Skip to main content

2. பேட்டி : செல்வராணி

 

மருதமுத்து நாகரத்தினம் தம்பதிக்கு மகளாகப் பிறந்த செல்வராணி திருச்சிராப்பள்ளி சட்டக் கல்லூரியில் 2005 ஆண்டு சட்டம் முடித்து குற்றவியல் வழக்கறிஞர் திரு.ஜேசு பால்ராஜ் இடம் 5 ஆண்டுகள் இளநிலை வழக்கறிஞர் ஆக பணியாற்றினார். தற்போது திருச்சியில் வழக்கறிஞர் தொழில் புரிகிறார், அங்கு தாயாருடன் வசித்து வருகிறார். வாசிப்பார்வமும் தீவிர பயண ஈடுபாடும் கொண்டவர், தொடர் பயணங்களில் இருப்பவர்.

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த பயணம் முடிந்து அவர் ஊர் திரும்பும் போது நாமக்கல்லில் நண்பர்களுடன் அவரை சந்தித்து நான் எடுத்த பேட்டி இது.

 

..... கிருஷ்ணன், வழக்கறிஞர், ஈரோடு.


நன்றிhttps://www.jeyamohan.in/109537/


செல்வராணி 38 வயது, தனி நபர், திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஒரு மாதத்திற்கு முன் திருச்சியில் இருந்து ஒரு வெஸ்பாவில் கிளம்பி மணாலி வரை சென்றார், 30 நாட்களுக்கு பிறகு திருச்சி திருப்பும் வழியில் 24-5-2018 மாலை பத்து நண்பர்களுடன் நாமக்கல்லில் சந்தித்து அவருடன் உரையாடினோம். பொருத்தமாக சுபாஷ் சிலையின் முன்பு ஒரு படமும் எடுத்துக்கொண்டோம்.

அறிந்த நபர்களை முழுவதும் நாம் அறிவதில்லை, மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட நாம் ஊகிக்காத நடத்தை வெளிப்படுவதை அவ்வப்போது காணலாம், போக மனிதர்கள் அவர்களின் பேச்சு மூலம் வெளிப்படுவது வேறு அவர்களின் அகத்தில் அழுந்தி இருப்பது வேறு. எனக்கு அவரை 7, 8 ஆண்டுகளாக தெரியும் அவருடன் இரு வெளிநாட்டு பயணங்களை நண்பர்களுடன் மேற்கொண்டுள்ளேன், ஆனாலும் அவரை இப்போது அறிவது போல முன்பு அறிந்திருக்கவில்லை. அவரும் இப்போது போல முன்பு வெளிப்பட்டதில்லை.


உங்களின் இந்த பயண விருப்பத்தை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

நான் கல்லூரி நாட்களிலேயே என் சி சி இல் இருந்தேன், முதலில் நான் இளங்கலை இந்திய வரலாறு பயின்றேன். வரலாறு பயிலும் போது கல்வெட்டியல் என ஒரு தாள் உண்டு, அதற்காக நான் கிட்டத்தட்ட அனைத்து கோயில்களுக்கும் சென்றுள்ளேன். பின்னர் நிர்வாகவியலில் முதுகலை பயின்றேன் (MBA). அப்போது தமிழகத்தின் அனைத்து ஆலைகளுக்கும், சில வெளி மாநில ஆலைகளுக்கும் சென்று வந்தேன். இறுதியாக சட்டம். சட்டம் பயிலும் போது 40, 50 நண்பர்களுடன் இணைந்து கல்கத்தா தவிர்த்து இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களுக்கும் ரயிலில் சென்றுள்ளேன், ஒவ்வொன்றும் ஒரு வாரம் பத்து நாட்கள் என இருக்கும்.

பள்ளியில் பயிலும் போதே மின் வாரியத்தில் பணிபுரிந்த எனது தாயார் தனது அலுவலக ஊழியர்களுடன் கானுலா செல்லும்போது என்னையும் அழைத்து செல்வார். எனவே இதற்கு மும்பே நான் கணிசமான இடங்களை பார்த்துள்ளேன்.

சட்டம் முடித்தவுடன் எனது பெரும்பாலான வருவாயையும், பொழுதையும் பயணத்திற்காக செலவிடுவது என முடிவுசெய்து விட்டேன். இதுவரை கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் ஆண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் மாற்றிவிட்டேன். எனது வாழ்வின் முக்கிய அங்கம் என்பது பயணம் தான்.

இந்தியா பெண்கள் தனித்து பயணிக்க ஒரு பாதுகாப்பான நாடா?

நான் பெரிதும் நான்கு வழிச் சாலையில், நகர்கள் வழி தான் சென்றுள்ளேன். இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு சொல்லவேண்டும் என்றால் இந்தியா மிக மிக பாதுகாப்பான நாடு.



ஏதேனும் விருப்பத்தகாத நிகழ்வுகள் இந்த பணத்தில் ஏற்பட்டதா?

அப்படி எதுவும் இல்லை. ஆனால் NHAI விதிகளின்படி அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் கழிவறைகளை பராமரிக்கவேண்டும், BPCL தவிர எதிலேயும் இதை கடைபிடிப்பதில்லை, ரிலையன்ஸ் கூட இதில் மோசமாகவே உள்ளது. அனைத்திலும் ஒன்று கழிவறைகள் இல்லை அல்லது மோசமாக உள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தின் சாகர் தாண்டினால் லலித்பூர் வரை கிட்டத்தட்ட 110 கி மீ வெறும் வெட்டவெளி, அபூர்வமாகவே வாகனத்தையோ அல்லது மனிதர்களையோ குடியிருப்புகளையோ நாம் காண முடியும். இங்கு 100 கி மீ க்கு மேல் பெட்ரோல் பம்புகள் இல்லை. ஒரே இடத்தில் இரண்டு மூன்று உள்ளது. நான் NHAI க்கும், அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் ஒரு புகார் அளிக்க இருக்கிறேன். BPCL க்கு ஒரு பாராட்டு.

எதிர்பாராத இடரென்றால் டெல்லியில் இருந்து பானிபட் செல்லும் வழியில் மணற்புயலை (https://www.hindustantimes.com/india-news/42-killed-in-uttar-pradesh-in-dust-storm-that-hit-north-india-on-wednesday/story-a4Azrn1IFTQM8284Olm2MN.html) எதிர்கொண்டதை சொல்ல வேண்டும். அப்போது பாக்பத் எனும் நகரை கடந்துகொண்டிருந்தேன். மாலை நான்கு மணியளவில் திடீரென தூசும் மணலும் இருளும் சூழ்ந்துகொண்டுவிட்டது. என்ன நடக்கிறதென்றே தெரியாத திகைப்பில் இருந்தேன். சாலை, வாகனங்கள் என மொத்த ஊரையுமே மணல் மூடி விட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் இது நீடித்தது. உரிய உடையில் இருந்ததால் பாதிப்பின்றி தப்பித்தேன். பின்னரே அது மணற்புயல் என அறிந்தேன். இதனால் அன்றைய இரவில் திட்டப்படி பானிபட்டில் அல்லாமல் பாக்பத்திலேயே தங்க நேர்ந்தது. இடரென்ற போதிலும் மறக்கமுடியாத அரிய அனுபவமது.


ஏதேனும் குறிப்பிடும்படியான விருப்பத்தக்க நிகழ்வுகள்?

டி என் என பதிவெண்ணை அடையாளம் காணும் நபர்கள், குறிப்பாக பெட்ரோல் பையன்கள் ஆர்வத்துடன் விசாரிப்பார்கள், தற்படமும் எடுத்துக் கொள்வார்கள், வாழ்த்துவார்கள். சில விடுதி மேலாளர்கள் ஊக்கம் தந்தார்கள். திரும்பும் போது அடிலாபாத்தில் நன் தங்கி இருக்கும் விடுதியின் மேலாளர் எனது வண்டியை இரவல் வாங்கிக்கொண்டு போய் தனது மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டுவந்து எனக்கு அறிமுகப் படுத்தினார். திரும்புகிற வழியிலும் கிட்டத்தட்ட நான் அதே விடுதிகளில் தான் தங்கினேன். உ பி யில் நான் திரும்பியவுடன் எனது விடுதிக்காவலர், என்னைக்கண்டதும் ஓசையிட்டுக் கொண்டே எழுந்து சாலைக்கு ஓடி வந்தார். மேலும் அவ்வப்போது எனது தங்கும் விடுதிக்கு அருகே சில பெண்களுடன் பூ பந்து விளையாடினேன், பேசிக்கொண்டிருந்தேன். அனைவரும் எனக்கு உற்சாகம் அளித்தனர்.

“ரோ தங்” கணவாய் திறக்கப் படாததால் மணாலியில் ஒரு கிராமத்தில் ஒரு வாரம் தங்க நேர்ந்தது. அப்போது எனது விடுதிக்காவலர் ஒரு பெண்மணி, அவர் அருகில் உள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் என எல்லோரிடமும் சொல்லி தினமும் ஓரிருவர் என்னை பார்க்க வருவார்கள். அவர்களுக்கு என்னை பிரிய மனமே இல்லை. பொதுவாக எனக்கு உதவியும் உற்சாகமும் மனிதர்களிடம் இருந்து கிடைத்தது.

நீங்கள் தனியாக இப்படி பயணிப்பது ஆபத்து என வடக்கே எண்ணுகிறார்களா?

மணாலியில் நான் தங்கும் விடுதியில், ஒரு ஜெர்மானியர் இருந்தார். பிரென்ச், பிரிட்டிஷ் என பல தேசத்தவருடன் தான் தினமும் இரவு ஒரே மேசையில் ஒரு வாரம் உணவருந்துவோம். அப்படி ஒரு நட்பு எங்களுக்கிடையே ஏற்பட்டது. ஜெர்மானியர் மட்டும் இது அரிது எனவும், ஏன் தனியாக பயணிக்கிறேன் எனவும் வினவினார். பிற எவரும் இக்கேள்வியை கூட கேட்கவில்லை

வழக்கறிஞர் அல்லாத வேறு தொழிலில் உள்ள பெண்ணோ அல்லது ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணோ இது போன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள இயலுமா?

பொதுவாக நமது குடும்பங்களில், ஆண்களையே இவ்வாறு அனுப்ப மாட்டார்கள், இதில் பெண்களை பற்றி சொல்ல தேவையில்லை. நானே எனது அம்மாவை அபுதாபியில் உள்ள எனது அண்ணன் வீட்டுக்கு விமானம் ஏற்றிவிட்டு மறுநாள் கிளம்பினேன். 10 நாட்கள் கழித்து தான் எனது அம்மாவுக்கும், அண்ணனுக்கும் விஷயம் தெரியும்.


வழக்கறிஞராக இருப்பதன் அனுகூலம் என்ன?

நிச்சயமாக பெரிய அனுகூலம் உள்ளது. முதலில் தயக்கமற்று எங்கும் யாரிடமும் பேசமுடியும், காவல்துறையை அணுக முடியும். அது போக வழக்கறிஞர்களுக்கு ஒரு அதிகார உடல் மொழி இருக்கும், அது சுற்றத்தாருக்கு போதுமான செய்தியை அனுப்பிவிடும். பிற துறைகளில் என்றால் எனக்குத்தெரிய மருத்துவர்கள் இதில் அதிகம் உள்ளனர். பண வசதி மற்றும் வாகனம் வாங்கும் சக்தி தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் வழக்கறிஞர் என்பது கூடுதல் பலம்.

பயணம் என்று சொன்னாலே முதலில் உணவு பிறகு தங்கல் எவ்வாறு எனத்தான் கேட்பார்கள், நீண்ட பயணம் என்றால் துணிகள்?

நான் பேலியோ டயட் கடைபிடித்து வருகிறேன். காலை 6 முதல் மதியம் 3 வரை தான் எனது பயணம். சராசரியாக ஒரு நாளைக்கு 300 கி மீ. காலை 6 மணிக்கு துவங்கி விடுவேன், காலை 6 முதல் 9 வரை இடங்கள் மிக அழகாக இருக்கும், நமது மன நிலையும் உடல் நிலையும் உற்சாகத்துடன் இருக்கும், இந்த மணிகள் மகோன்னதமானவை. பரவலாக நான் பயணித்த அனைத்து ஊர்களிலுமே காலைநடை செல்பவர்களை பார்க்க முடிந்தது. இது எனக்கு ஆச்சரியமளித்த உற்சாகமான விஷயம். காலை 11 மணிக்கு முந்திய நாளே ஊறவைத்த 100 எண்ணிக்கை பாதாம் பருப்புகளை உண்பேன். பின்பு மதியம் 3 மணிக்கு அறை அமைந்தவுடன் இரண்டு முட்டைகள் மட்டும் சிறிது ஆட்டிறைச்சி. மாலை ஐந்து மணிக்குமேல் தங்கியிருக்கும் அன்றைய ஊரில் ஒரு நீண்ட நடை செல்வேன். இந்த நடையின்போது புதிதாக பல நபர்களுடன் உரையாட முடிந்தது. இரவுக்கு ஒரே ஒரு பழம். எனக்கு தேநீர், பழச்சாறு, பால் அருந்தும் பழக்கம் இல்லை.

தமிழகம் தாண்டினால் மொழி ஒரு பெரிய தடையாக இருக்கும், மொழி தெரியாமல் தவிக்க வேண்டி இருக்கும் என பொதுவாக ஒரு கருத்து உள்ளது? 

மொழி ஒரு தடையே அல்ல. எனக்கு ஒருவாறு மேலிருந்தவாரியாக ஹிந்தி தெரியும், ஆங்கிலமும் தெரியும். நீங்கள் தைரியமாக யாரிடமும் தமிழில் வழி கேட்கலாம், பிற தகவல்களையும் கேட்கலாம் அவர்கள் புரிந்துகொண்டு நாமறியாத அவர்கள் தாய்மொழியில் பதிலளிப்பார்கள் ஆனாலும் விஷயம் உங்களுக்கு கடத்தப் பட்டுவிடும்.


தமிழகத்திற்கு வெளியே நீங்கள் கண்ட குறிப்பிடும் படியான வேறுபாடு என்ன?

வாகன நெரிசல் இல்லை, பொதுப் போக்குவரத்து அறவே இல்லை. மக்களடர்வும் குறைவு. தமிழகம் மிக வளர்ந்த மாநிலம், பிற மாநிலங்கள் மிகவும் பின்தங்கி உள்ளன.

நீங்கள் எத்தனை மாநிலங்களை கடந்து சென்றீர்கள்?

இந்த 4 வழி சாலைகள் வந்த பிறகு இந்தியாவின் பிராந்திய தனித்தன்மை அழிந்துவிட்டது, எல்லா இடமும் ஒன்றுபோல உள்ளது எல்லோரும் ஒரே மாதிரியாகி விட்டார்கள் எனக்கூறப்படுவதுண்டு?

முதலில் ஆந்திரம் அடிலாபாத் தாண்டியவுடன் மாறும் நிலைக்காட்சிகள், அங்கு துவங்கும் தக்காண பீடபூமி கிட்டத்தட்ட தில்லியில் தான் நிறைவடையும். ஹைதிராபாத்திலிருந்து ஆக்ரா வரையில் கிட்டத்தட்ட 1500 கி மீ. அதுவரை இந்தியா வெறுமையானது, தனிமையானது. கிட்டத்தட்ட வறண்டது. அடிலாபாத் தாண்டியவுடன் மனிதர்கள் வண்ண உடைகளை உடுத்தி இருப்பார்கள், வாகனங்களும் பல வண்ணங்களுடன் மின்னிக்கொண்டு இருக்கும். மரங்களை கூட அரிதாகவே பார்க்க இயலும். சில இடங்களில் வெய்யில் கொளுத்தும்.

உங்கள் வயதொத்த மற்றும் இளம் பெண்களை குறித்து உங்கள் கருத்து என்ன? அவர்களுக்கு இது போன்ற ஒரு செயலில் இறங்கும் திண்மை உண்டா?

அன்றாடத்திற்கு மேல் அவர்களுக்கு இலக்குகள் இல்லை. அவர்களின் ஆர்வம் எல்லாம் தொலைக்காட்சி தொடர்கள், ஷாப்பிங் போன்றவற்றில் மட்டுமே. பெரிய கனவோ திட்டமோ இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு மேல் சொன்னால் என்னை ஆணாதிக்கர் (?) என நீங்கள் சொல்லக் கூடும்.

நாளிதழில் எனது பேட்டியை பார்த்து எனது தோழி பதறி விட்டார், இரவு 11 அழைத்து தனது பதற்றத்தை எனக்கு கடத்தினார். அவரால் இதை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை.


பயணத்தை தொடர்ந்து திட்டமிட்டு அதுகுறித்து பேசி, தள்ளிப்போட்டு பின் கைவிடுவதை நாம் அடிக்கடி காண்கிறோம், கேட்கிறோம், இதன் காரணம் என்ன என எண்ணுகிறீர்கள்?

போதை, உரையாடல் போதை. பேசும்போதே அனைவருக்கும் தெரியும் இதை நாம் நடத்தப் போவதில்லை என. ஆனாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்களை நான் பலமுறை கண்டுகொண்டிருக்கிறேன். ஒன்று இயலாமை, இன்னொன்று வெறுமையைக் கடக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

நீங்கள் ஒரு தனிமை விரும்பியா, உங்கள் நண்பர்கள் எவ்வாறு இதற்கு மறு வினையாற்றினார்கள், நீங்கள் நண்பர்களை உங்கள் பயணத்தில் இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

அவ்வாறெல்லாம் இல்லை, எனக்கு நண்பர்கள் உள்ளனர். ஆனால் பெரிதும் அவர்கள் உடற்தகுதியற்று இருக்கிறார்கள். ஆண்கள் என்றால் அவர்களால் குடிக்காமல் இருக்க முடியாது, தே நீர், சிகரெட் என அடிக்கடி நிறுத்துவார்கள், எனவே தொடர் பயணம் சாத்தியமில்லை. எனக்கு தொடர்ந்து பயணிக்க வேண்டும். இரவு 8 மணிக்கு உறங்கிவிடவேண்டும், காலை 5 மணிக்கு எழுத்துவிடவேண்டும். இது எனது நண்பர்களால் சாத்தியமில்லை. எனவே பெரிதும் நான் எனது தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கறிஞர்களுடன் இணைந்து செல்லவேண்டி இருந்தால் கூட ஒன்று அவர்களே தவிர்ப்பார்கள், அல்லது நான் தவிர்த்துவிடுவேன்.

விஷ்ணுபுரம் நண்பர்கள் எனக்கு 2009 இல் அறிமுகமானார்கள், அவர்களை அழைத்துக்கொள்கிறேன். இரண்டாண்டுகளாக தாமரை, பாரி, மணவாளனுடன் சில நீண்ட பயணங்கள் பைக்கிலும், காரிலும் மேற்கொண்டுள்ளேன். இதுபோன்ற நண்பர்களை இணைத்துக் கொள்வதில் எனக்கு தடையேதும் இல்லை.


உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அப்படி எதுவும் சொல்ல முடியாது. இந்த கேள்வியே எனக்கு அபத்தமாக படுகிறது. பயணத்தின் நோக்கம் பயணிப்பது மட்டுமே. அது உள்ளிருக்கும் ஒரு அனல். பயணவிரும்பி அல்லாத ஒருவரை நீங்கள் வெளியிலிருந்து ஊக்குவிப்பதன் மூலம் பயணிக்க வைக்க முடியாது. இதில் பயணம் சார்ந்த காணொளிகளோ புத்தகங்களோகூட ஒருவரை மாற்றிவிட முடியாது. தானாகவே உள்ளார்ந்த ஆர்வம் இருக்க வேண்டும்.

நீங்கள் இதுபோல வேறு பயணிகளை குறித்து அறிந்துள்ளீர்களா, பயணத்திற்கு உங்களின் தூண்டுகோலாக நிற்பவர் என யாரையேனும் சொல்வீர்களா?

பெரிதும் அவ்வாறு நான் படித்ததில்லை, இந்திய பெண் பைக்கர்கள் பத்து பேர் குறித்து மட்டும் படித்தேன். விலை உயர்ந்த பைக், அதிக திட்டத் செலவு.

பயண முன்னோடி என்றால் அது ஜெயமோகன் தான், 2009 இல் இருந்து அவரது பயணக் கட்டுரைகளை படித்து வருகிறேன். சவாலான இடங்கள். அவை அனைத்திற்கும் நானும் செல்லவேண்டும் என்கிற துடிப்பு இருக்கிறது. செய்துவிடுவேன். அவருக்கு இணையாக நான் கடன்பட்டுள்ளேன் என்றால் அது நியாண்டர் செல்வன்.

நீங்கள் உங்கள் பயணத்தில் எல்லா வரலாற்று சின்னங்களையும், நினைவிடங்களையும், கட்டுமானங்களையும், காணிடங்களையும் தவிர்த்து சென்றதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?

இடங்களை சுற்றி பார்ப்பது, நம்மில் அதிக சக்தியை உறிஞ்சக் கூடியது. நமது குழும நணபர்களின் வற்புறுத்தலால் தாஜ் மஹால் மட்டும் சென்றேன், அதுவே என்னை தளர்ச்சி அடையச் செய்துவிட்டது. மேலும் இந்தியா பார்த்துத் தீராத நாடு. என் வழியில் உள்ள எல்லா இடங்களையும் நான் பார்த்துச் சென்று வந்தால் ஓராண்டு ஆகிவிடும்.

அடுத்து ரயிலில் எனது பைக்கை கொண்டு சென்று ஒவ்வொரு மாநிலமாக அனைத்து இடங்களையும் பார்க்க இருக்கிறேன்.


மொத்த கிமீ, மொத்த செலவு?

நான் லடாக் வரை சென்று திரும்ப ரூ 2 லட்சம் வரை ஆகும் என எண்ணினேன். கணவாய் திறக்காததால் மணாலியுடன் திரும்பிவிட்டேன். இப்போது வரை சுமார் 6,500 கிமீ பயணப்பட்டுள்ளேன். தங்குவதற்கு சராசரிக்கு மேல் உள்ள விடுதிகளையே தேர்வு செய்தேன், நாளைக்கு தங்குமிடம் மட்டும் ரூ 1500-2000 வந்திருக்கிறது. வண்டிக்கு எரிபொருள் ரூ 45,000/-. மொத்தம் ரூ 1,25 லட்சம் செலவாகியிருக்கும் என எண்ணுகிறேன். ஊருக்கு போய் தான் கணக்கு பார்க்க வேண்டும்.

உங்கள் வாகனம், நீங்கள் கொண்டு சென்ற பயணப் பொருட்கள், அதன் எடை?

திட்டமிட்டே நான் வெஸ்பா 150 சி சி பைக்கை ரூ. 1.4 லட்சத்திற்கு இரண்டாண்டுக்கு முன் வாங்கினேன், இது தாக்குப் பிடிக்க கூடியது. செல்லும்போது ஒரு முறையும் திரும்பும்போது ஒரு முறையும் சர்வீஸ் செய்தேன். லிட்டருக்கு சுமார் 45 கி மீ தரும். உடைகள் என்றால் காற்சட்டைகள் 2, டீ ஷர்டுகள் 2, ஒரு ஜெரிக்கன், ஹெல்மெட், கையுறைகள். குறைந்த எடை தான். எப்போதும் ஜெரிக்கன், ஹெல்மெட், கையுறை அணிந்தே சென்றேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் துவைத்துக் கொண்டேன், துவைக்க வசதி உள்ள விடுதிகளை அதிகமும் தேர்வு செய்தேன். ஹிமாச்சலில் சேறு படிந்த எனது உடைகளை துவைத்து வெப்ப இயந்திரத்தில் உலர்த்தி உடனே கொடுத்துவிட்டனர்.

இப்படி ஒரு பயணத்தை வெஸ்பாவில் மேற்கொள்கிறேன் என அந்த நிறுவனத்திற்கு தெரிவித்தேன், எவ்வித மறுவினையும் இல்லை.


பயணத்தில் செய்யக் கூடுவது கூடாதது?

பயணம் என முடிவெடுத்தால் உடனே கிளம்பி விடவேண்டும். திட்டமிடுவதற்கும் கருத்துக் கேட்பதற்கும் சில நாட்கள் ஆனால் நீங்கள் கைவிட்டு விடுவீர்கள். நான் கிளம்புகிறேன் என சொன்ன பிறகு எனது வண்டி சீராகத்தால் இரு நாட்கள் திருச்சியில் இருக்க வேண்டி வந்தது. அப்போது அனைவருக்கும் திட்டம் தெரிந்து விட்டது. ஆளுக்கொரு அறிவுரை கூறத் துவங்கி விட்டர்கள். யாரும் எங்கும் இதுவரை பயணித்ததில்லை. இவர்களிடம் இருந்து தப்பித்து தான் நான் கிளம்பிவிட்டேன். பயணப்படாதவர்களிடம் அறிவுரை பெறாதீர்.

ஏப்ரில் மே தான் மிக வெப்பமான காலம், இதுபோன்ற ஒரு பயணத்திற்கு இதை ஏன் தேர்ந்தீர்கள்?

அடுத்து மழை வரும், இன்னும் கடினமாகும். மேலும் எனது அம்மா இப்போது தான் அபுதாபி சென்றார், இது தான் வாய்ப்பு. கால நேரம் பார்த்து தள்ளிப் போட்டால் பயணமே முடியாது.


இது எந்த அளவுக்கு திட்டமிட்ட பயணம்?

தங்கப் போகும் அனைத்து ஊர்களையும் முன்பே முடிவு செய்துவிட்டேன், குறிப்பிட்ட விடுதியை திட்டமிடவில்லை. வழியில் இருமுறை வண்டி சர்வீஸ் செய்ய முன்பே ஏற்பாடு செய்துவிட்டேன். பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சண்டிகரில் நண்பர்கள் வீட்டில் தங்கினேன். வழித் தடத்தை கூகிள் உதவியுடன் முன்பே குறித்துக் கொண்டேன், ஆனால் அது காட்டுவதை விட தூரங்கள் இன்னும் தொலைவு. தேதியையும் தங்குமிடத்தையும் அட்டவணை செய்து அதுபடி தான் சென்றேன். இதில் மயிலாடுதுறை பிரபு சில ஆலோசனைகளை தந்தார். இது பெரிதும் திட்டமிட்ட பயணம் தான்.

உங்கள் எதிர்கால திட்டம்?

கட்ச் பாலைவனைத்திற்கு மற்றும் கல்கத்தாவுக்கு செல்லுதல். விரைவில் இது சாத்தியப்படலாம்.

*

தனது எல்லைகளை தொடந்து பரிசீலிப்பதும் அதை மீறுவதும் ஒரு சாதனையாளரின் குணாதிசயம், ஒரு இடரற்ற அன்றாட நாள் என்பது சலித்துவிட்டதாக உணரும் ஆண் மற்றும் பெண்களுக்கு செல்வராணி ஒரு முன்மாதிரி.

கிருஷ்ணன்.

 

Comments

  1. கல்பனா சாவ்லா விண்வெளியிலிருந்து பூமியின் அழகை இந்த நீல நிற பூமி பந்து மிகவும் பொக்கிஷமாக பாதுகாக்க பட வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டு இருந்தார் ....அதுபோல பயணங்கள் நாட்டின் குறுக்கு வெட்டு தோற்றத்தின் அழகை கலாச்சாரத்தை பண்பாட்டை அகன்ற பார்வையில் அணுக செய்யும்.... வாழ்த்துக்கள் சகோதரி...விரியட்டும் உங்கள் சிறகுகள்.

    ReplyDelete
  2. பயணம் ஏன் என்றே கேள்விக்கு எதிர்பாரத பதில். அதுவே அவரை கனிக்க முடியாத நபராய் காட்டுகிறது

    பெண்கள் பெரும்பாலும் தனியே பயணம் செய்வதை விரும்பமாட்டார்கள் இவர் வித்தியாசமானவர் என்பதில் மாற்றுகருத்தில்லை எனக்கும் பயணம் என்பது மிகுந்த விருப்பம் இந்தியா முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்பது கனவு ஜெமோ வின் இணைய தளத்தில் அவர் செய்த பயணங்களில் இரு பயணம் நானும் எனது சகோதரர் சகோதரி பயணம் செய்துள்ளோம் நன்றி கிருஷ்ணன்

    ReplyDelete
  3. உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

    அப்படி எதுவும் சொல்ல முடியாது. இந்த கேள்வியே எனக்கு அபத்தமாக படுகிறது. பயணத்தின் நோக்கம் பயணிப்பது மட்டுமே.

    ReplyDelete
  4. இந்த ஒரு பதிலில் அனைத்தும் அடங்கி விட்டது

    ReplyDelete
  5. Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge!

    ReplyDelete

Post a Comment