Skip to main content

அன்புராஜ் பேட்டி இறுதி பகுதி

 அன்புராஜ் பேட்டி - பாகம் 1

அன்புராஜ் பேட்டி - பாகம் 2


அன்புராஜ் பேட்டி இறுதி பகுதி :

 

உங்கள் மீதுள்ள வழக்குகள் என்னென்ன ?

 

தமிழகத்தில் மூன்று வன ஊழியர் கடத்தல் வழக்குகள், கர்நாடகத்தில் 2 ஆள் கடத்தல் வழக்குகள். தமிழக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2011இல் விடுதலையானது, கர்நாடக வழக்குகளில் 9 வனவர்கள் கடத்தப்பட்ட குண்டல் டேம் வழக்கில் ஆயுள் பெற்றேன். என்னுடன் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள், இன்னொரு வழக்கு விடுதலையானது. வீரப்பன் தொடர்பாக 25 ஆண்டுகளில் சுமார் 2000 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 50 பேர் தண்டனைக்குள்ளானார்கள்.

 

காவல்துறையின் சித்ரவதை குறித்து ?

 

நான் மூன்று பேர்களுடன் சரண் அடைந்த உடன் நீதிமன்றத்தில் மனுச்செய்து போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறேன் என பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். மாதேஸ்வரன் மலையில் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சித்திரவதை கேந்திரமான “ஒர்க் ஷாப்” என்னும் ஒரு சித்திரவதைக் கூடம் உள்ளது, சோளகர் தொட்டி நாவலில் அதை படிக்கலாம். அதற்குத்தான் அழைத்துச் செல்லப்பட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆடைகள் இன்றி ஏற்கனவே அதே நிலையில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடுவில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கு துன்புறுத்தல்கள் மனிதத்தன்மையற்ற முறையில் இருக்கும். ஆட்களை தலைகீழாக நெடுநேரம் தொங்கவிட்டு நகங்களையும் பற்களையும் ஒவ்வொன்றாக கட்டிங் பிளயரால் பிடுங்கிவிடுவார்கள், மகளுடன் தந்தையை, சகோதரியுடன் சகோதரனை, தாயுடன் மகனை சக கைதிகள் 20 பேர் முன்பு வற்புறுத்தி உறவு கொள்ள வைத்தார்கள். கைகளிலும் கால்களிலும் பாலுறுப்புகளிலும் வயர்களை பொருத்தி மின்சாரத்தை பாய்ச்சுவர்கள், படிப்படியாக தீவிரப் படுத்துவார்கள், என்னையும் அவ்வாறு செய்தார்கள். அப்பொழுது உடல் கை கால்கள் எல்லாம் எதிர்திசையில் வளைந்து விடும், உடல் சீராவதற்கு பல மணி நேரம் பிடிக்கும். நீர் மட்டும் தான் கொடுப்பார்கள் அங்கேயே அந்த அறைக்குள்ளேயே நிர்வாணமாக இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்போதும் எனது இரு கணுக்கால்களிலும் அழுத்தமான வட்டமாக தழும்புகள் உள்ளது, அவை ஒர்க் ஷாப்பில் நான் பெற்றது. அந்த அறை எப்பொழுதும் ஒரு கெடு நாற்றம் மிக்க அறையாக இருக்கும். அறைக்கு வெளியேயும் பழங்குடிகளை கைதுசெய்து அமர்த்தியிருப்பார்கள். இதை அனுபவித்த ஒருவனால் சிறையில் துன்புறுத்தப்படுவது என்பது ஒப்புநோக்க இலகுவானதுதான். அதனாலேயே எனக்கு அதிக தாங்கும் திறன் இருந்தது காயம் மற்றும் வலி குறித்து பெரிய அச்சங்கள் எதுவும் எனக்கு தமிழக மற்றும் கர்நாடக சிறைகளில் இல்லை.




 

சிறையில் நீங்கள் உங்கள் சுயமதிப்பை விட்டுத்தரவே இல்லையா ?

 

ஆம், அவ்வாறு தான் எண்ணுகிறேன். முதன் முதலில் சிறையில் காலடி எடுத்துவைத்த உடனேயே எனது ஆடைகளை களைய சொன்னார்கள், விதிகளுக்கு கட்டுப்பட்டு நான் அதை செய்தேன், ஆனால் பலமுறை அமர்ந்து எழ சொன்னார்கள், நான் மறுத்துவிட்டேன் அடி பட்டேன். சிறையில் இருந்து நான் வெளிவரும் வரை பல முறை ஆடைகளை களைய மிரட்டப்பட்டேன், தாக்கப்பட்டேன் ஒருமுறை கூட நான் அதற்கு உடன்படவில்லை. ஒவ்வொருமுறையும் பலவந்தமாகவே எனது ஆடைகள் உரிக்கப்பட்டன.

 

உங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என எண்ணுகிறீர்களா?

 

அவ்வாறு நான் நினைக்கவில்லை, ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளேன் ஆகவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஆனால் கால அளவு சற்று அதிகம் என எண்ணுகிறேன்.

 

நீங்கள் சிறையில் இருந்தபோது சிறைவாசிகளின் வகைப்பாடுகள் குறித்து ?

                

சேலம் சிறையில் கேரளத்து சாக்கோ என்கிற சிறைவாசியைச் சந்தித்தேன், குழந்தைகளை வன்புணர்வு செய்து சுவற்றில் அடித்துக் கொன்றுவிடுவான். அவனுக்கு அதுகுறித்துக் குற்றபோதமே இல்லை, வழக்கறிஞர் வைக்காமல் தானே தனது வழக்கைத் திறமையாக நடத்துவான், அச்சமயம் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் அங்குவந்து அவன் நடத்தும் வழக்கைக் குறிப்பு எடுத்துக் கொள்வார்கள். சாக்கோ என்னிடம் தனக்கு சேலத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தண்டனை தான் கிடைக்கும் என்றும் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தான் விடுவிக்கப்படுவேன் எனவும் உறுதிபடக் கூறினான். ஒரு அலட்சிய பாவம் அவனில் இருந்தது. பின்னர் அவன் சொன்னது போலவே நடந்தது.

 

அதே போல கணேஷ் (எ ) வெங்கடேஷ் என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட கைதி ஒருவன் இருந்தான், தனிமைச் சிறையில் அடைக்கவேண்டும் என்றால் உரிய காரணம் கூறவேண்டும் அதனால் என்னை அவ்வப்போது மனநலம் குன்றியவர்கள் சிறையில் அடைப்பார்கள். கைதிகளுக்கு மூளை தணிப்பு மாத்திரைகளை வழங்கி அவர்களை நித்தம் உறங்க வைப்பார்கள். கைதிகள் அங்கேயே மல மூத்திரம் கழித்துவிடுவார்கள் ஆகவே எப்பொழுதும் அந்த அறை…. துர்நாற்றத்துடனேயே இருக்கும். அங்கு தான் அவனைச் சந்தித்தேன், என்னுடன் மிகுந்த பிரியமுடன் இருந்தான் தனது பங்கு காலை உணவை எனக்கு தந்து வற்புறுத்தி ஊட்டிவிடுவான். ஒருமுறை ஒரு அதிகாரி என்னை அவன் முன் அடித்துவிட்டார், மறுநாள் அவனது மலத்தை கரைத்து தட்டில் வைத்திருந்தான் அவர் சுற்று வரும்போது அவர் முகத்தில் ஊற்றிவிட்டான். குளிர்காலத்தில் எங்கள் அறையில் ஒரு இடத்தில் சன்னல் வழியாக வெளிச்சம் முக்கோணமாக விழும், வெப்பம் கொள்வதற்காக முறைவைத்து மூன்று மூன்று பேராக அங்கு நின்று கொள்வோம். அன்று அவன் வரவில்லை, நான் சென்று பார்த்தபொழுது குனிந்துகொண்டு கைகளை தலைமீது முழங்கை மடித்து வைத்து மூலையில் அமர்ந்திருந்தான். நான் சென்று எழுப்பியபோது சரிந்து விழுந்தான், முதல் நாள் இரவே இறந்திருந்ததால் அவனது கண்களை எறும்புகள் தின்றிருந்தன, கண்ணிருக்கும் இடத்தில் நீரும் ரத்தமும் வழிந்துகொண்டிருந்தது. அந்த நட்பை என்னால் மறக்க முடியாது, இந்த இறப்பு என்னை வெகுவாக பாதித்தது.

 

கர்நாடகாவில் ஒருமுறை சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன் அப்போது நான் சாதாரண உடை அணிந்து இருந்தேன். அருகில் ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார் காவலர்களை அவர் கவனிக்கவில்லை. குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் நீட்டினார் நான் இரு கைகளையும் நீட்டும் பொழுதுதான் எனது கை விலங்கு அவருக்குப் புலப்பட்டது, உடனே குழந்தையைத் திரும்ப எடுத்துக் கொண்டார். இது நீண்ட நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் அவமானகரமான சம்பவம்.

 

சித்திர துர்கா சிறையில் நான் 2 ஆண்டுகள் கடிதங்களை படிக்கும் சென்சார் ஆக இருதேன். அவை மிகக் கடினமான நாட்கள். தந்தை சிறையில் இருப்பதை குழந்தைகள் அறியமாட்டார்கள். தந்தையின் வெளிநாட்டு மேலாளருக்கு இப்படி 7 ஆண்டுகள் விடுப்பு கொடுக்காமல் இருப்பது நியாயமா என இறைஞ்சுவார்கள். தந்தைக்கு எப்போது வருவீர்கள் என அனுதினமும் எழுதுவார்கள், நேரில் வரும் தாய் அவர்களை அழைத்துக்கொண்டும் வரவியலாது. கற்பனையில் ஒரு கள்ளத்தொடர்பு கதையை நேற்று நேரில் கண்டது போல புனைந்து தனது மனைவிக்கு கடுமையான வசவுகளுடன் கடிதம் இடுவார்கள், இது மிகுதி. ஒருமுறை எனக்கு அறிமுகமான சுமார் 28 வயதான, பட்டதாரி, முன்னாள் சிறைவாசி, தனது தோழிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் விடுதலையானவுடன் வீட்டுக்குச் சென்றவுடன் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் வெளியே துரத்திவிட்டனர் எனவும், காசில்லாமல் மைசூர் பேருந்து நிலையத்தில் நிர்க்கதியான நிலையில் தவித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிறையில் அறிமுகமான சில பாலியல் தொழிலாளர்களை சந்தித்ததாகவும் அவர்கள் இருக்க இடமும் உணவும் ஒருமாதம் கொடுத்ததாகவும். வேலையில்லாத குற்ற உணர்வால் தானும் சிலநாட்கள் பாலியல் தொழில் செய்ததாகவும், சிறையில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி நடத்திய சாமியார் யார் வேண்டுமானாலும் விடுதலையானவுடன் தனது மடத்தில் வந்து தங்கலாம் எனக் கூறியது பின்னர் தான் நினைவு வந்ததாகவும் ஆகவே நான் அங்கே……… செல்கிறேன் அல்லது தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி இருந்தார். அவருக்கு ஒரே உறவு அந்தப் பெண் சிறைவாசிதான். ஆனால் அவர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றவர், அசல் முகவரியை அவர் அளித்திருக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் என்னால் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அந்த சித்திர துர்கா சாமியார் எனக்கு நன்கு அறிமுகமானவர். பின்னர் ஒருமுறை அந்த மடத்திற்குச் சென்று அவரைப் பற்றி விசாரித்தேன், அவ்வாறு யாரும் அங்கு வரவில்லை. அக்கடிதம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இது போன்ற கடிதங்கள் குறித்து நான் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். இக்கதைகளை நான் நினைவு கூற விரும்பவில்லை, இந்த குறிப்பேட்டையும் நான் மீண்டும் படிக்க விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

பொதுவாகச் சிறைவாசிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புப் பிழையானது என எண்ணுகிறார்களா ?

 

ஒரு குறைவான சதவீதத்தினர் பிழையாகத் தண்டிக்கப்படுகிறார்கள், ஆனால் பொதுவாக தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனையின் கால அளவு அதிகம் என எண்ணுகிறார்கள். எனது நோக்கில் அதிக பட்சம் ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கலாம்

 

இந்த அரசு மற்றும் நீதித்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

 

என்னிடம் 10 லட்சமிருந்திருந்தால் நான் இவ்வளவு நீண்ட சிறைவாசம் அனுபவித்து இருப்பேனா என்பது கேள்விக்குறியே. இன்றைய அரசின்மீது எனக்குப் பெரிய அளவு நம்பிக்கை இல்லை, சதாசிவா ஆணையம் பரிந்துரைத்த பின்பும் உயர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியும் இன்னமும் உரிய இழப்பீடுகளை தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. குற்றம் இழைத்த எந்த அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சில இடங்களில் வழங்கப்பட்ட சொற்ப இழப்பீட்டைக் கூட எந்த காவலர் கற்பழித்தாரோ, அவரே யாரை கற்பழித்தாரோ அப்பெண்ணுக்கே வழங்க வந்தார்,அப்பெண் வாங்க மறுத்துவிட்ட சம்பவமும் நிகழ்த்துள்ளது.

 

இந்திய நீதித்துறையின் நடைமுறைகளும், குற்றம் சாட்டப்பட்ட வரை தண்டிக்கும் முறைகளையும் மாற்றி அமைப்பதுடன், தீர்ப்புகளை விமர்சனத்துக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டும், அப்படிப்பட்ட சமூகம் தான் அறிவியல் பூர்வமான, மனித மாண்புகளை காப்பாற்றும் அமைப்பாக விளங்க முடியும்.

ஒருமுறை மைசூர் மாவட்டம் கொல்லேகால் நீதிமன்றத்தில் எனக்கு கொடுத்த குற்றப்பத்திரிக்கை நகலை நான் படித்து தெரிந்து கொள்ள வேண்டி ஒரு நகலை தமிழில் கேட்டேன், தமிழில் கொடுக்க இயலாது என்றார், என் மீது என்ன குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது என்பதை நான் அறிய வேண்டாமா என்று கேட்டதிற்காக ஒரு பெண் மேஜிஸ்ட்ரேட் நான் வீரப்பனின் கூட்டாளி என்பதை அறிந்தவுடன் பேப்பர் வெயிட்டைத் தூக்கி என் மீது வீசினார், நான் நகர்ந்து கொண்டதால் காவலுக்கு வந்த உதவி ஆய்வாளர் மீது பட்டது. சட்டத்தின் அடிப்படையிலும் வாதத்தின் அடிப்படையிலும் நீதித்துறை இயங்குகிறது எனக் கூற இயலாது சூழலுக்குத் தக்க அல்லது நீதிபதியின் தன்மைக்கு தக்க தீர்ப்பு மாறுகிறது. ஆனாலும் ஒப்புநோக்க நீதித்துறை மீது எனக்கு சற்று நம்பிக்கை உள்ளது.

 

நீங்கள் எப்படி இடதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்டீர்கள் ?

 

எனது சேலம் சிறைவாசம் முக்கியமானது. 1999 இல் சேலம் சிறையில் இருக்கும்போது நெடுஞ்செழியன் என்கிற ஆசிரியரை சந்தித்தேன், அவர் சிறையில் இருக்கும் பள்ளியின் ஆசிரியர். சில சமயம் வெளியில் இருந்து புத்தகங்களையும் கொண்டுவந்து தருவார். அப்படித்தான் நான் முதன்முதலில் படித்த புத்தகம் ஸ்பார்ட்டகஸ். பட்டாம்பூச்சி சிறையில் தடைசெய்யப்பட்ட புத்தகம் என்பதால் அதை பல்வேறு பகுதிகளாக பிரித்து தந்தார், அதை முழுவதும் பலமுறை சிறையில் படித்திருக்கிறேன், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் அதைப்படித்து உயிர்ப்பு கொள்வேன்.

 

சென்னை மத்திய சிறை தவிர்த்து பிற சிறைகளில் கழிவறை வசதிகள் இல்லை, ஆகவே ஒவ்வொரு கைதிக்கும் ஒரு மல சட்டி அளிக்கப்படும், தினமும் அதை பயன்படுத்தி விட்டு அவரே அதை அப்புறப்படுத்த வேண்டும், இதை என்னால் ஏற்க இயலவில்லை. ஆகவே கழிவறை கட்டித்தர வேண்டி ஒரு போராட்டம் நடத்த முடிவு செய்தேன், நான் எனது மலச் சட்டியை உடைத்துவிட்டேன். ஒரு வாரத்திற்கு எனக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை வேறொரு மலச் சட்டியும் அளிக்கப்படவில்லை. தினமும் ஒரு மழைக் காகிதம் அளிக்கப்படும் அதில் கழித்துவிட்டு மலத்தை நானே கட்டி அப்புறப்படுத்தவேண்டும்.

 

பின்னர் நான் பிற சிறைவாசிகளிடம் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு பெற்றேன். சேலம் சிறை முழுவதும் ஒரே நேரத்தில் நாங்கள் அனைவரும் மலச்சட்டியை போட்டு உடைத்து விட்டோம், ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதன் பிறகு இந்த போராட்டம் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய சிறைகளில் கழிவறை இல்லாதது அப்பொழுதுதான் உயர்நீதிமன்றத்திற்கு தெரியவந்தது அந்தந்த மாவட்ட நீதிபதி நேரில் சென்று கழிவறையை உள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பணித்தனர். பின்னர் எல்லா சிறைகளிலும் கழிவறை கட்டித் தரவேண்டும் என ஆணையிடப்பட்டு தற்போது எங்கும் கழிவறைகள் உள்ளது.

 

இந்த போராட்டத்தின்போது நான் கடுமையாக தாக்கப்பட்டேன், என்னை தனிமைச் சிறையில் தள்ளி மூன்று நாட்கள் கையையும் காலையும் கட்டி வைத்து எனது புட்டத்தில் பலமாக லத்தியால் அடித்தனர், நான் படுக்காமல் இருக்க தரையில் தண்ணீரை ஊற்றி விடுவார்கள். பின்பு ஒரு நாள் இடைவெளி விடுவார்கள் ரத்தம் கன்றி விடும், மீண்டும் அதே இடத்தில் அடிப்பார்கள் கன்றிப்போன இடத்தில் காயம் கிழிந்து ரத்தம் தெறிக்கும். இரண்டு நாட்களில் சீழ் பிடித்துவிட்டது. என் உடலிலிருந்து வரும் இந்த சீழ் வாடையை என்னாலேயே தாங்க முடியவில்லை, காலைக் கடன்களை கழிக்க இயலவில்லை, சிறை அதிகாரி என்னை பார்த்து போராட்டத்தை வாபஸ் பெறுகிறேன், நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன் என எழுதி கையெழுத்திடுமாறு கூறினார், அவ்வாறு செய்தால் மீண்டும் சாதாரண சிறைக்கு மாற்றி விடுவதாகவும் கூறினார். நாட்கள் செல்ல செல்ல எனது உறுதிப்பாடும் குறையத் தொடங்கியது, ஒவ்வொரு நாளும் மறுநாள் காலை அதிகாரி வரும்போது கையெழுத்து செய்துவிடலாம் என நினைப்பேன் ஆனால் மறுநாள் எனது உறுதிப்பாடு குறையாது தாக்குப்பிடித்து தலையை அசைத்து மாட்டேன் என கூறி விடுவேன். எனது தாக்குப் பிடிக்கும் எல்லையில் எம் எல் இயக்கத்தை சேர்ந்த சிவா என்பவர் சிறை அதிகாரிகளிடம் தகராறு செய்து தனிச் சிறையில் அடைக்கப்பட்ட என்னைப் பார்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்து பார்க்க வந்தார் நான் பாதி மயக்க நிலையில் பின்புறம் முழுவதும் சீழ் காயத்துடன் ஈரத்தில் குப்புறப் படுத்திருந்தேன், அவர் எனது தோளை தொட்டு “தோழர்” என்றார், அதுதான் ஒருவர் என்னை தோழர் என விளித்த முதல் முறை, அதுவே பொதுவுடமை சித்தாந்தம் என்னை தீண்டிய கணம். பின்னர் சில வருடங்கள் கழித்து சிவா என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

 

சேலத்தில் தான் தங்கவேல் என்கிற இடதுசாரி சிந்தாந்தவாதியை சந்தித்தேன், அவரும் கைதி தான். அவர் தான் எனக்கு மார்க்சியம், பொருள்முதல்வாதம், உபரி கோட்பாடு, வர்க்கபேதம் முதலியவற்றை கற்றுத்தந்தார். ஓயாமல் அவருடன் வாதித்துக் கொண்டே இருப்பேன். அங்குதான் டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்”, கார்க்கியின் “தாய் ” , கன்னி நிலம், கண் தெரியாத இசைஞன் போன்றவற்றையும் படித்தேன். இலக்கிய சுவையை அறிந்துகொண்டேன்.

 

 

அன்புராஜ் மைசூர் சிறையில் ஓர் இதழாசிரியராக



சிறை என்றாலே கடந்தகால நினைவுகள், இழப்புணர்வு, சுதந்திர ஏக்கம், குறுகிய இடப்புழக்கம் ?

 

ஆம். சேலம் மத்திய சிறையில் C P பிளாக் சிறை வெளிச்சம் புகா கதவால் மூடப்பட்டு, சுவற்றில் உயரமாக ஒரு சிறிய ஜன்னல் மட்டும் இருக்கும் இடம். சன் ஷேட் இருக்காது. மழைக் காலத்தில் நேராக மழை உள்ளே பெய்யும். சன் ஷேட் கட்டித்தரச் சொல்லி மனுக்கொடுத்தோம், நிதி இல்லாமல் இல்லை, வேண்டுமென்றே தான் அவ்வாறு வடிவமைத்திருக்கிறோம் என சிறை அதிகாரி் (IG) கூறிவிட்டனர். சிறைக்குள் தண்டனையாக சிலசமயம் அதில் அடைபட்டிருக்கிறேன். காலை வெளிச்சத்திற்காக காத்திருப்பேன், அது ஒரு நன்னம்பிக்கைத் தருணம். ஆனால் வெளிச்சம் வந்ததும் முதலில் தெரிவது ஒரு பட்டுப்போன மரம். அதை அகற்றுமாறு பலமுறை மன்றாடி இருக்கிறேன். இரவில் சரியாக 11 மணிக்கு ஒரு ஆட்காட்டிக்குருவியின் “டிட் டூய்” சப்தம் கேட்கும். உடனே சுதந்திரவெளியும் நினைவுகளும் என்னை வருத்தும். ஆரம்பத்தில் நான் சந்தித்த பெரிய சவாலே இந்த ஆட்காட்டி கத்துவதற்கு முன் தூங்குவது. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஓரிரு ஆண்டுகளில் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவேன். ஒரு வீட்டைக் காலி செய்துகொண்டு இன்னொன்றுக்கு போவது போலத்தான், பிரிவின் ஏக்கம் தொற்றிக் கொள்ளும். தமிழகத்தில் இடவசதி குறைவு, கர்நாடகத்தில் இடமும் சுதந்திரமும் சற்று அதிகம். எனது புத்தகங்களை வைப்பதற்கு எப்போதும் கதவிடுக்கிற்கு அருகே உள்ள இடத்தை நான் பிடித்துக் கொள்வேன்.

 

சிறையில் சிறை விதிகள் கடைபிடிக்கப் படுவது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா ?

 

பதில்: இல்லை, சிறை அமைப்பு முறையே , இந்திய மக்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக உள்ளது.

 

 நடைமுறையில் உள்ள சிறை விதிகள் அனைத்தும் 1800க்கு பிறகு இந்திய சுதந்திரப் போர் உக்கிரம் அடைவதை கருத்தில் கொண்டு இம்மக்களை ஒடுக்க கடுமையான ஒரு சட்டம் தேவைப்பட்டது ,  ஆங்கிலேய அரசு இந்த சிறை சட்டத்தை மெக்கலோவை வைத்து வடிவமைத்தது. 

இதில் 1947க்கு பின் அதாவது 1956 மொழிவாரி மாநிலம் பிரியும் போது இவர்கள் தமிழ்நாடு Tamil Nadu prison manual, Karnataka prison manual என்று பெயரை மட்டும் மாற்றி பழைய prison manual க்கு பங்கம் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியுடன் விடுதலைக்கு பிறகும் எந்த வெட்கமும் இல்லாமல் வெள்ளை அரசு போட்ட சட்டத்தை சுதந்திர இந்தியா தன் குடிமக்கள் மீது பிரியோகித்து வருகிறது.

 

சிறைவாசிகளின் உணர்வை மழுங்க  செய்வது, அடிபணிய வைப்பதும என்பது தான் இன்றய சிறை விதிகளின்  பிரதான நோக்கமாக உள்ளது. சிறை

மனித மாண்புகளுக்கு மதிப்பளிக்கும் இடமாக மாற வாய்ப்பு குறைவாக உள்ளது.

 

இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய சிறைகள் பற்றியோ , சிறை சட்டங்கள் பற்றியோ இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை, தனிமனிதர்களாக நின்று சிறைவாசிகள் போராடியதின் பொருட்டும் , நல்ல வழக்கரிஞர்கள் , சமூக பார்வை உள்ள நீதிபதிகளாலும் மட்டுமே சிறைச் சாலைகளில் சிறைவாசிகள் உரிமை ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளது.

 

அகண்ட லட்சியம் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்களுக்கும் விழுமியங்களுக்கும் எதிராகவும் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் தான் சிறை விதிகள் உள்ளது

 

நீதிமன்றத்தில் சம வாய்ப்பு வழங்குதல் நடைமுறையில் எவ்வாறு உள்ளது, உங்கள் வழக்கு விசாரணை உங்களுக்கு திருப்தி அளித்ததா ?

 

பதில்: என்னை பொருத்தவரை நீதி பரிபாலனையில் நீதிதுறையின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும்

 இச்சமூகத்தை பற்றி அகண்ட பார்வையற்றவர்களாகவே பெரும்பான்மையான நீதிபதிகள் இருக்கிறார்கள் என்ற சொல்லை நான் பெரும் சங்கடத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.

 

தங்களிடம் இருக்கும் அளவுகடந்த அதிகாரத்தை இச்சமூகத்தின் அநீதிக்கு எதிராக பயன் படுத்துவதில் அச்சம் அல்லது அல்லது ஏதோ ஒருவிதத்தில் தயக்கம் காட்டுகிறார்கள்.

 

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்புகள் வழங்குவதில் தாமதம், தீர்ப்பு தெளிவின்மை, போன்ற காரணங்கலால் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வது,

சிறுசிறு குற்றங்களில் வரும் மற்ற மனிதர்களிடம் வீராப்பாக நிற்பதும் சஞ்சய் தத் போன்ற மனிதர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதுமான இம்முரண் நீதிபரிபாலனையில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையின் மேல் பெரும் அதிருப்தி உண்டாகிறது.

 

90 வயதில் உள்ள முதியவர் ஒருவருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கொடுக்கும் ஒரு இயந்திரத் தண்மையை பார்க்க முடிகிறது, நீதிமன்றத்தை புனிதப் படுத்தும் போக்கு தான் தீர்ப்புகளை விமர்சனம் செய்யகூடாது என்கிற உச்சகட்ட ஜனநாய மறுப்பாக மாறி நம் சமூகத்தில் நிலவ காரணமாக இருக்கிறது

 

பெரும்பகுதியான நீதிபதிகளின் மன நிலை சிறைவாசிகள் நீதிமன்றத்தில் வாய்திறக்கவே விடுவதில்லை, உங்கள் லாயரப் பேச சொல்லு என்று அடக்கிவிடுகிற போக்கும் உள்ளது

 

தமிழகத்தில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதுக்கு எதிராக தோழர் ப.பா மோகன் அவர்கள் தான் வாதாடினார், கீழ் நீதிமன்றம் 10  ஆண்டு தண்டனை கொடுத்தது , உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது

 

கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது நான் ஒருமுறையீடு செய் செய்தேன் என் மீது போடபட்டுள்ள வழக்குக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை எனவும் இந்த வழக்கு (1995) நடக்கும் போது எனக்கு வயது15 நான் பள்ளிகூடம் சென்று கொண்டு இருந்தேன் எனவும் கூறினேன். நீதிபதி அலட்சியமாக வழக்கு நடக்கும் போது இதை சொல் என்றார். இப்படித்தான் சாமான்யரிடம் நீதிபரிபாலனை செய்யும் போது மிக அவர்கள் குரலை எளிமையாக கடந்துவிடுகிறார்கள்.

 

கர்நாடகா வழக்கை பொருத்தவரை என் மீது போடப்பட்ட வழக்கில் நான் குற்றம் செய்துள்ளேன், நான் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்று வழக்காடவே இல்லை, இந்த குற்றத்தை வீரப்பன் செய்தார் நாங்கள் அவருடன் இருந்தோம் அதானால் அதிகபட்ச தண்டனை வீரப்பனுக்கு கொடுங்கள்

எங்களுக்கு குறைந்த தண்டனை கொடுங்கள் என்றேன், இதச 364A க்கு அதிகபட்ச தண்டனை மரணதண்டனை குறைந்த பட்ச தண்டனை ஆயுள் தண்டனை, அதனால், இரண்டாவது தண்டணை கிடைத்தது. அதை முழுமையாக ஏற்றுக்கொண்டேன்

 

நீதிமன்ற நடைமுறைகளை குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்தி தப்புகிறார்களா ?

 

ஆம் கண்டிப்பாக. சாட்சி மட்டுமே நீதிமன்றத்துக்கு தேவை என்ற கோட்பாடு கூட குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள காரணமாக உள்ளது. 10 கொலை 20 கொலை செய்த ரவுடிகள் ஒரு நாளும் வெள்ளை துணி போடாமல் (தண்டிக்கப்படாமல்) விடுதலையான ஏராளமான சம்பவங்களை சொல்ல முடியும்,

 

மறுபுறம் குற்றமே செய்யாமல் பொய்சாட்சி அடிப்படையில் தண்டனை அனுபவிப்பவர்களும் எனக்கு தெரியும். சாட்சி அடிப்படையில் மட்டுமல்லாமல் குற்ற நிகழ்வுகளை பல்நோக்கு பார்வைகளுடன் அணுகும் நீதிபதிகள் வர வேண்டும். தீர்ப்புகளில் இயந்திரத்தன்மை ஒழிக்கப்பட வேண்டும்.

 

தவறாக குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் சம்மந்த பட்டவரின் நியாயங்களை மணிக்கணகில் வாதிடுவார், நீதிபதிக்குகும் வக்கீல் சொல்வது சரி என்றுபடும். ஆனாலும் எதற்கு ரிஸ்க் எடுக்கனும் என்று சொல்லி சந்தர்ப்ப சூழ்நிலை அடிப்படையில் தண்டனையை கொடுத்து விடுவார், பின்னர் மேல் கோர்ட்க்கு போய் பார்த்துக்கப்பா என்று கூறுவார். கீழ் கோட்டுக்கும் மேல்கோட்டுக்கும் இடையில் உள்ள சிறைவாசியின் வாழ்க்கையை இழந்த இளமையை யார் கொடுப்பது?

 

ஒரு குற்றத்தை விசாரனைக்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு மிக அதிகம். குற்றம் நடந்து 3 லிருந்து 5 அல்லது 10 ஆண்டுகள் கூட நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது. இந்த கால நீளத்தால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கிற சாட்சிகளின் உறுதித் தன்மையில் நெகிழ்வு ஏற்படுகிறது இதனாலும் குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள்.


அன்புராஜ் 18 வருட சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானபோது


 

இறுதி கேள்வி, குற்றம் செய்தல் மற்றும் மனம் திரும்புதல் ஆகியவற்றில் உங்கள் அனுபவம் என்ன ?

 

 

18 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை ஆனேன்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம்  தாளவாடியில் வீரப்பனின் குழுவுடன் சேர்ந்து ஒன்பது வன அதிகாரிகளை கடத்தினோம். அந்த அதிகாரிகளை நாற்பத்தேழு நாட்கள்  பணயக் கைதிகளாக வைத்திருந்தோம். அந்த  ஒன்பது வன அதிகாரிகளில் நான்கு பேர்  ஏற்கனவே இறந்துவிட்டதை விசாரித்து அறிந்து கொண்டேன். மீதி  ஐந்து பேரை  பார்க்க முயற்சி செய்தேன். இருவர் என்னை  பார்க்க சம்மதிக்கவில்லை.

பார்க்க சம்மதித்த மூன்று அதிகாரிகளில் கர்நாடக மாநிலம் கொல்லேகாலில் உள்ள வனத்துறை அதிகாரி திரு. வேலாயுதனின் வீடுதான் என் முதல் இலக்கு.  நான் கொல்லேகால் சென்றபோது திரு வேலாயுதனின்  பேரனுடைய பிறந்த நாள் கொண்டாட்டம்.  என்னைப் பார்த்தவுடன் அறிமுகமில்லாத நபரை எதிர்கொள்வது போல உள்ளே அமரச்சொல்கிறார். திரு. வேலாயுதன்  ரேஞ்சராக (forest ranger) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  “நான் அன்புராஜ்” என்று  என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  அவருக்கு  என்னைத் தெரியவில்லை. “சார், நான்தான் அன்புராஜ்,  வீரப்பனின் குழுவை சேர்ந்தவன். உங்களை  கடத்தியிருக்கிறேன்" என்றேன். நினைவு வந்து என்னை சினத்துடன் பார்த்தார். ஒரு நிமிடம். அவரை  கட்டித்தழுவி என் உடலால் மன்னிப்பு கோரினேன். சடுதியில் அனைத்தையும் மறந்து என்னை தன் குடும்பத்துக்கு அறிமுகப் படுத்தி விருந்து பரிமாறினார். அவர் கடந்த மாதம் காலமாகும் வரை என் நண்பராக திகழ்ந்தார். எப்போது மைசூர் சென்றாலும் வழியில் அவர் ஊரில் இறங்கி கொண்டுவந்த பழங்களை பரிசாக கொடுப்பேன்.

 

அடுத்தது  நாங்கள்  பணயக் கைதியாக  வைத்திருந்த மற்றொரு அதிகாரியின் வீடு (அதிகாரியின் பெயர் குறிப்பிடவில்லை). பணயக் கைதியாக வைக்கப்பட்ட 9 அதிகாரிகளும்   மரணத்தை  நேருக்கு நேர் எதிர்கொண்டவர்கள். 47  நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்களில்  பலர் மனதளவில் தளர்ந்திருந்தனர்.  கூடவே, மீண்டும் கடத்தப்படுவோம்  என்ற அச்சம்.  இப்போது நான் சந்திக்கும் இந்த அதிகாரி விடுவிக்கப் பட்டபின் மனப்பிறழ்வு நிலைக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அவரது  மனைவி தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிகாரியை சந்தித்து நிலையை அறிந்த பின் ஒன்றும் சொல்லாமல்  அங்கிருந்து திரும்பி வந்து விட்டேன்.

 

கடைசியாக, நான் பார்க்கச் சென்ற மற்றொரு அதிகாரி (பெயர் குறிப்பிடப்படவில்லை)  மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டிருந்தார். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தான் வந்த நோக்கத்தை சொன்னேன். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர் “உன்னால் தான் எனக்கு பதவி உயர்வு கிடைத்தது”  என்று சொல்லிவிட்டு என்னை மது அருந்த அழைத்தார்.

 

(முற்றும்)

Comments