காரர் வருகிறார். மற்றபடி வெற்றியடைந்த வழக்கறிஞர் மிக சொற்பம்.
10. ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் உரிமையற்றவர்/ குற்றவாளி என அறியும்
போது மேற்கொண்டு வழக்கை தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா ? ஆஜராவதற்கு முன்பே தனது
கட்சிக்காரர் உரிமையுடையவர்/குற்றமற்றவர் என உறுதி செய்துகொள்ள வேண்டுமா ?
தொழில் தர்மமே பெரிது. மேலும் முடிவெடுக்க நீங்கள் நீதிபதி அல்ல. எதன்
பொருட்டும் ஒரு கட்சிக்காராரை ஒரு வழக்கறிஞர் மறுப்பது சரியல்ல என நினைக்கிறேன்.
11. வழக்குகள் தேங்குவது பற்றி உங்கள் கருத்து என்ன ? இப்போது தேவைப்படும்
சட்டத் திருத்தம் என்ன என நீங்கள்
கருதுகிறீர்கள் ? அதாவது எந்த சட்டத்தில் என்ன திருத்தத்தை பரிந்துரைப்பீர்கள் ?
வழக்கு விசாரணைக்கு முன் ஒரு வழக்கை திறந்த நீதிமன்றத்தில் அழைத்து
விசாரிப்பது பெரிய அளவில் நேரத்தை வீணடிப்பது ஆகும். ஒரு வழக்கின் முதல் வாய்தாவே விசாரணை
தான் என திருத்த வேண்டும். அதுவரை ஆன நடவடிக்கைகளை நீதிமன்ற அலுவலகமே செய்து விடலாம்.
எதிர் உரை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற வரம்பு ஏட்டளவில் மட்டுமே
உள்ளது, இதை கடுமையாக்க வேண்டும். மேலும் ஒரு வழக்கு தாமதம் ஆக நில அளவையாளர் எடுக்கும்
காலம் அதிகம், ஆகவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நீதித்துறைக்கு என்றே ஒரு நில அளவையாளரை
நியமிக்க வேண்டும். ஒரு வழக்கு முடிந்தபின் தீர்ப்பை நிறைவேற்ற காலம் பிடிக்கிறது,
முக்கிய காரணம் பிரதிவாதிக்கு மீண்டும் அழைப்பாணை என்கிற நடைமுறை . ஆகவே திர்ப்புக்கு
பிறகு ஒரு வழக்கை முடித்துவிடக் கூடாது, வாதிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வழங்கி அப்போதே
நிறைவேற்று மனு தாக்கல் செய்யும் வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு வழக்கில் முதல்நிலை தீர்ப்பு (preliminary decree) அளித்தவுடன்
இறுதி நிலை தீர்ப்புக்கு (final decree) மீண்டும் மனுச் செய்து அந்த விசாரணை முடிய
மேலும் காலம் தாழ்கிறது. இது தேவையற்றது. உரிய திருத்தம் கொண்டுவந்து முதல் நிலை தீர்ப்பு
வந்தவுடனேயே அடுத்த நிகழ்வு இறுதி நிலை தீர்ப்பு என மாற்ற வேண்டும்.
அதுபோல மேல்முறையீட்டை அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வகையில் மாற்றம்
வேண்டும், இதை பெற்று அந்த நீதிமன்றம் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி விடலாம்
பிரதிவாதிக்கு புதிய அழைப்பாணை தேவை இல்லை. உரிமையியல் நடைமுறை சட்டத்தில் இந்த திருத்தங்களை
கொண்டு வரலாம்.
12. நீதித்துறை ஊழல் என்பது நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்
ஆகியோர் தொடர்புடையது, கடந்த பத்து ஆண்டுகளில் இது குறைந்துள்ளதா ?
முன்பு இருந்தது போல அல்ல இப்போது. இப்போதுள்ள புதிய தலைமுறை நீதிபதிகள்
ஒப்புநோக்க நேர்மையானவர்கள். அவர்களுக்கு ஊதியமும் அதிகம். மேலும் நீதித்துறை பயிற்சி அமைப்பும் மேம்பட்டு உள்ளது, அங்கு ஊழலுக்கு
எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்பு அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது, இதெல்லாம் முன்பு கிடையாது.
ஆனால் உள்ள ஊழலலில் பெரும்பகுதி வழக்கறிஞர் மூலமாகவும் சிறு பகுதி நீதித்துறை ஊழியர் மூலமாகவும் நடக்கிறது. இருந்தும் ஊசி இடம் கொடுப்பதால்
தான் நூல் நுழைகிறது என்பேன்.
13. உங்கள் நாள் எப்போது துவங்கும், உங்கள் நாள் நிரல் என்ன ?
நான் அதிகாலை சுமார் 3 மணிக்கு எழுத்து விடுவேன், 5 மணிவரை படிப்பேன்
வழக்கு எழுதுவேன், பின்னர் தினமும் சுமார் ஒரு மணிநேரம் சைக்கிள் பயிற்சி, எனக்கு
குழுவெல்லாம் இல்லை. பின்னர் மீண்டும் அலுவலகம் நீதிமன்றம். இரவு 10 மணிக்கு உறங்கச்
செல்கிறேன்.
14. இறுதி கேள்வி, நீங்கள் மாவட்ட நீதிபதி பதவியை மறுத்ததற்கு என்ன காரணம் ?
என் 45 ஆவது வயதில் இந்த வாய்ப்பு வந்தது. சாதாரணமாகத் தான் விண்ணப்பம்
அளித்தேன் ஆனால் எழுதித் தேர்வானேன், பின்னர் நேர்காணலில் தேர்வானேன். ஆனால் என்னால்
ஒரு வழக்கறிஞர் என்கிற அடையாளத்தை, இந்த சுதந்திரத்தை துறக்க இயலவில்லை. ஆகவே தவிர்த்து
விட்டேன். எனது 40 வயதுக்கு முன் இது நிகழ்ந்து இருந்தது என்றால் என் முடிவு மாறி இருக்கும்.
இதனால் என் நண்பர்கள் மத்தியிலும் நீதிபதிகள் மத்தியிலும் எனக்கு நல்ல பெயர் தான்.
சார்
ReplyDeleteநல்ல கருத்துக்களா சொல்றிங்க
ஆனால்..
அந்த 3 மணிக்கு தூக்கத்திலிருந்து...........?
அருமை சீனியர். நந்தகுமார், பவானி.
ReplyDeleteஉங்களை படிக்க வேண்டும்
ReplyDeleteஅருமையான நேர்காணல். இளைய தலைமுறை வழக்குரைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள கருத்துக்கள். வாழ்த்துக்கள் செந்தில்...
ReplyDeleteநல்ல தமிழ் நடை
ReplyDeleteஆற்றொழுக்கான
அனுபவ பகிர்வு.
Congrats
ReplyDeleteExcellent interview Senthil. As your relative and senior in St. Joseph's College Trichy I am very proud of your achievements. May God bless you with all good things in life.
ReplyDeleteExcellent views mama. Indeed all you have said are to be followed in principle by the junior members of the Bar.
ReplyDeleteசாமானியருடன் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையான நடையில் கேள்வியும் பதிலும் அருமை
ReplyDeleteஇவன் வாதாடிய அனைத்து கேஸ்கள் மற்றும் ஜாஜ்மென்டுகள் பொய் புகாரில் உள்ளன .இவனை கானவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
ReplyDelete
ReplyDeleteஎன் 45 ஆவது வயதில் இந்த வாய்ப்பு வந்தது. சாதாரணமாகத் தான் விண்ணப்பம் அளித்தேன் ஆனால் எழுதித் தேர்வானேன், பின்னர் நேர்காணலில் தேர்வானேன். ஆனால் என்னால் ஒரு வழக்கறிஞர் என்கிற அடையாளத்தை, இந்த சுதந்திரத்தை துறக்க இயலவில்லை. ஆகவே தவிர்த்து விட்டேன். எனது 40 வயதுக்கு முன் இது நிகழ்ந்து இருந்தது என்றால் என் முடிவு மாறி இருக்கும். இதனால் என் நண்பர்கள் மத்தியிலும் நீதிபதிகள் மத்தியிலும் எனக்கு நல்ல பெயர் தான்.
"இந்த மாதிரி கமெண்ட் செய்து மக்களை ஏமாற்றுவது