Skip to main content

2. பேட்டி - பார்பரா லிடியா

  

1959  ஆண்டு ஈரோட்டில் கொர்நெலியஸ் ஆலிஸ் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் திருமதி பார்பரா லிடியா. ஈரோடு வேளாளர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்து 1983 இல் கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்தார். அதன் பின் 1998 வரை மூத்த வழக்கறிஞர் திரு. ஏ சி முத்துசாமியிடம்  இளநிலை வழக்கறிஞராக இருந்து தற்போது ஈரோட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். சுமார் 40 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்ட அவரை ஈரோட்டில் அவர் அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது.

 

....A.S. Krishnan, advocate, Erode.

 

 

1. இந்த வழக்கறிஞர் தொழிலை ஆண்கள் செய்வதற்கும் பெண்கள் செய்வதற்கும் என்ன வேறுபாடு ?

 

இந்த தொழில் இப்போதும் ஆண் மைய (male oriented) தொழில் தான், பெரும் பகுதியினர் ஆண்கள். ஒரு மூத்த வழக்கறிஞரிடம் பணியாற்றும் போது இளநிலை வழக்கறிஞர்களில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வாய்ப்பு பெறுவது இல்லை.  இதற்கு ஆண்களால் சுதந்திரமாக பல இடங்களுக்கு சென்று வர இயலும், இரவு நேரம் வரை அலுவலில் இருக்க இயலும் போன்ற காரணிகள் உண்டு. ஆக ஒப்புநோக்க பெண்கள் தொழிலாற்றுவது சற்று கடினம்.

 

 

2. பெண்கள் சந்திக்கும் தனி இடர் என்ன ?

 

 ஒரு கட்சிக்காரர் தன் வழக்கறிஞர் ஒரு ஊரில் நிலையாக நீடித்து தன் வழக்கை பார்க்க வேண்டும் என விரும்புகிறார். திருமணத்திற்கு பின் இடப்பெயர்வு என்பது ஒரு தடை தான். அது போல பேறு காலம், பெண்கள் ஓராண்டுக்கு மேல் தொழிலை விட்டு விலக வேண்டி இருக்கும். இவை இரண்டும் பெண்களுக்கு மட்டுமான தனி இடர்பாடுகள்.

 

எனக்கு திருமணம் ஆகும் போது 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தது. கணவர் சென்னையை சேர்ந்தவர். ஈரோட்டிில் காலூன்றி விட்டதால் நான் சென்னைக்கு செல்ல மாட்டேன் என கூறி விட்டேன். அங்கு சென்றால் நான் முதலில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் இப்படி முடிவெடுக்கும் உரிமை இன்றுகூட பெண்களுக்கு அரிது.

 

 

3. ஒரு பெண் வழக்கறிஞரின் சாதக அம்சம் என்பது என்ன ?

 

இப்போது ஒட்டு மொத்தமாகவே வழக்கறிஞர் தொழில் ஒரு போக்கு மாற்றத்தில் (transitional period) உள்ளது. கணக்கு வழக்கு வழக்குகள், வாடகைதாரர் வழக்குகள் போன்றவை குறைந்து வருகிறது. ஒப்பந்த வழக்குகள், காப்புரிமை வழக்குகள் கூடி வருகிறது, இது ஒரு அறிகுறி.

 

அதே சமயம் பெண்களுக்கு  33% இட ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய சாதக அம்சம். பணி அனுபவ காலத் தகுதி நீக்கப்பட்டதால் நீதிபதி தேர்வில் எளிதில் வெல்லும் வாய்ப்பு உண்டு, அரசு வழக்கறிஞர் பதவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோக சமரச தீர்ப்பாயத்தில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.  ஆகவே இப்போது சட்டக் கல்லூரிகளில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை முந்துகிறது, எதிர் காலத்தில் இந்த தொழிலில் பெரும்பான்மையினர் பெண்களாக இருப்பர். இதுவும் போக்கு மாற்றத்தின் (transitional period) அறிகுறி ஆகும்.

 


4. ஒரு கட்சிக்காரர் ஒரு பெண் வழக்கறிஞரை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டுகிறாரா ?

 

ஆம், எளிதில் ஒரு பெண்ணை நம்புவது இல்லை. ஒப்பீட்டு அளவில் ஒரு ஆண் இந்த நம்பகத் தன்மையை விரைவில் ஈட்டி விடுகிறார். மேலும் ஒரு கட்சிக்காரர் தன் சமூகம், தன் ஊர் என வழக்கறிஞரை தேர்வு செய்கிறார் அப்போதும் ஒரு ஆணையே தேர்வு செய்கிறார். இந்த எல்லையை தாண்டும் கட்சிக்காரர் கூட ஆண் வழக்கறிஞர் என்கிற எல்லையை தாண்டுவதில்லை. ஆண்களை போல பெண்களால் கட்சிக்காரருடன் சகஜமாக பழக முடியாது, தன் வழக்கை ஒரு பெண் வழக்கறிஞரிடம் ஒப்படைத்தால் அவர் விரவில் திருமணம் ஆகி வேறு ஊருக்கு சென்றுவிடுவார் என்கிற அச்சம் ஒரு கட்சிக்காரருக்கு உள்ளது. ஒரு ஆண் மீது வைக்கப்படும் எதிர்மறை பிரச்சாரம் அல்லது அவதூறை விட பெண் மீது என்றால் அதை ஒரு கட்சிக்காரர் எளிதில் நம்பி விடுவார். ஆக சுயமாக தொழில் புரியும் பெண்களுக்கு வாய்ப்பு மிக குறைவு தான்.

 

 

5. ஒரு பெண் வழக்கறிஞர் நம் சங்கத்தில், பார் கவுன்சில் தேர்தலில் பொறுப்புக்கு வருதலில் சந்திக்கும் தடைகள் என்ன ?

 

சங்கத்தில் எங்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் வாய்ப்பும் குறைவு. பெண்களும் வழக்கறிஞர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவது இல்லை. ஆனால் அதிகரித்து வரும் பெண்களின் எண்ணிக்கை இதை மாற்றிவிடும். எதிர் காலத்தில் பெண்களுக்கு என தனி வழக்கறிஞர் சங்கம் தோன்றும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது,

 

பார் கவுன்சில் தேர்தல் நாங்கள் போட்டி இடுவது கடிது, உங்களுக்கு பரவலான அறிமுகம் வேண்டும், பின்புலம் வேண்டும், பணபலம் வேண்டும், ஆண்களுக்கு இணையாக பிற ஊர்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யதல் என்பது பெண்களால் சாதாரணமாக இயல்வது அல்ல. ஆக பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி என்பது ஒரு தொலைதூர இலக்கு தான். ஒரு மாவட்டம் ஒட்டுமொத்தமாக ஒருமித்து ஒரு பெண்ணை நிறுத்தினால் இது சாத்தியம்.

 

 

6. சட்டத்தை தொடர்ச்சியாக படித்து வழக்கு நடத்தும் ஆண் வழக்கறிஞரை ஒப்பிடும் போது பெண் வழக்கறிஞரின் செயல்பாடு எவ்வாறு உள்ளது, அவர்களது குறைபாடுகள் என்ன ?

 

ஒரு தொழில் புரியும் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற உள்ளார்ந்த வேகம்  பெண்களிடம் குறைவு, இவர்கள் இலக்கற்று உள்ளது போல தோன்றுகிறது. இவர்களின் பிரதான நோக்கம் நீதித்துறை பணி அல்லது காப்பீடு வழக்கு, குடும்ப வழக்கு போன்ற சவாலற்ற சிறு வழக்குகள் தான். மேலும் நீதிமன்றத்தில் துணிவுடன் வழக்காடும் குணமும் வழக்கறிஞர் என்கிற நிமிர்வும் இவர்களிடம் இல்லை. இவர்களின் உடை தேர்விலும் போதாமைகள் உள்ளன, சீருடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அடிப்படைகளை கற்றுக் கொள்வதில்லை, போதிய அளவு படிப்பதில்லை.

 

மூத்தவரை சரியாக தேர்வு செய்வது இல்லை. அவரின் மூதவருக்கே ஒரு சில ஆண்டு அனுபவம் தான் உள்ளது, ஆகவே நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்பிக்க ஆள் இல்லை. நீதிமன்றத்தினுள் முன் அரங்கில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள், தங்கள் வழக்கு முடிந்தவுடன் கிளம்பி விடுகிறார்கள். ஒரு குமாஸ்தா போல தான் தோற்றம் அளிக்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள்.

 

7. உங்கள் முதல் 3 ஆண்டுகள் இளநிலை வழக்கறிஞராக இருந்தபோது உங்களை எவ்வாறு தயாரித்துக் கொண்டீர்கள் ?

 

எனது மூத்தவரை நிழல் போல பின் தொடர்ந்தேன். அவர் கட்சிக்காரருடன் பேசும் போது அருகே அமர்ந்து கவனிப்பேன். ஒரு வழக்கை அவர் தயார் செய்யும் போது ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து குறித்து வைத்துக் கொள்வேன் பின்னர் அந்த வழக்கு தாக்கல் செய்து விசாரித்து முடியும் வரை அனைத்தையும் கவனிப்பேன். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஒரு எதிர் உரை எழுதினேன், அதைப் படித்துப் பார்த்த பின் இப்போது உன்னை வழக்கறிஞர் என்கிற சொல்லால் அழைக்கலாம் என என் மூத்தவர் கூறினார், அந்த தருணத்தை இப்போதும் நான் மறக்கவில்லை. 

 

 

8. ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் உரிமையற்றவர்/ குற்றவாளி என அறியும் போது மேற்கொண்டு வழக்கை தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா ? ஆஜராவதற்கு முன்பே தனது கட்சிக்காரர் உரிமையுடையவர்/குற்றமற்றவர் என உறுதி செய்துகொள்ள வேண்டுமா ?

 

ஒரு தவறான ஆவணத்தின் அடிப்படையில் தொடுக்கும் வழக்கை நடத்த இயல்பில் நமக்கு ஒரு ஆர்வம் உண்டு, சுவாரஸ்யம் காரணமாக இதை ஏற்கிறோம். ஆனால் இத்தகைய வழக்கில்.வெற்றி வாய்ப்பு குறைவு என முன்பே கட்சிக் காரரிடம் கூறிவிட வேண்டும். மேலும் தாக்கல் செய்யும் போது வெல்லும் வாய்ப்பே அற்ற நிலையில் முன்தீர்ப்பு மாற்றத்தால் பின்னர் வென்ற வழக்குகளும் உண்டு, ஆக எந்த வழக்கையும் ஏற்கலாம். நம்மை நம்பி வரும் கட்சிக்காரரை கைவிடுதல் கூடாது.

 

ஆனால் குற்றவாளி என தெரிந்தே அவரின் கற்பழிப்பு, சிறார் வன்முறை போன்ற வழக்கை ஏற்பதில் எனக்கு பெரும் தயக்கம் உண்டு.

 

முடிவாக கூற வேண்டும் என்றால் ஒரு வழக்கை ஏற்பதா தவிர்ப்பதா என்பது அந்த வழக்கறிஞரின் மனசாட்சியை பொறுத்தது.

 

 

9.  வழக்குகள் தேங்குவது பற்றி உங்கள் கருத்து என்ன ?

 

ஒரு வழக்கில் இடைக்கால மனு உயர்நீதி மன்றத்திற்கு சென்றால் அது முடிய வருடங்கள் பிடிக்கிறது. பெரும்பாலான கால தாமதத்திற்கு உயர் நீதிமன்றம் காரணம். ஒரு வழக்கை கோப்புக்கு எடுப்பதற்கு ஒரு கீழமை நீதிமன்றம் நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறது. இது போல ஒவ்வொரு மனுவையும் ஏற்பதில் கால தாமதம், தேவையற்ற நடைமுறைகள் இதனால் பின்னர் வழக்கை நடத்த கால தாமதம் ஆகிறது. ஒரு இடைக்கால மனுவை முடிக்கவே நீண்ட காலம் ஆகிறது, இது பிரதான வழக்கை தாமதப்படுத்துகிறது.  இதை கவனித்து விரைவு படுத்த வேண்டும்.

 

 

10. தவறு செய்யும் வழக்கறிஞர் மீது தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா ? இதில் என்ன மாற்றம் தேவை என எண்ணுகிறீர்கள் ? 

 

திருப்தி இல்லை. விசாரணை வெளிப்படையாக இல்லை, விசாரணை நடைபெறவே அதிக காலம் ஆகிறது, அதன் பின்னே இடை நீக்கம் செய்கிறார்கள். இதில் சிபாரிசு, அழுத்தம் என பல்வேறு முறைகேடுகள் உள்ளது.  இதை விரைவுபடுத்தி ஒரு தவறிழைத்த வழக்கறிஞரை உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டும் அப்போது விசாரணையை அவர் விரைவு படுத்துவார். தற்போது விரைவாக இடை நீக்கம் செய்யப்படுவதாக கேள்வி படுகிறேன், இது வரவேற்கக் தக்கது.

 

 

11.  நீதித்துறை ஊழல் என்பது நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் தொடர்புடையது, யார் முக்கிய காரணம்?  கடந்த பத்து ஆண்டுகளில் இது குறைந்துள்ளதா ?

 

இப்போது ஊழல் பெருமளவு குறைந்தது விட்டது. பணி நியமனம் முறைப்படி நடக்கிறது. புதிய தலைமுறை நீதிபதிகள் நேர்மையாக இருக்கிறார்கள்.

 

காலதாமதம் ஊழல் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. தனக்கு சாதகமாக முடிவைப் பெற  நீதிபதி மாற்றலாகி வரும் வரை காத்திருப்பது அல்லது அவர் மாற்றலாகி செல்லும் வரை வழக்கை தாமதப்படுத்துவது, அல்லது ஒரு நீதிபதி மாற்றலாகி செல்லும் முன் அவசர கதியில் ஒரு வழக்கை முடிப்பது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

ஊழலுக்கு வழக்கறிஞர் நீதிபதி சம அளவு காரணம். சில ஊழியர்கள் இடைத்தரகர் போல செயல்படுகிறார்கள். ஆனால் நீதிபதியின் ஆசையை தூண்டுவதால் ஊழலுக்கு வழக்கறிஞர் தான் கூடுதல் காரணம் என்பேன்.

 

12. நீதிமன்ற புறகணிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன ?

 

நமக்கு உள்ள இறுதி வாய்ப்பு இது, நியாயமான காரணத்துக்காக இதை செய்து தான் தீர வேண்டும். ஆனால் இதனால் கட்சிக்காரர் பாதிப்படைவது உண்மைதான். எனக்கு தெரிந்து ஒரு வழக்கில் ஒரு வட இந்திய அதிகாரி சாட்சியம் அளிக்க வந்தார், அன்று நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக சம்பந்தப் பட்ட வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்ய இயலாது போனது. மீண்டும் வேறு ஒரு நாள் அவரை அழைக்க பெரும் அபராதத் தொகை செலுத்த வேண்டிய நிலைக்கு   கட்சிக்காரர் ஆளானார்.

 

13. உங்கள் நோக்கில் வழக்குரை கலை (Art of advocacy)  என்றால் என்ன என்று கூற இயலுமா ?

 

வழக்குரை கலை என்பது முதலில் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து துவங்குகிறது. உங்கள் கட்சிக்காரரை நீங்கள் செவிமடுக்க வேண்டும். அவர் சொல்வது முழுவதும் பொறுமையாக கேட்க்க வேண்டும். நீங்கள் கவனிக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையை பெற வேண்டும்.

 

அடுத்து நீதிமன்றம். வழக்கு சாட்சி விசாரணை துவங்கும் முன் என்ன வழக்கு என சுருக்கமாக கூற வேண்டும்.

இறுதி வாதத்தின் போது உங்கள் வழக்கை அப்படியே பார்த்துப் படிப்பதை தவிர்க்க வேண்டும், நீதிபதி கவனிக்க மாட்டார்.

 

உங்கள் பலமான பகுதியை முதலிலும் பலவீனமான பகுதியை இறுதியிலும் கூற வேண்டும். பலவீனமான பகுதியை கூறும்போது அலங்காரமாக கடந்து செல்லலாம். இறுதியில் முன் தீர்ப்புகள், இவற்றை உடனே கொடுக்க வேண்டும், பின்னர் கொடுக்கிறேன் என அகன்று விடக் கூடாது. முடிக்கும்போது சொற்றொடர், சொலவடை, சட்ட முன்மொழி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

 

ஆனால் நான் முன்பே சொன்னது போல இப்போது நாம் ஒரு போக்கு மாற்றத்தில் (transition) உள்ளோம். இனி வழக்கெழுத்து, வழக்கு வரைதல் (drafting) மட்டுமே முக்கியம் என்கிற காலம் வரலாம்.

 

 

14. இறுதி கேள்வி, உங்கள் பிற துறை ஆர்வம் பற்றி கூறுங்கள் ?

 

எனக்கு அரசியலில் தீவிர ஆர்வம் உண்டு, தினமும் செய்தித்தாள் படிப்பேன், அரசியல் கட்டுரைகள் படிப்பேன்.

 

நான் வாழ்க்கை வரலாறுகளை படிப்பேன். மேற்கத்திய செவ்வியல் இசையில் ஆர்வம் உண்டு, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கேட்பேன். வயலின், ஷெல்லோ தொடர்ந்து கேட்பேன். விவால்டியின் நான்கு பருவங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷெல்லோவில் நான் ஹாசரின் ரசிகை. இப்போது பிதோவன் வாழ்க்கை வரலாறு படித்துக்கொண்டு இருக்கிறேன்.

Comments

Post a Comment