Skip to main content

2. அன்புராஜ் பேட்டி தொடர்ச்சி - பாகம் 2

அன்புராஜ் பேட்டி - பாகம் 1


அன்புராஜின் பேட்டி தொடர்ச்சி இது. இது இரண்டாம் பாகம், இந்த பகுதியில் சிறையில் ஒரு நாடக நடிகர் ஆன அனுபவத்தை விவரிக்கிறார்.

 

... Krishnan, Advocate, Erode

 

நாடகத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது ?

 

என்னைக் கர்நாடக சிறைக்கு மாற்றியபோதே இனி கன்னடம் கற்காமல் வாழ முடியாது என எண்ணினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் கன்னடத்தை எழுதப்படிக்க கற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு ஆயுள் சிறை என தீர்ப்பானது. கர்நாடகத்தில் அது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள், இளமையை இங்கேயே கழிக்கவேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை, மைசூரு சிறையில் இருந்து தப்ப முடிவு செய்தேன். சிறைக்கு நான்கு மதில் சுவர்கள், இந்த நான்காவது சுவரை கடப்பதே கடினம், இதற்கான வாய்ப்புகளை நோக்கிக் கொண்டிருந்தேன், நான்காவது சுவரைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் போது ஒருவர் கடிகாரம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார், ஆகவே அவர் சிறைவாசி அல்ல என தெரிந்துகொண்டேன். அவரை நெருங்கி விசாரித்தேன் அவர் தன்னை உலுக்கப்பா கட்டிமணி என கூறி தான் ஒரு நாடக ஆசிரியர் எனவும் சிறைக் கைதிகளை வைத்து உள்ளேயே நாடகம் போடப்போவதாகவும் சாத்தியமானால் வெளியே கூட கூட்டிப்போக முடியும் எனவும் கூறினார், விருப்பமா எனக் கேட்டார் எனது திட்டத்திற்கு இது உதவியாக இருக்கும் என்கிற உள்நோக்கத்தில் சரி என ஒப்புக்கொண்டேன், கலை என்னைத் தீண்டிய கணம் அது.


சிறையில் நாடகப் பயிற்சி


 

எங்கள் நாடக குழுவின் பெயர் “சங்கல்பா”. பைரப்பாவின் பர்வா மைசூரு சிறையில் தான் படித்தேன். அது என் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் “ரங்கவாணி” என்கிற நாடகக் கலை தொடர்பான பத்திரிக்கையையும் நான் ஏற்று நடத்தி வந்தேன். தற்போது அதற்கு சுமார் 4000 சந்தாதாரர்கள் உள்ளனர். நாடகம் போடச் செல்லும் இடங்களில் எல்லாம் நான் சந்தா பிடித்து விடுவேன் அதுபோக சிறையில் இருந்தும் கடிதம் எழுதி நிறைய சந்தாதாரர்களை பிடித்துள்ளேன்.

 

அதன்பிறகு நாடக வாழ்க்கை எவ்வாறு சென்றது?              

 

கர்நாடகத்தில் நாடகக்கலை வலுவானது. அன்றாடம் காய்ச்சிகள், கூலி தொழிலாளிகள் கூட நாடகம் பார்க்க வருவார்கள், சராசரியாக நுழைவுச் கட்டணம் ரூ 50 ல் இருந்து 150 வரை இருக்கும், செல்வந்தர்களின் ஆதரவும் அமோகமாக உண்டு. ஒரு நாடக நிகழ்விற்கு சராசரியாக 2 லட்சம் செலவாகும். ஒவ்வொரு சிறு நகரத்திலும் கூட மதிக்கத்தக்க 2, 3 நாடக அரங்குகள் இருக்கும். வெகு ஜன மக்கள் நாடகங்களின் பெயர்கள், அதன் ஆசிரியரின் பெயர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தெரிந்து வைத்திருப்பார்கள். இது ஒரு சாதகமான அம்சம். நாடகக்கலை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது முழு ஈடுபாட்டுடன் இதில் நடித்தேன். 2006 முதல் 2016 வரை நாட்கள் உயிர்ப்புடன் விரைந்தோடியது உலுக்கப்பா கட்டிமணி பி வி காரந்தரின் நேர் மாணவர். ஒரு முறை எங்களது குழு பெங்களூரில் நாடகம் நிகழ்த்தியபோது வரவிருந்த காரந்தர் தவறிவிட்டார், ஆகவே அவரது உடலை நாடக அரங்கிற்கே கொண்டுவந்து அவர்முன் நாடகம் நிகழ்த்தப்பட்டது. குட்டிமணியின் வழிகாட்டுதலில் பிற சிறைவாசிகளுக்குப் பயிற்சி அளித்து சிறைக்குள் வெற்றிகரமாக ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்பு நாடகங்களை நடத்தி பாராட்டை பெற்றோம். பெரிதும் கிரிஷ் கர்னாடின் “தல தண்ட” போன்ற நாடகங்கள், தேவனூரு மகாதேவ, சிவப்ரகாஷ், சம்பா, பகவான், கம்பர், நாடகங்கள். கர்னாட் போன்ற ஆளுமைகள் விருந்தினர்களாக வந்து எங்கள் நாடகங்களை கண்டுகளித்துள்ளனர். அப்போதே எனது இலக்கு புகழ்பெற்ற தில்லி நாடக விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதே. நான் கட்டிமணிக்கு உதவி இயக்குனர் நாடகங்களுக்கு பயிற்சி அளிப்பது எனது பிரதான வேலை, எனவே நான் வெகு சில முக்கிய வேடங்களே ஏற்றுள்ளேன்,

 

பெங்களூருவில் நாடகம் நடத்த அனுமதி வேண்டினேன், அப்போது சிறையில் ரேவன சித்தய்யா என்கிற சிறைத்துறை ஐ ஜி இருந்தார். கர்நாடகம் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேம்பட்ட கலாச்சாரம் உடையது, அந்த அதிகாரியே அரசுடன் பேசி தனது பொறுப்பில் அனுமதி வாங்கினார். 40 பேர் சிறைவாசிகள் 150 காவலர்கள் காவலுடன் கைவிலங்கிட்டு மைசூரில் இருந்து பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டோம். இதற்குள் இது செய்தியானது, வெற்றிகரமாக நாங்கள் நாடகங்களை இட்டோம். எங்கள் குழுவில் ஒல்லியாக குள்ளமாக காணப்பட்ட இளைஞன் ஒருவனைப் பார்த்து நிருபர்கள் நீ குனிந்து தப்பினால் கூட யாருக்கும் தெரியாது, ஏன் நீ தப்பிக்க முயற்சி செய்யவில்லை என்று வினா எழுப்பினார், அவ்வாறு தப்பித்து விட்டால் நாளை எனது பாத்திரத்தை யார் நடிப்பது என அவன் திருப்பி கேட்டான், அக்கணம் சிறையில் இருந்து தப்பும் திட்டத்தை நான் கைவிட்டேன். இச்சம்பவம் நம்பிக்கையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் புரிய வைத்தது.

 



ஞானபீட விருதுவாங்கிய கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பார் - உடன் அரங்கில்


பின்பு கர்நாடகமெங்கும் நான் விடுதலையான 2016-வரை சுமார் 100 காட்சிகளை நடத்தியிருப்போம் கேரளா காசர்கோட்டிலும் நடத்தினோம். வேறு சிறைகளில் இருந்து நாடகத்திற்கு ஆள் எடுப்பது அவர்களை மைசூருக்கு மாற்றச் செய்வது, என நாட்கள் மிக உற்சாகமாக சென்றது. அப்படித் தான் எனது மனைவியை சந்தித்தேன். ஒவ்வொரு நாடக நிகழ்விற்கும் சுமார் 3 நாட்கள் பயணம் இருக்கும், 40 பேர்கள் கொண்ட எங்களது “சங்கல்பா” வேறு சிறைகளில் தங்க முன்பதிவு செய்வோம், விதிகளை மீறி கடற்கரைகளைக் கூட பார்த்து ஓடி விளையாடி இருக்கிறோம். தில்லி சென்று பிற கலைஞர்களுக்கு சரிசமமாக தேசிய நாடக விழாவில் நாடகம் நடத்தினோம், அது எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்.

 

 

உங்களுக்கு பிடித்த நாடகம்?

 

எனக்குக் கஸ்தூரி பாயை மிகவும் பிடிக்கும், மராட்டியிலும் கன்னடத்திலும் எழுத்தக்கூடிய சௌக்கலே வின் “கஸ்தூரிபா காந்தி” எனக்கு பிடிக்கும். அதில் நான் கறார் கூலியாக நடித்திருந்தேன். காந்தி தனது திட்டங்களை எல்லாம் கஸ்தூரிபா மீதே பரிசோதித்தார். கம்பாரின் “உளி நேரலு” இதில் ஒரு எஜமான் பாத்திரம், ஜெயந்த் காய்கனியின் “ஜொத்திக்கே ஹிரவாலு” ஆகியவைகளும் எனக்கு பிடித்தமானவை. தற்போது உள்வெளி என்கிற நாடகத்தை மைசூரு சிறையில் இயக்கி வருகிறேன், சுமார் 10 பேர் விடுதலை செய்யப்பட்ட வெளி ஆட்கள் மற்றும் சிறைவாசிகள். இன்னும் ஓரிரு மாதத்தில் அது மைசூரில் பொதுவில் அரங்கேறும்.

 

கலை ஒருவனை மாற்றுமா ?

 

நான் மாறியுள்ளேன், அது ஆட்களை மாற்றும் என எண்ணுகிறேன். எந்த சிறைவாசியையும் அணுகி அறிந்தால் அவர் மேல் ஒரு பரிதாபம் வரும், பெரும்பாலான கைதிகள் திட்டமிட்டு குற்றம் செய்திருந்தால் கூட அச்செயலை செய்யும் சமயத்தில் அவர்கள் பிரக்ஞையற்றே இருக்கிறார்கள். இந்த மனநிலை ஆய்வுக்கு உட்பட்டது. இதுபற்றி தான் தற்போது ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். மைசூரில் என்னுடன் ஒரு 25 வயதுடைய ஆயுள் கைதி துளு மொழி பேசும் கணேஷ் நாயக் இருந்தான். எப்போது விடுதலை ஆனாலும் பகையாளிகள் இருவரை தீர்த்துவிட்டு மீண்டும் சிறைக்கு வருவேன் என கூறிக்கொண்டு இருப்பான். அவனுக்கு ஷேக்ஸ்பியரின் மக்பெத்தில் ஒரு சிறு பாத்திரம் வழங்கப்பட்டது. நாடகத்தின் இறுதியில் லேடி மக்பெத் தனது கையிலுள்ள குருதியை எவ்வளவு கழுவினாலும் அகற்றமுடியவில்லை எனக் கூறுவார், செய்த குற்றத்திற்காக மனம் வெதும்பி ஒருநீண்ட வசனத்தை பேசுவார். இதை பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் நாயக் தனது பகைமையை கைவிடுவதாக அப்போதே மேடையில் கூறினான். தற்போது விடுவிக்கப்பட்டு எல்லோரையும் போல வாழ்ந்து வருகிறான்.

 

குற்றமிழைத்தல் மனம்திருந்துதல் பற்றி உங்கள் கருத்து என்ன?

 

எந்த ஒரு குற்றத்திற்கும் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் தான் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். எப்பொழுதும் குற்றம் அதன் மிக மோசமான வடிவில் இருந்து தான் ஆரம்பிக்கும், எனவே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் கூட அவருடைய அப்போதைய மனநிலையை வைத்து எடை போடக்கூடாது. பின்னர் அவரது நடத்தையை வைத்து அவர் எந்த அளவு மாறியுள்ளார் சீராக உள்ளார் என தான் நோக்க வேண்டும் என்பது எனது கருத்து. இப்படி அசலானவர்களை அடையாளம் காண சிறை அதிகாரிகளால் முடியும் என எண்ணுகிறேன்.

 

தூய கலை மாறும் பிரச்சாரக் கலை குறித்த உங்கள் கருத்து என்ன?

 

கலையின் அடிப்படை என்பது ஒருவனின் அகத்தில் ஏற்படும் விளைவுகளை பரிசீலிக்கவேண்டும், வெறும் புற எதார்த்தம் கலையாகாது.

 

உங்கள் நாடகங்கள் மற்றும் நடிகர்கள் குறித்து எதுவும் பதிவுகள், ஆவணங்கள் உள்ளனவா ?

 

கன்னட தினசரிகளில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளது. தற்போது கிரிஷ் காசரவள்ளி எங்களை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கிறார், அடுத்தமாதம் தனது உதவியாளர்களுடன் இங்கு வருகிறார்.

 

நாடக அரங்கில் கதாப்பாத்திரமாக அன்புராஜ்

தண்டனைக்காலம் முடியும் முன்பே எவ்வாறு மன்னிப்பு பெற்றீர்கள்?

 

2013 வாக்கில் நான் அனைத்து கைதிகளின் சார்பில் பரோலில் பெங்களூர் சென்று முதலில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி அவர்களை சந்தித்தேன். சிறைக்கைதிகளில் படித்த ஒரு குழு இதைச் செய்ய என்னுடன் இருந்தது. அவர்தான் நீங்கள் ஒரு கையெழுத்து இயக்கம் எழுதவேண்டும் என்றும் அதில் தான் குறிப்பிடும் சுதந்திர போராட்ட தியாகியிடம் கையெழுத்து பெற வேண்டும் எனவும் பின்னர் என்னிடம் வாருங்கள் எனவும் கூறினார். அதன்படி நான் சுதந்திர போராட்ட தமிழ் தியாகி துரைசாமியிடம் முதல் கையெழுத்து பெற்று பின்பு யு ஆர் அனந்தமூர்த்தி, சந்திரசேகர கம்பார், கிரிஷ், கர்னாட் போன்றோரிடமும் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பினோம் பின்பு இவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அனந்தமூர்த்தி தவிர்த்து ஞானபீடம் பெற்றிருந்த கம்பர், கர்னாட், சம்பா போன்றோர் நேரில் சென்று ஆளுநரை சந்தித்து எங்கள் விடுதலையை வற்புறுத்தினார்கள். இம்முயற்சியால் பின்பு சுமார் 300 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

 

அந்த சமயத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கைதியை விடுவிக்க வேண்டும் என்றால் அரசுக்கு சில விலக்குகள் இருந்தது. அது ஆயுத தடை சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றத்தில் தண்டிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் ஆயுத தடை சட்டத்தில் ஒரு ஆண்டு தண்டிக்கப்பட்டு இருந்தேன், அந்த பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கலாம். அப்போதைய எனது சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் சத்யநாராய ராவ், அவர்தான் பரிசீலனை குழுவின் தலைவர் அவர் தவிர்த்து மேலும் 7 பேர் இருந்தார்கள். ஏற்கனவே குழுவில் இருந்த வழக்கறிஞர் ரோகிணி, பேரா நஞ்சராஜ் அர்ஸ், (இவர் தேவராஜ் அர்ஸின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் இடதுசாரி) ஆகியோர் எனக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். இது சம்பந்தமாக என்னிடம் Chowdry Vs State of Hariyana என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தது. அந்தத் தீர்ப்பின் படி ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றிருந்தால் மட்டும் தான் எனது மனு பரிசீலிக்கப்பட கூடாது எனக்கு அந்த பிரிவின் கீழ் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவே எனது மனு பரிசீலிப்பதற்கு தகுதியானது என ஒரு வக்கீல் நீதிமன்றத்தில் வாதிடுவது போல வாதிட்டேன். திரு.சத்யநாராயணா தான் ஒரு நாள் இது பற்றி சிந்தித்து அமைச்சரவைக்கு அனுப்பிவிடுவதாக சொன்னார், மறுநாள் என்னைச் சந்தித்து தான் சிந்தித்து படித்துப் பார்த்ததாகவும் உங்களது மனுவை நான் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துவிட்டதாகவும் கூறினார். அமைச்சரவை இதை ஏற்று ஆளுநருக்கு அனுப்பியது இதெல்லாம் 2 மாதங்களுக்குள் நடந்தது. கர்நாடகத்தில் சட்ட மேலவை இருப்பதால் அங்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் சொல்லுக்கு மதிப்பிருக்கிறது. 2016-ல் நான் விடுதலை பெற்றேன். டாக்டர் நஞ்சராஜ் அர்ஸ்-சுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன், நான் வேண்டியபடி சிறைக்கைதிகள் நலனுக்காக அவர் “அந்தகர்ணா ” என்கிற அறக்கட்டளையை துவங்கி நடத்திவருகிறார்.

 

 

உங்கள் மனைவியின் கதை?

 

எனது மனைவி சென்னையில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் தனது 14 வயதில் சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டவர். ஓரிரு ஆண்டுகள் வீட்டு வேலை செய்த பின்பு அவரின் அவரின் பாதுகாவலர்கள் வெளிநாட்டில் சென்று வசிக்கப் போவதாகவும், எனவே அவரை பெங்களூரில் உள்ள தனது தோழியிடம் வீட்டு பணிக்காக விட்டு செல்வதாகவும் கூறி பெங்களூரில் விட்டு விட்டார்கள். பெங்களூரில் எனது மனைவியின் வாசம் சந்தேகத்திற்கு இடமாகவே இருந்தது, அவர் வயதொத்த சில பெண்களை அழைத்து வருவதும் சில நாட்கள் கழித்து அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறிக் கொண்டு கூட்டிச் செல்வதும், பின்பு அவர்கள் திரும்பி வராமல் இருந்ததும் அவருக்கு கடுமையான ஐயத்தை எழுப்பியது. பின்னர்தான் அவர்கள் ஆதரவற்ற பெண்களை அழைத்துவந்து மும்பையில் விற்றுவிடும் கூட்டத்தின் பிடியில் இருப்பதை உணர்ந்தார். தப்பிச் செல்ல முயன்றார், துரத்தி வந்த ஐந்து ரவுடிகளிடம் பிடிபட்டுக் கொண்டு வரப்பட்டார். என் மனைவி கத்தியால் கடுமையாக உடல்முழுவதும் தாக்கப் பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அதே கத்தியை பிடுங்கி ஒருவரை தொண்டை குழியில் குத்திவிட்டார் அதில் அவர் இறந்துவிட்டார். மேலும் இருவருக்கும் கடுமையான காயத்தை ஏற்படுத்தி விட்டார், பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்து பார்த்து எனது மனைவி இறந்து விட்டார் எனக் கருதி பிணவறையில் சேர்த்துவிட்டனர். அங்கு வந்து பார்த்த மருத்துவர் எனது மனைவி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்து அவரை மீட்டார். என் மனைவி கொலையை ஒப்புக்கொண்டார் அவருக்கு 17 வயதிற்கு கீழ் தான் இருந்தது அவருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் எலும்பு பரிசோதனையின் அடிப்படையில் அவர் பதினெட்டு வயதை கடந்து விட்டார் எனக்கணக்கிட்டு நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, அவர் சார்பாக இலவச சட்ட உதவி வக்கீல் தான் வழக்கு நடத்தினார். பெல்லாரி சிறையில் இருக்கும் பொழுதுதான் நாடகத்திற்காக எங்கள் சிறைக்கு அழைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை காலம் முடியும் முன்பே மன்னிப்பு கோர வேண்டும் என்றால் சமூகத்தில் வெளியிலிருந்து யாராவது அவரை ஏற்க வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி எனது பெற்றோரின் ஒப்புதலுடன் கொளத்தூரில் கொளத்தூர் மணி தலைமையில் பரோலில் வந்து திருமணம் செய்து கொண்டோம். திரும்பவும் சிறைக்கு வந்து தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். நான் விடுவிக்கப்பட்டதற்கு ஒரு வருடம் முன்பாக எனது மனைவி விடுதலையானார், அவர் 14 ஆண்டுகள் தான் தண்டனை அனுபவித்திருந்தார் .இப்போது இங்கு எனது வீட்டில் எனது பெற்றோருடன் ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

 

இத்தனை வருடங்களாக உங்களை செலுத்திய, தற்போதும் செலுத்திக் கொண்டு இருக்கும் விசை எது ?

 

இந்த நாடகக்கலை தான். எனக்கு இப்போதும் பொருளாதார நிர்பந்தங்கள் இல்லை என்றால் ஒரு முழு நேர நாடக்கலைஞராக வாழவே விரும்புகிறேன். எங்கள் சங்கல்பாவையும் வளர்க்க விரும்புகிறேன். அது போக இப்போது தோழர் வி பி குணசேகரன் வழிகாட்டுதலில் நான் பழங்குடிகளின் நலனுக்காக பணியற்றி வருகிறேன். தொடர்ந்து அவர் தலைமையில் இப்பழங்குடிகளுக்கு அவர்கள் விரும்பும் ஒரு மேம்பட்ட வாழ்வை அளிப்பதும் எனது விருப்பம்.

 

(தொடரும்)

Comments