Skip to main content

2. பேட்டி - விக்னேஷ் ஹரிஹரன்

 

சென்னையில் 1999 ஆம் ஆண்டு ராஜகோபாலன், சீதா தம்பதிக்கு மகனாக பிறந்தார் விக்னேஷ் ஹரிஹரன். SSM உயர்நிலைப் பள்ளியில் மேல் நிலை கல்வி முடித்து, தற்போது தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். ஒரு பயணத்தில் மதுரையில் அவரை சந்தித்து செய்த நேர்காணல் இது.

A S Krishnan, Advocate, Erode.

1. சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது ?

அடிப்படையில் humanities and social sciences சார்ந்த ஆர்வம் பள்ளி நாட்களிலிருந்தே இருந்தது. ஆனால் வரலாறு, சமூகவியல் என்று ஒரு துறை சார்ந்து என்னை  குறுக்கிக்கொள்ள விருப்பமில்லை. தவிர அப்பாடங்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே இவை அனைத்தும் கலந்த ஒரு காக்டெய்ல் பாடத்தை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என் ஆங்கில ஆசிரியைதான் சட்டம் படிக்கும் யோசனையை வழங்கினார். சிறு வயதிலிருந்தே பேச்சுப் போட்டிகளில் ஆர்வமிருந்ததால் நானும் ஒப்புக்கொண்டேன்.

2. கல்லூரி பாட திட்டத்துக்கும் நடைமுறை வழக்கறிஞர் தொழிலுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்கிற கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

உண்மைதான். சட்டமும் நடைமுறையும் என்ற சொல்லாடல் அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களும் அறிந்ததே. சட்டம் வேறு நடைமுறை வேறு என்பதுதான் நிஜம். சட்டம் தெரிந்துவிட்டதால் மட்டுமே ஒருவர் வழக்குரைஞராகிவிட முடியாது. என் ஆசிரியர் சட்டம் படிப்பவர்களில் மூன்று வகைகள் உண்டு என்பார். சட்டக் கல்லூரியில் தேர்ச்சி பெறும் பட்டதாரி (Law graduate). உண்மையாகவே சட்டத்தின் நுணுக்கங்களை புரிந்து கொண்ட Lawyer.  சட்டத்தின் நுணுக்கங்களை அவற்றின் நடைமுறையோடு சேர்த்து புரிந்துகொண்டவர் Advocate. 

3. உங்கள் சக மாணவர்களிடம் நீங்கள் காணும் தர வேறுபாடு என்ன ? நீதிபதி போட்டித் தேர்வு, வழக்கறிஞர் தொழில்புரிதல் இதில் மாணவர்களுக்கு எதில் ஆர்வம் மிகுதி ?

தர வேறுபாடு என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. என் சக மாணவர்களில் தன் அரசியல் வாழ்க்கைக்கு உதவும் என்று சட்டம் படிப்பவர்களில் தொடங்கி நீதிபதிகளாக வேண்டும் என்று சட்டம் படிப்பவர்கள் வரை அனைவரும் அடக்கம். பொதுவாக என் நண்பர்கள் வழக்குரைஞர்களாவே விரும்புகிறார்கள். நீதிபதியாகும் கனவுகள் கொண்ட நண்பர்களும் சிறிது காலம் வழக்குரைஞராக பயிற்சி பெற்ற பிறகே தேர்வுகளை எழுத நினைக்கிறார்கள். மிகச் சிலரே நேரடியாக நீதிபதி போட்டித் தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அதி தீவிர பற்றுடைய மாணவர் முதல் பொழுது போக்குக்காக படிக்கும் மாணவர் வரை வண்ண வேறுபாடு உண்டு. பெண்கள் சிலர் திருமணத்தை தள்ளிப் போடவோ அல்லது திருமண வாய்ப்பை கூட்டிக் கொள்ளவோ படிக்கிறார்கள். தீவிர ஆர்வம் உடைய மாணவர்கள் சிலர் சட்டத்தை ஒரு உயிரற்ற பொருள் போல பாவித்து சடலக் கூராய்வு செய்வதும் உண்டு. வெகு சிலர் உயிரோட்டமானவர்கள். இதை ஒரு விளையாட்டு வீரரின் துடிப்புடன் அனுகுபவர்கள். இவர்களே என் முன் உதாரணம். 

4. உங்கள் பாட திட்டம் எவ்வளவு தாள்கள் கொண்டது, எவ்வளவு தேர்வுகள் ?

நான் படிப்பது தஞ்சாவூர் சாஸ்த்ரா சட்ட கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு BA LLB Hons., இது 5 ஆண்டு படிப்பு. எங்களுக்கு மொத்தம் 56 தாள்கள் உள்ளது, பத்து அரையாண்டு தேர்வுகள். 

5. இந்த பாட திட்டத்தின் போதாமைகள் என்ன ? என்ன பாடம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?

முதலில் குறிப்பிட்ட நடைமுறை சார்ந்த போதாமைகளையே அதிகம் உணர்கிறேன். உதாரணமாக நில உரிமை சார்ந்த சட்டங்களை படிக்கிறோம். ஆனால் நிலம் சார்ந்த சரியான  தகவல்களை எப்படி அரசு ஆவணங்களிலிருந்து பெறுவது, TNReginet போன்ற இணையதளங்களை எப்படி பயண்படுத்துவது, நிலத்தை எப்படி அளப்பது, sketch செய்வது, போன்றவற்றை பற்றிய சரியான நடைமுறைப் பாடங்கள் இருப்பதில்லை.

 

சமூகவியல் சார்ந்த தீர்ப்புகள் வருகிறது, ஆனால் பாட திட்டத்தில் இது போதுமான அளவு இல்லை. தொழிலாளர் சட்டம் திவால் சட்ட வழக்குகள் நிறைய உள்ளது. ஆனால் பாடத்திட்டத்தில் இது போதுமான அளவு இல்லை என்று நினைக்கிறேன். 




6. இப்போது நீங்கள் வெளியே பார்க்கும் வழக்கறிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்களுக்கு போதிய சட்ட அறிவு உள்ளது என எண்ணுகிறீர்களா ? நீங்கள் மதிக்கும் உங்கள் முன் உதாரண வழக்கறிஞர்கள் சிலரை குறிப்பிட முடியுமா ?

என் internshipகளில் நான் கண்ட வழக்குரைஞர்கள் பெறும்பாலும் மிக அறிவார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். சட்டம் சார்ந்த அறிவைவிடவும் நடைமுறை சார்ந்த நுட்பமான புரிதல்களை எனக்களித்திருக்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்த Legend வழக்கறிஞர் நானி பால்கிவாலா தான். சமீபத்தில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் தன் வாதங்களை சமர்பிப்பதை இணையம் வழி பார்த்தேன். 5 வயது குழந்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒருசேர ரசிக்கக்கூடிய அளவில் வாதங்களை சமர்பித்தார். அன்று முதல் அவருடைய ரசிகனாகிவிட்டேன்.

 

ஆனால் ஆறு ஆண்டு அனுபவம் உள்ள வழக்கறிஞர் ஒருவர் தன்னால் எழுத இயலாது என ஒரு உரிமையியல் வழக்குரை எழுத என்னை பணித்தார். உரிய கட்டணமும் வழங்கினார். இது அவ்வளவு சிக்கலான வழக்கு ஒன்றும் அல்ல என்பதால் திறன் குறைந்த வழக்கறிஞர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

7. தற்போது பிறப்பிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளை படிக்கிறீர்களா ? நீங்கள் சமீபத்தில் படித்த தீர்ப்பு என்ன ? உங்களை கவர்ந்த நீதிபதி யார் ?

தொடர்ந்து படிக்கிறேன் . Rajesh pawar v. Parvatibai Bende என்ற வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றம் கணவனின் இறப்புக்குப் பிறகு விதவைகளால்  தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு இறந்த கணவனின் சொத்தில் உரிமை இல்லை என்று தீர்பளித்திருக்கிறது. இது மிகவும் வித்தியாசமான பழமைவாத தீர்ப்பு. இது மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், மிக அவசியமான சில சட்டங்கள் சார்ந்த திறப்புகள் அமையக்கூடும். நீதிபதிகளில் நீதியரசர் ரோஹிந்தன் நரிமானும், நீதியரசர் Earl Warren உம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். நீதியரசர் Earl Warren முன்னால் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. அவர் தான் 1960 களில் இன பாகுபாடுக்கு எதிராக Brown v. Board of education என்ற முக்கியமான தீர்ப்பை வழங்கினார். அது ஒரு மிகச் சிறந்த judicial activism. இது அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல் கல். ஒரு தீர்ப்பு சமூக மாற்றத்திற்கும், முற்போக்கு சட்ட உருவாக்கத்துக்கும் நேரடியாக வழி வகுத்தது அதுவே முதல் முறை. 

8. ஏதேனும் சட்டம் நியாயமற்றது என எண்ணுகிறீர்களா ?

 சட்டம் யாருக்கு நியாயமாக இருக்க வேண்டும் என்பதே வாதத்திற்குறியதுதான். ஆனால் சில சட்டங்கள் அடிப்படையில் காலாவதியான விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். உதாரணமாக தற்கொலை முயற்சிக்கு தண்டனை என்பது பழைய பார்வை. ஒருவரின் உயிர் அரசின் சொத்து அல்ல. தற்கொலை முயற்சி ஒரு மன நல பிரச்சினையாகவே அணுகப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

9. இந்த நீதித்துறை, வழக்கு நடக்கும் முறை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா ? என்ன மாற்றம் வேண்டும் என எண்ணுகிறீர்கள் ? தற்போது சட்டத்தின்.ஆட்சி, judicial activism பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 வெறும் சட்ட மாணவனாக வெளியிலிருந்து பார்க்கையில் அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது. நீதித்துறையின் வேகமின்மை, வழக்குகளின் தேக்கம் என்று ஒரு பட்டியல் போடலாம். ஆனால் அவற்றுள் அத்துறையின் தவறுகள் மிகக் குறைவே. அவற்றின் காரணிகள் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் என்று பல கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. சட்டத்தின் ஆட்சி (Rule of law) சார்ந்த என் பார்வைகள் சற்று மாறுபட்டவை. Dicey முன்வைத்த இந்த கோட்பாடு காலாவதியானது என்றே நான் நினைக்கிறேன். Judicial activism மிகவும் அவசியமானது என்று நினைக்கிறேன். ஆனால் judicial activismக்கும் judicial adventurism க்கும் ஒரு மெல்லிய இடைவெளிதான் இருக்கிறது. Judicial adventurismக்கு இரண்டு உதாரணங்கள். முதலாவது விசாகா பாலியல் சீண்டல் வழக்கின் தீர்ப்பு. சட்ட இயற்றதிற்கு முன்பே ஒரு அரசு என்ன செய்ய வேண்டும், நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறபித்தது அவ்வழக்கு. அடுத்தது நீதியரசர்  VR கிருஷ்ணய்யர் வழங்கிய Jolly George Verghese v. Bank of Cochin என்ற வழக்கு. கடனாளிக்கு உரிமையியல் வழக்கில் வழங்கப்படும் சிறை தண்டனைக்கு சட்டத்தில்  இல்லாத சில முன்நிபந்தனை சரத்துக்களை அவர் தீர்ப்பில்  உருவாக்கினார் என்று நினைக்கிறேன்.

10. நீதிபதிகளை நியமனம் செய்யும் உச்ச நீதிமன்ற collegium முறை பற்றி உங்கள் கருத்து என்ன ?

 Collegium முறையில் எனக்கு உடன்பாடில்லை. அந்த முறை எனக்கு வாட்டிகன் போப்பின் நியமன முறையின் ஒரு கடுமையான வடிவமாகவே தோன்றுகிறது. நீதித்துறையின் சுதந்திரமும் வெளிப்படைத்தன்மையும் எதிர் பதங்கள் அல்ல என்று நினைக்கிறேன். வெளிப்படையான நீதிபதிகளின் நியமனமே நீதித்துறையின் சுதந்திரத்தை காக்கும் என்று நினைக்கிறேன்.

11. ஊடகத்தில் நீதிமன்றம் சித்தரிக்கும் முறை, திரைப் படத்தில் காட்டப் படும் நீதிமன்றம் பற்றி உங்கள் கருத்து என்ன ? சட்டம் தொடர்பாக நீங்கள் பரிந்துரைக்கும் திரைப்படம் ?

 நீதிமன்றத்தை உள்ளபடி அப்படியே ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் காட்ட முடியாது என்றே நினைக்கிறேன்.  திரைப்படங்களில் காட்டப்படும் விளையாட்டுகள் விளையாட்டல்ல, மருத்துவமனை மருத்துவமனையல்ல, வரலாறு வரலாறல்ல, அனைத்தும் கற்பனையான சித்தரிப்புகளே. ஹாலிவுட் படங்களும் அப்படித்தான்.

எனவே நீதிமன்றங்களையும் அந்த அளவிலேயே நடத்தவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் சகிக்க இயலாத அபத்தமான சித்தரிப்புகளைக் கொண்டவை.

 

விதி விலக்காக நான் பார்த்த Court by Chaitanya Tamhane என்கிற மராத்தி படம் நீதிமன்றத்தை நெருக்கமாக காட்டியது.

 

12. இது வருவாய் அற்ற தொழில் என்கிற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 இது ஒரு தவறான கருத்து என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது சட்டம் ஒரு நல்ல வருவாய் ஈட்டக்கூடிய தொழில்தான். சாதாரண வழக்குரைஞராக மட்டுமின்றி இன்று சட்டப் படிப்பிற்கான வாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளன. சட்ட நிறுவனங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரிகள்  என்று இப்போது பல்வேறு வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.

13. வேறு படிப்புகளுக்கு இடம் கிட்டதவர்கள் சட்டப் படிப்பை நாடுகிறார்கள் என்கிற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

என் ஆசிரியர்களும் எனக்கு தெரிந்த சில வழக்குரைஞர்களும் அவர்கள் காலத்தில் அப்படி இருந்ததாக சொல்வார்கள். இன்று பார் கவுன்சிலின் பல சீர்திருத்தங்களால் நிலைமை பெருமளவு முன்னேறியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இன்று சட்டக்கல்லூரியில் இடம் கிடைப்பதும் அத்தனை எளிதான காரியமல்ல.

 

14. வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்கிற கோரிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன ?

 தமிழ் ஒரு மாற்று வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்படலாம். வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகள் இருப்பது மக்கள் நீதிமன்றங்களை அணுகுவதற்கும், நீதிமன்றத்தின் செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் வழக்கின் தன்மையையும் நீதிபதிகளின் அனுமதியையும் பொருத்தே வழக்கிற்கான வழக்காடு மொழி முடிவு செய்யப்பட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

15. சட்டம் தொடர்பாக பாட திட்டத்துக்கு வெளியே எதையெல்லாம் படிக்கிறீர்கள் ? நீங்கள் படித்த பிற புத்தகங்கள் ? பிற நாட்டு நீதிமன்ற நடைமுறை பற்றி படித்துள்ளீர்களா ?

 பிற நாட்டு நீதிமன்ற நடைமுறைகளை ஓரளவு வாசித்திருக்கிறேன். பாடம் அல்லாத பிற சட்டம் சார்ந்த புத்தகங்களை தொடர்ந்து வாசிக்கிறேன். சமீபத்தில் வாசித்த East West Street by Phillipe Sands ஒரு பிரமாதமான புத்தகம். இரண்டாம் உலகப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை மனித குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை  என்று முதல் முறையாக இரண்டு வகைப்படுத்தினார்கள். அதற்கு பிறகான ஒரு நூற்றாண்டில் இவ்விரு சொற்களும் சர்வதேச சட்டங்களின் மையப் பேசுபொருட்களாகிவிட்டன. அவ்விரு கருத்துக்களையும் உருவாக்கிய இரு சட்ட ஆசிரியர்களின் வாழ்க்கையையும் அக்கருத்துக்களின் வளர்ச்சியையும் ஒருசேரச் சொல்லும் புத்தகம் இது.

16. உங்கள் பிற துறை புத்தக வாசிப்பு சட்ட வாசிப்புக்கு உதவுகிறதா ? ஒரு உதாரணம் கூற இயலுமா ?

 நிச்சயமாக உதவுகிறது. சட்டம் தனித்துச் செயல்படக்கூடியதல்ல. பிறவற்றை நெறிப்படுத்துவதே சட்டத்தின் வேலை. எனவே அனைத்து துறைகள் சார்ந்த வாசிப்பும் சட்டத்திற்கு உதவக்கூடியவையே என்று நினைக்கிறேன். Jurisprudenceஇல் Roland Barthes கூறிய Death of the author என்கிற பதத்தை நான் தவறாக புரிந்துகொண்டு இருந்தேன். ஆனால் Roland Barthesஐ நான் சரியாக உணர்ந்தது இலக்கிய வாசிப்பில்தான். அவரின் முழு கட்டுரையும் படித்தேன்.

 

முதலில் எல்லா சட்ட விளக்கமும் சரியானதே மேல் கீழ் என ஒன்றுமே இல்லை என எண்ணினேன். பின்னர் இலக்கிய வாசிப்பில் தான் பார்த் சொன்ன ஆசிரியன் இறந்துவிட்டான் (Death of author) என்பதன் அசல் பொருளை அறிந்தேன். ஒரு படைப்பை வாசிக்கும் போது எல்லா விளக்கத்துக்கும் இடம் உண்டு. ஆனால் சரியான விளக்கம் என ஒன்று உண்டு. அதை நோக்கியே நாம் செல்ல வேண்டும் என்பதே அவர் கூறியது. இது சட்ட விளக்கத்துக்கும் பொருந்தும். சட்ட விளக்கத்தில் சரியானது என ஒன்று உண்டு, மேல் கீழ் என்பதும் உண்டு, சரியானதை நோக்கியே நாம் செல்ல வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.

 


Comments

  1. Very happy to see an enthusiastic and knowledgeable young law college student

    ReplyDelete
  2. Congrats Vignesh for the bright future in the legal fraternity and our beloved Krishnan for his sharp Questions...

    ReplyDelete
  3. Wry good questions and very good responses, especially on Collegium, quality of students, laws which may not be unjustifiable. Well done, Vignesh.

    ReplyDelete
  4. **pls read “wry” as “very” in my comment above.***

    ReplyDelete
  5. அருமையான கேள்வி அதற்கான பதில்.வரும் காலத்தில் சிறப்பான வழக்குறைஞரை பார்க்கலாம்.
    வாழ்த்துகள்்

    ReplyDelete
  6. சட்டத்தை புத்தகங்களிலும், அதற்கான வியாக்கியானத்தை வெளியிலும் தேட வேண்டும்

    ReplyDelete
  7. Both interviewer and interviewee are social minded and foresighed .
    Good.

    ReplyDelete

Post a Comment