Skip to main content

2. பேட்டி - ச.பாலமுருகன்

 

1967 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானியில்  சண்முகம் நாகரத்தினம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பாலமுருகன். 1993 ஆம் ஆண்டு கோவையில் சட்டப்படிப்பு முடித்தார். பின் 6 ஆண்டுகள் மூத்த வழக்கறிஞர் ப பா மோகன் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞர் ஆக இருந்தார். மாணவ பருவத்தில் AISF இல் இருந்துள்ளார். தற்போது மக்கள் சிவில் உரிமை கழகத்தில் (PUCL) தேசிய செயலர், பழங்குடிகளுக்காக செயல்பட்டவர், இடதுசாரி சிந்னையாளர். "சோளகர் தொட்டி" என்கிற இவரது நாவல் குறிப்பிடத்தக்கது. இரண்டு மகன்கள்  மனைவியுடன் கோவையில் வாழ்ந்து வருகிறார். கோவையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது. 

 

----- Krishnan, advocate, Erode.

 

வழக்கறிஞர் தொழில் :

 

1. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ?

 

ஐந்து ஆண்டுகள் ப பா மோகன் இடம் பணியாற்றிய போது வகை வகையான வழக்குகளை பார்த்துள்ளேன். எனக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்கு உண்மையாக இருக்க வேண்டும், உங்களுக்கு வரும் வழக்கு ஒரு பெரும் பொறுப்பு, அதை முழுமையாக படித்து அதற்கான முன் தீர்ப்புகளை சேகரித்து அவ் வழக்கை நடத்த வேண்டும் என கற்றுக் கொண்டேன். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது எப்படி என கற்றுக் கொண்டேன். 

 

2. இப்போது 5 ஆண்டுகளுக்கு கீழ் அனுபவம் உள்ள வழக்கறிஞர்களின் குறைபாடுகள் என நீங்கள் எண்ணுவது என்ன ? அவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் என்ன ?

 

அவர்கள் தங்கள் மானசீக குருவாக சரியான நபர்களை ஏற்றுக் கொள்வது இல்லை. உடனடியாக அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என எண்ணுகிறார்கள். வழக்கறிஞர் தொழிலை ஒரு லாபம் ஈட்டும் சந்தை போல பாவிக்கிறார்கள்.   

 

 

3.  பகுதி நேரமாக வேறு தொழில் செய்யும் வழக்கறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன ? 

 

இவர்கள் போதுமான சட்ட அறிவு இல்லாமல் இருப்பார்கள் ஆனால் தெரிந்தது போல பாவனை செய்வார்கள். விகிதாசாரம் அற்று சிறிய வழக்குக்கு மிக அதிக கட்டணம் பெறுவார்கள் என்கிற விமர்சனம் அவர்கள் மீது உண்டு.   

 

 

4. ஒரு வழக்கறிஞர் சட்டம் தவிர்த்து எதைப் பற்றி எல்லாம் வாசிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பி வாசித்த சில புத்தகங்கள் யாவை ?

 

ஒரு வழக்கறிஞருக்கு படைப்புத் திறன் மிக அவசியம், படைப்புத் திறன் இருந்தால் தான் புதிய சட்டத்தில், புதிய பிரிவில் வழக்கு தொடுக்க இயலும்.  இதை புத்தக வாசிப்பில் இருந்து தான் பெற முடியும். உதாரணமாக பச்சன் சிங் வழக்கில் உச்சநீதிமன்ற நீதியரசர் பகவதி ஒரு குற்றவாளியின் மன உளைச்சல், குற்ற உணர்வு போன்றவை குறித்து தாஸ்த்யவெஸ்கி நாவலில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். எனக்கு டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு, குஷ்வந்த் சிங் எழுதிய Train to Pakistan, ஹார்பர் லீ எழுதிய To kill a moking Bird  போன்றவை பிடித்தமான நாவல்கள்.  டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐமதோவ் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் என்னைக் கவர்ந்தவர்கள், தமிழில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரமிள். 

 

5. ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் உரிமையற்றவர்/ குற்றவாளி என அறியும் போது மேற்கொண்டு வழக்கை தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா ? ஆஜராவதற்கு முன்பே தனது கட்சிக்காரர் உரிமையுடையவர்/குற்றமற்றவர் என உறுதி செய்துகொள்ள வேண்டுமா ? ஒரு கட்சிக் காரருடன் ஏற்படுத்திக் கொள்ளும் தனிப்பட்ட நட்பு பற்றி (socialising) என்ன நினைக்கிறீர்கள் ?

 

சட்டத்தின் முன் ஒருவரும் தான் தரப்பை கூற வாய்ப்பில்லாமல் போகக் கூடாது. ஆகவே எந்த கட்சிக்காரரையும் நான் மறுக்க மாட்டேன். ஒருவர் ஒரு குற்றவாளியை பற்றி ஒரு கருத்தை புனைந்து கொள்வது அவரது வாழ்க்கைப் பின்புலத்தில் இருந்து தான். உதாரணமாக ஒரு வழக்கறிஞர்  குறைந்த  வாழ்க்கை அனுபவம், குறைந்த பயணம்,  குறைந்த   வாசிப்பை பெற்றவர் ஆக இருந்தார் என்றால் ஒரு குற்றவாளியை அந்நியர் போல பார்ப்பார், அவர் மனித இனத்தில் இருந்து வேறுபட்டவராக எண்ணுவார். ஆனால் அனுபவம் மிக்க ஒருவர் ஒரு மனிதன் வீழும் சூழலில் தான் குற்றவாளி ஆகிறான், சந்தர்ப்ப சூழலே ஒருவரை ஒரு கணத்தில் குற்றவாளி ஆக்குகிறது, அவனும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை உணர்வார். அவருக்கு ஒரு குற்றமிழைத்தவரின் மன உளைச்சல் நன்கு தெரியும். 

 

வழக்கறிஞர்கள் கட்சிக்காரருடன் உறவாடுவது என்பதில் ஒரு லக்ஷ்மண ரேகை உள்ளது, குறிப்பாக பெண் கட்சிக்காரரை  பொறுத்து. உயர்வு மனப்பான்மையுடன் ஒரு கட்சிக் காரறை தூரத்தில் வைத்துப் பார்த்தல் கூடாது, அது  ஒரு நிலப் பிரபுத்துவ மனநிலை, அருகிச் சென்று அவரை வளைக்கவும் கூடாது, இது தொழிலை மலினப் படுத்துவது.           

 

 


6. உங்கள் வாழ்க்கைப் பார்வையை மாற்றி அமைத்த ஓரிரு வழக்குகள் பற்றி சொல்ல முடியுமா ?

 

வழக்குகள் என்னை மாற்றவில்லை. நான் மாறுபட்ட ஆள் என்பதால் தான் மனித உரிமை வழக்குகள், விளிம்பு நிலை கட்சிக் காரரின் வழக்குகளை ஏற்கிறேன். மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வழக்குகளை நடத்துகிறேன். 

 

இத்தனை ஆண்டுகளில் நான் உணர்வது குற்ற வழக்கில் ஒரு நிரபராதிக்கு ஆதரவாக வழக்காடுவதே மிகக் கடினமான செயல் என்பது. நமது திறன் இன்மை காரணமாக அல்லது கவனப்பிழை காரணமாக அவர் தண்டிக்கப்பட்டு விடுவாரோ என்கிற அழுத்தம் உங்களை தூங்க விடாது. 

 

 

7. இப்போது தேவைப்படும் சட்டத் திருத்தம் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள் ? அதாவது எந்த சட்டத்தில் என்ன திருத்தத்தை பரிந்துரைப்பீர்கள் ?

 

முதலில் இந்த குற்றவியல் அவதூறு வழக்குகளை ஒழிக்க வேண்டும். இதச 500 பிரிவை முழுவதும் நீக்க வேண்டும். இதை பயன்படுத்தி கருத்து சொல்பவர் அலைக்கழிக்கப் படுகிறார்கள். அரசு தனக்கு வேண்டாதவர்கள் மீது இப்படி வழக்கு தொடுகிறது. அரசியல் கட்சிகள்  வழக்கு தொடுப்பதற்கு என்றே தனி பிரிவை வைத்துள்ளது. ஒரு ட்வீட் பதிவுக்காக அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டு இருக்கிறார். உரிமையியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு அதற்கு நஷ்ட ஈடு போன்றவை தொடரலாம். பிறகு இதச 506(II) எனும் கொலை மிரட்டல் வழக்கு, ஒருவரை பிணை இன்றி சிறையில் சில நாட்கள் வைத்திருக்க என்றே இது பயன்படுகிறது. மிக முக்கியமாக UAPA  சட்டம். இதில் அரசு தனக்கு வேண்டாதவர்கள் மீது  பொய் வழக்கு போட்டு மாதக் கணக்கில் சிறையில் அடைக்கிறது. இதில் குற்றம் சாப்டப் பட்டவருக்கு உள்ள உரிமை குறைக்கப்பட்டு உள்ளது.    

 

உரிமையியலில் சொல்ல வேண்டும் என்றால் சிறப்பு திருமண சட்டத்தை பிரிவு 7(a)  இந்து திருமண சட்டத்திற்கு இணையாக மாற்ற வேண்டும், இப்போதுள்ள சிறப்பு திருமண சட்ட முறைப்படி கலப்பு திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல்களும் தேவையற்ற நடைமுறையும் உள்ளது.         

 

 

 8.  தவறிழைக்கும் வழக்கறிஞர் மீது தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா ? இதில் என்ன மாற்றம் தேவை என எண்ணுகிறீர்கள் ?  

 

பார் கவுன்சில் மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது எதிர்தரப்பு நலனை பாதிக்கும் தொழில். ஆகவே உங்கள் எதிர் கட்சிக்காரர் உங்கள் மீது தேவையற்று பழிவாங்கும் நோக்கில் ஒரு புகாரை அளிப்பார், அதை பெற்றுக் கொண்டு முகாந்திரத்தை பற்றி உறுதிப் படுத்தாமல் உடனடியாக விசாரணையில் இறங்கி ஒரு வழக்கறிஞரை அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

 

9. நீதித்துறை ஊழல் கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்துள்ளதா ? 

 

குறைந்துள்ளது. இப்போதுள்ள புதிய தலைமுறை நீதிபதிகள் நேர்மையுடன் உள்ளார்கள். ஆனால் உயர் நீதித்துறையில் ஓய்வுக்குப் பிறகு மேலும் பதவி என்கிற குறிக்கோளில் அரசுக்கு சாதகமாக நீதிபதிகள் நடந்து கொள்ளுதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.    

 

......

 

அரசியல் : 

 

1. கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறை அத்துமீறல் எவ்வாறு உள்ளது, லாக்அப் சித்திரவதை குறைந்துள்ளதா ? சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் தடுத்து வைத்தல் இப்போது குறைந்துள்ளதா ? 

 

பத்மநாபன்  கமிட்டி அளித்த அறிக்கை படி குற்றவியல் விசாரணை மேம்படுத்தப் படவேண்டும். இப்போதும் அலைக்குடி மக்கள் எனக் கூறப்படும் கல் ஒட்டர், குறவர்கள் போன்றவர்கள் மீது பொய்வழக்கு போட்டு அவர்களை சித்திரவதை செய்தல் நடந்து கொண்டுதான் உள்ளது, தென் மாவட்டங்களில் இது மிகுதியாக உள்ளது. இது போக இப்பொது தான் சாத்தான் குளம் காவல்நிலைய மரணத்தை நாம் பார்த்தோம், நிலைமை பெரிதாக மாறவில்லை. திருட்டு, வழிப்பறி வழக்கில் கைதானவர்கள் பதிவின்றி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப் படுகிறார்கள், சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் இந்த சமூக ஊடக, கருத்துப் பரவல் காரணமாக இது சற்று குறைந்து வருகிறது. மாவட்டம் தோறும் காவல் துறைக்கு எதிரான குற்றச் சாட்டை விசாரிக்க என்றே மனித உரிமை நீதிமன்றம் உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒரு வழக்கு கூட பதிவாவது இல்லை. 

 

இதில் வழக்கறிஞரின் கடமை ஒன்று உள்ளது. காவல்துறை ஒரு அதிவேக இராட்சத இயந்திரம் போல. சாலையில் கத்திக் கொண்டு ஒடும் ஒரு மன நோயாளியை சற்று நில் என ஓங்கிய குரலில் சொன்னால் அவன் திகைத்து நின்று விடுவான். அவ்வாறு இது போன்ற காவலர் மீது மனித உரிமை நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்து அவரை அங்கு வரச்

செய்தால் போதும். காவல்துறை நிதானம் அடையும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனால் இதை வழக்கறிஞர்கள் பெரும்பாலும் செய்வது இல்லை. 

 

2.  விளிம்புநிலை மக்கள் தங்கள் வழக்கை எதிர்கொள்வதில் சந்திக்கும் இடர்கள் என்ன ? அவர்கள் எந்த அளவு சட்ட விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள் ?

 

இதுவரை ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டத்ததில் பதியப்பட்ட ஒரு வழக்கில் கூட தண்டித்தது இல்லை என கூறும் நீதிபதிகள் உண்டு. அதே சமயம் ஆதிதிராவிடர் தலித்துகள் போன்றோர் தங்கள் மீது விழும் வழக்குகளை எதிர் கொள்ளுதல் சிரமம் தான். அவர்களுக்கு சாதி இந்துக்களுக்கு இருப்பது போல அமைப்பு பலம், பண பலம், தொடர்புகள் இருப்பது இல்லை. என்றாலும் இப்போது இவர்களுக்கு சில அரசியல் அமைப்புகள் உள்ளது, தமிழகத்தில் அயோத்திதாசர் சிந்தனைகள் கவனிக்கப்பட்டு வருகிறது , இது ஒரு சாதக அம்சம்.  

 

3. இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன ?

 

இது பெரிய வழக்குகளை நடத்திப் பழகும் வாய்ப்பு என சில வழக்கறிஞர்கள் கொள்கிறார்கள். குற்றவியல் வழக்கை நடத்தும் அனுபவம் அற்ற வழக்கறிஞர்கள் கொலை, வழிப்பறி, போன்ற பெரிய வழக்குகளை நடத்தி அவர்களின் திறன் இன்மையால் குற்றம் சாட்ட  பட்டவர்கள்  தண்டனை ஆவதும்  நடைபெற்றுத் தான் இருக்கிறது. பணம் இல்லாததால் ஒருவருக்கு தரமான சட்ட உதவி கிடைப்பது இல்லை.  இலவச சட்ட உதவி மைய்ய பட்டியலில் இல்லாத மூத்த வழக்கறிஞரைக் கூட சில தீவிர வழக்குகளை ஏற்றுக் கொள்ளுமாறு இந்த சட்ட உதவி மய்யம் கோரலாம்.       

 

 

4. ஒருவர் கைது செய்யப்பட்டபின் நீதிமன்ற காவல் உத்தரவு இடும் போதோ, அதை நீட்டிக்கும் போதோ ஒரு நீதித்துறை நடுவரின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி தருகிறதா ? 

 

Arneshkumar vs state of Bihar வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்ட நடைமுறைகளை கீழமை நீதிமன்றங்கள் பின்பற்றுவது இல்லை. முகநூல் பதிவுக்கு, அரசியல் காரணத்துக்கு என தன்முன் வரும் வழக்கின்  சிறைக் காவலை ஒரு நீதிபதி மறுக்க முடியும், ஆனால் இப்படி நீதிமன்ற சிறைக் காவலை மறுக்க நீதித்துறை நடுவர்கள் தேவை இன்றி அச்சப்பபடுகிறார்கள் . இதில் ஒரு வழக்கறிஞரின் பங்கு சற்று கூடுதல், சிறைக்காவலுக்கு அனுப்பும் முன்பே நீதிபதி முன் தனது ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டும், உரிய மனுவை அளித்து சிறைக்கு காவலை மறுக்குமாறு கோர வேண்டும். ஆனால் வழக்கறிஞர்கள் அரிதாகவே இதை செய்கிறார்கள்.  

 

5. ஒருவர் விசாரணை இன்றி ஆண்டுக் கணக்கில் விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் நிலை இப்போது எவ்வாறு உள்ளது ?

 

பிணை கிடைத்தாலும் பிணை தாரர்கள் இன்மையால் ஆண்டுக்கு கணக்கில் சிறையில் உள்ள நிலை இன்றும் உள்ளது. நீண்ட நாட்கள் விசாரணை இன்றி சிறையில் இருப்பவர் இன்றும் உள்ளார்கள். இந்த இலவச சாட்ட உதவி மைய்ய வழக்கறிஞர்கள் தான் தாமாக சிறைக்கு சென்று இவர்களை சந்தித்து நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். ஆனால் இது பொதுவாக நிகழ்வது இல்லை.     

 

 

6. செல்வாக்கான குற்றவாளிகள் எவ்வாறு விடுதலை பெறுகிறார்கள் ? 

 

சாட்சிகளின் பாதுகாப்பின்மை காரணத்தால் அவர்கள் வழிக்கு கொண்டு வரப்  படுகிறார்கள். இப்போதும் வலிமையானோருக்கு எதிரான சாட்சிகளுக்கு பாதுகாப்பு என்பது பலகீனம் ஆகத்தான் உள்ளது. இதனால் செல்வாக்கானோர் தப்பி விடுகிறார்கள்.      

 

7. போலி மனித உரிமை அமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது ?

 

Yellow labour union என தொழில் சங்கத்தில் ஒரு பிரிவு உண்டு. இது முதலாளிகளாலேயே ஊட்டி வளர்க்கப்படும். இவர்கள் அசல் போராட்டத்தை வலிமை இழக்க செய்வார்கள். இது போல தான் இந்த போலி மனித உரிமை அமைப்புகள். இவர்கள் காவல்துறையுடன் நல்லுறவில் இருப்பார்கள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவார்கள், ஆனால் அசலாக களத்தில் போராட மாட்டார்கள், ஆனால் ஒரு பிரச்னையில் போராடும் போது விரைவில் இவர்கள் சாயம் வெளுத்துவிடுகிறது.

..........

 

இலக்கியம் :

 

1. இன்றைய சூழலில் வாசிப்பு குறைந்து வருகிறது என்கிற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? புத்தக விற்பனை,  சமூக ஊடக வாசிப்பு / கருத்து பகிர்வு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

வாசிப்பு கூடி வருகிறது, கதை கேட்டல் என்கிற நிகழ்வுகள் காரணமாக இதுவரை இலக்கியத்துக்கு வராதவர்கள் இங்கு வருகிறார்கள். சமூக ஊடகத்தின் பெருக்கம் கூட புத்தக வாசிப்புக்கு, அதன் அறிமுகத்திற்கு பங்கு வகிக்கிறது. இப்போது வாசிப்பு ஆரோக்கியமாகத் தான் உள்ளது.      

 

2. தலித் இலக்கியம், பிரச்சார இலக்கியம், அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்திய இலக்கியம் ஆகியவற்றின் பங்களிப்பு என்ன, எல்லைகள் என்ன ?

 

தாய் மகன் உறவில் கூட அரசியல் உண்டு. அரசியலற்ற ஒருவர் இருக்கவே முடியாது, அப்படி ஒருவர் கூறுவார் என்றால் அவர் அறையாமையில் உள்ளார் என்று பொருள். ஒருவர் இடது சாரியாக இருந்து சற்று வலது சாரிக் கூறுகளுடன் எழுதுவார், அவ்வாறே மறு தரப்பிலும். எப்படி ஒரு ஆணுக்குள் பெண்ணோ அது போல. ஆனால் ஒரு சித்தாந்தத்தை வலிந்து சொல்லுவதாக உள்ள பாத்திரமும் அப்படைப்பும் அதி அலங்காரத்துடன் வரும் பெண் போல. இது வெற்றி பெறாது, இதை இலக்கியமாக கொள்ள இயலாது. ஒரு ஆசிரியர் அற்ற எழுத்து இருக்க முடியும் ஆனால் அவனின் சித்தாந்தம் வெளிப்பட்டே தீரும்.           

 

3. 20 ஆண்டுக்கு முன் வெளியான உங்கள் "சோளகர் தொட்டி" நாவலில் காட்டப்படும் பழங்குடிக்கும் மண்ணுக்கும் ஆன உணர்வு ரீதியான உறவு இந்த நவீன மயமான காலத்தில் தளர்ந்து வருகிறதா ? 

 

சோளகர் தொட்டி நாவல் ஒரு உணர்வு வெடிப்பு தான், நான் என்னிடம் வழக்குக்காக வந்த பழங்குடிகளின் கதைகளை கேட்டு அவர்கள் அனுபவித்த காவற்துறை சித்ரவதைகளை கேட்டு கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானேன். இதில் இருந்து வெளிவரத்தான் இந்த நாவலை எழுதினேன், இது நாவலில் ஒர்க் ஷாப் பகுதியில் வரும், இதை எழுதிய பின் சற்று இலகுவானேன், இப்போதும் இந்த கதைகள் பதைபதைக்கச் செய்வான. மற்றபடி நான் இயல்பான எழுத்தாளர் அல்ல. 

 

 சராசரி ஆயுள் குறைந்தவர்கள் என்றால் இந்த பழங்குடியினர் தான். இப்போதும் அவர்களின் சராசரி 60 வயதுக்குள் இருக்கும். இவர்கள் தங்கள் நிலத்தில் இருந்து அகற்றப்படும் முயற்சி தொடர்கிறது. இதற்கு அமெரிக்கா வகுத்துக் கொடுத்த கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அந்நிய நிதி பெரும் சூழல் அமைப்புகள் துணை நிற்கின்றன. இவர்கள் அரசுக்கு சாதகமாக பழங்குடிகளை வனத்தில் இருந்து அகற்ற செயல்படுகிறார்கள். இவர்களால் உலகில்  conservative refugees என்கிற புது இனமே உருவாக்கி உள்ளது. வன பாதுகாப்பு என்கிற பெயரில் அங்கிருந்து அகற்றப்பட்டு அகதிகள் ஆனவர்கள். ஆப்ரிக்காவில் இருந்து கொள்கை  வகுக்கப்படும் சூழல் அமைப்பு என்றால் வேறுமாதிரி நடக்கும், பழங்குடிகளுக்கு சாதகமாக அமையும். இப்போது நமக்கு தேவை இந்திய மரபின் கொள்கைகள் கொண்ட சூழல் அமைப்புகள் தான்.   

 

Krishnan, advocate, Erode.

98659 16970.

Comments