இந்திய
சுதந்திர நாள் உரை
நேரு
நெடுங்காலத்துக்கு முன்னர் நாங்கள் விதியுடன்
உறவு பூண்டோம். அப்பொழுது நாம் பூண்ட உறுதியை முற்றுமுழுதாக அல்லவாயினும், மிகவும்
கணிசமானளவு நிறைவேற்ற வேண்டிய காலம் கைகூடியுள்ளது.
நள்ளிரவில் உலகம் உறங்க, இந்தியா உயிரும்
சுதந்திரமும் பெற்று விழித்தெழப் போகின்றது. இது வரலாற்றில் மிகவும் அரிதாக எழும்
தருணம்; நாங்கள் பழையதை விடுத்து, புதியதுள் அடியெடுத்து வைக்கும் தருணம்; ஒரு
காலகட்டம் முடிவடையும் தருணம்; நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்து ஆன்மாவின்
குரல் ஒலிக்கும் தருணம்.
பற்றுறுதிகமழும் இத்தருணத்தில் இந்தியாவுக்கும்,
இந்திய மக்களுக்கும், இன்னும் பாரிய மானுட குறிக்கோளுக்கும் தொண்டாற்ற எங்களை
நாங்கள் அர்ப்பணிக்க உறுதிபூணல் தகும்.
வரலாறு தொடங்கிய காலத்தில் இந்தியா அதன்
தேடுதலில் இறங்கியது. முடிவிலாத தேடுதலின் தடம் பதியாமலேயே நூற்றாண்டுகள் கடந்தன.
இந்தியாவின் போராட்டமும், அது ஈட்டிய வெற்றியின் மாட்சியும் தோல்விகளும் நிறைந்த
நூற்றாண்டுகள் கழிந்தன. நற்பேறு, அவப்பேறு இரண்டையும் எதிர்கொண்ட வேளையிலும் தனது
தேடுதலை இந்தியா கண்ணும் கருத்துமாய் மேற்கொண்டு வந்தது. தனக்கு வலுவூட்டிய
நெறிகளை இந்தியா மறந்தது கிடையாது. அவப்பேறு மிகுந்த ஒரு காலப்பகுதியை இன்று நாம்
முடித்து வைக்கின்றோம். இந்தியா தன்னை மீண்டும் கண்டுணர்ந்து கொள்கின்றது.
இன்று நாம் கொண்டாடும் சாதனை, எங்களை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் இன்னும் மகத்தான வெற்றிகளையும், சாதனைகளையும்
நோக்கி எடுத்துவைக்கப்படும் ஒரேயொரு காலடியாகும்; அவற்றை எய்தக் கிடைத்துள்ள
வாய்ப்பாகும். நாங்கள் இந்த வாய்ப்பினைப் பற்றிப்பிடித்து, வருங்காலத்தின் சவாலை
ஏற்றுக்கொள்ளப் போதிய தீரமும் ஞானமும் படைத்தவர்கள் ஆகுவோமா?
சுதந்திரமும் ஆட்சியதிகாரமும் பொறுப்பைச்
சுமத்துபவை. இறைமைவாய்ந்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இறைமைவாய்ந்த
இந்த அவைக்கு அந்தப் பொறுப்பு சுமத்தப்படுகின்றது. சுதந்திரம் பிறக்க முன்னர்
உழைப்பின் வேதனைகள் அனைத்தையும் நாங்கள் சகித்துக்கொண்டோம். அவ்வேதனைகளின் நினைவு
எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளது. அவ்வேதனைகளுட் சில இப்பொழுதும் தொடர்கின்றன.
எனினும் பழையகாலம் கடந்துவிட்டது. இப்பொழுது எதிர்காலம் எங்களை அழைக்கின்றது.
ஆறித்தேறும் எதிர்காலத்தை நாங்கள்
எதிர்நோக்கவில்லை. நாங்கள் எத்தனையோ தடவைகள் பூண்ட உறுதிகளையும், இன்று
பூணப்போகும் உறுதியையும் நிறைவேற்றும் வண்ணம் இடைவிடாது பாடுபடும் எதிர்காலத்தை
எதிர்நோக்கியுள்ளோம். இந்தியாவுக்குத் தொண்டாற்றுவது என்பது கோடிக்கணக்கில்
வருந்தும் எங்கள் மக்களுக்குத் தொண்டாற்றுவதாகும்; வறுமை, அறியாமை, நோய்,
வாய்ப்பில் ஏற்றத்தாழ்வு என்பவற்றை ஒழிப்பதாகும்.
எங்கள் தலைமுறையின் மகத்தான மனிதர், அனைவரின்
கண்ணீரையும் துடைக்கக் கனவுகண்டார். அது எங்களால் இயலாது போகலாம். எனினும்
கண்ணீரும் கம்பலையும் தொடரும்வரை எங்கள் பணி ஒழியப் போவதில்லை.
எனவே எங்கள் கனவுகளை நனவாக்கும் பொருட்டு
நாங்கள் உழைக்கவும், பாடுபடவும் வேண்டியுள்ளது; அரும்பாடுபட வேண்டியுள்ளது. அவை
இந்தியாவுக்கான கனவுகள்; எந்த நாடும், நாட்டவரும் தனித்து வாழ்வதை நினைத்துக்கூடப்
பார்க்க முடியாவாறு எல்லா நாடுகளும், மக்களும் இன்று இணைந்து பிணைந்துள்ளதால், அவை
முழு உலகத்துக்குமான கனவுகளும் கூட.
அமைதியைப் பகுத்துப்பார்க்க முடியாது என்று
கூறப்பட்டுள்ளது; மேற்கொண்டு தனிக்கூறுகளாகப் பிளக்கமுடியாத இந்த உலகத்தில் இன்று
சுதந்திரமும், செழிப்பும், பேரழிவும் பகுத்துப்பார்க்க முடியாதவை.
இந்த மகத்தான தீரச்செயலை மேற்கொள்வதில்
எங்களுடன் பற்றுறுதியுடனும், நம்பிக்கையுடனும் இணைந்து தொண்டாற்றும்படி இந்திய
மக்களை, அவர்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம். இது அற்ப
விமர்சனத்துக்கும், தீய விமர்சனத்துக்கும் உரிய வேளையல்ல; மனக்கசப்புக்கோ, பிறரில்
குறைகாண்பதற்கோ உரிய வேளையல்ல. இந்திய மக்கள் அனைவரும் அமர்வதற்குரிய விழுமிய
சுதந்திர இந்திய மாளிகையை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
குறித்த நாள் வந்துவிட்டது; விதி குறித்த நாள்!
நீண்ட துயிலும் போராட்டமும் கழிந்து, இந்தியா மீண்டும் எழுந்து நிற்கிறது;
உயிர்த்துடிப்பும், விடுதலையும், சுதந்திரமும் பெற்று விழித்தெழுந்து நிற்கிறது.
எனினும் கடந்தகாலம் இன்னமும் எங்களை ஓரளவு பீடித்துள்ளது. நாங்கள் எத்தனையோ
தடவைகள் பூண்ட உறுதிகளை நிறைவேற்ற முன்னர் எவ்வளவோ பாடுபட வேண்டியுள்ளது. எனினும்
திருப்புமுனை கடந்துவிட்டது. நாங்கள் வாழப்போகும் வரலாறு, செயற்படப்போகும் வரலாறு,
மற்றவர்கள் எழுதப்போகும் வரலாறு புதுக்க எமக்கு விரியப்போகின்றது.
இந்தியாவில் வாழும் எமக்கும், ஆசியா
முழுவதற்கும், உலகத்துக்கும் இது ஓர் அருந்தருணம். ஒரு புதிய தாரகை, கிழக்கில் ஒரு
புதிய சுதந்திர தாரகை எழுகின்றது; புதிய நம்பிக்கை பிறக்கின்றது; நெடுங்காலமாக
நேசித்த காட்சி மலர்கின்றது. புதிய தாரகை என்றுமே மறையாது நிலைக்குமாக! நம்பிக்கை
என்றுமே காட்டிக்கொடுப்புக்கு உள்ளாகாமல் நிலைக்குமாக!
இன்னல்கள் எங்களைச் சூழ்ந்தாலும், எங்கள்
மக்கள் பலரையும் துன்பங்கள் பீடித்தாலும், கடுந்தொல்லைகள் எங்கள்மீது கவிந்தாலும்,
சுதந்திரம் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அதேவேளை சுதந்திரம் எங்கள்
தலையில் பொறுப்புகளையும் சுமைகளையும் ஏற்றியுள்ளது. சுதந்திரமும்
கட்டுப்பாடும் கொண்ட மக்கள் என்ற உணர்வுடன் அவற்றை நாம் சுமக்க வேண்டியுள்ளது.
சுதந்திர தீபத்தை ஏந்தி, எங்களைச் சூழ்ந்த
இருள்மீது ஒளிபாய்ச்சிய சுதந்திர சிற்பியை, எங்கள் நாட்டின் பிதாவை, இந்தியாவின் பழம்பெரும்
ஆத்மாவின் திருவுருவை இன்றைய நாளில் முதன்முதல் நாங்கள் எண்ணிப் பார்க்கின்றோம்.
நாங்கள் பெரிதும் அருகதையின்றியே அன்னாரைப்
பின்தொடர்ந்து வந்துள்ளோம். அவரது வழியிலிருந்து நாங்கள் விலகிச் சென்றுள்ளோம்.
ஆனாலும் நாங்கள் மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினரும் அந்த வழியை நினைவில்
வைத்திருப்பார்கள்; வீறார்ந்த விசுவாசமும், வலிமையும், தீரமும், பணிவும்
கொண்ட மகத்தான இந்திய மகனை தமது இதயங்களில் பதித்து வைத்திருப்பார்கள்; காற்று
எவ்வளவு தூரம் கிளம்பி வீசினாலும், புயல் எவ்வளவு தூரம் எழுந்து சூறையாடினாலும்,
அந்த சுதந்திர தீபத்தை என்றுமே நாங்கள் அணையவிடப் போவதில்லை.
அடுத்து, பாராட்டோ கைமாறோ ஏதுமின்றி,
இறக்கும்வரையும் இந்தியாவுக்குத் தொண்டாற்றிய சுதந்திர தொண்டர்களையும்,
வீரர்களையும் நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அரசியல் எல்லைகளினால் எங்களிடமிருந்து
பிரிக்கப்பட்டுள்ள எங்கள் உடன்பிறப்புக்களையும் நாங்கள் எண்ணிப் பார்க்கின்றோம்.
எங்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை அவர்கள் தற்பொழுது பகிர்ந்துகொள்ள முடியாத
நிலையில் இருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவர்கள் எம்மவர்கள்; எது
நேர்ந்தாலும் அவர்கள் எம்மவர்களாகவே நிலைப்பர். அவர்களது நற்பேறுகளையும்
அவப்பேறுகளையும் நாங்கள் ஒரேவிதமாகவே பகிர்ந்துகொள்வோம்.
எதிர்காலம் எங்களை அழைக்கின்றது. நாங்கள் எங்கு
செல்லப் போகின்றோம்? என்ன செய்யப் போகின்றோம்? இந்தியாவின் பாமரமக்களுக்கு,
விவசாயிகளுக்கு, தொழிலாளிகளுக்கு சுதந்திரமும், வாய்ப்பும் கிடைக்கச் செய்வோம்;
வறுமையை, அறியாமையை, நோயை எதிர்த்துப் போராடி முடிவுறுத்துவோம்; வளமும்,
குடியாட்சியும், முற்போக்கும் மிகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவோம்; ஒவ்வோர்
ஆணும் பெண்ணும் நீதியும், நிறைந்த வாழ்வும் துய்க்கும் வண்ணம் சமூக, பொருளாதார,
அரசியற் கட்டமைப்புகளை உருவாக்குவோம்.
நாங்கள் இனிமேல் அரும்பாடு படவேண்டியுள்ளது.
நாங்கள் பூண்ட உறுதியை முற்றிலும் நிறைவேற்றும் வரை, எவ்வாறு இந்திய மக்கள் விளங்க
வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு அவர்கள் அனைவரையும் விளங்க வைக்கும்
வரை நாங்கள் எவரும் ஓயப்போவதில்லை.
ஒரு மகத்தான நாட்டின் குடிமக்களாகிய நாங்கள்
துணிந்து முன்னகருந் தறுவாயில் நிற்கின்றோம். அத்தகைய குடிமக்கள் என்ற உயரிய
நியமத்தை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் எந்தச் சமயத்தைச்
சேர்ந்தவர்களாயினும், இந்தியாவின் சரிநிகரான பிள்ளைகள்; சரிநிகரான உரிமைகள்,
சலுகைகள், கடப்பாடுகள் கொண்டவர்கள். எந்த நாட்டு மக்களின் சிந்தனையும் செயலும் குறுகியவையோ
அந்த நாடு சிறக்க முடியாது. ஆகவே சமூகவாதத்தையும் குறுகிய மனப்பான்மையையும்
எங்களால் ஊக்குவிக்க முடியாது.
உலக நாடுகளுக்கும் மக்களுக்கும் எங்கள்
வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். அமைதி, சுதந்திரம், குடியாட்சி
என்பவற்றை மேம்படுத்துவதில் அவர்களுடன் ஒத்துழைக்க நாங்கள் உறுதி
பூணுகின்றோம்.
தொன்மையும், நிலைபேறும், என்றென்றும்
புதுமையும் வாய்ந்த இந்தியாவுக்கு, நாங்கள் மிகவும் நேசிக்கும் எங்கள்
தாயகத்துக்கு, பற்றுறுதியுடன் தலைவணங்கி, அதற்குத் தொண்டாற்ற நாங்கள் மறுபடியும்
உறுதிபூணுகின்றோம்.
இந்தியா வாழ்க!
___________________________________________________________________________________
Jawaharlal
Nehru, A Tryst with Destiny, 1947-08-14, தமிழ்: மணி வேலுப்பிள்ளை
https://www.youtube.com/watch?v=lrEkYscgbqE
நன்றி: https://thamilodai.blogspot.com/2021/08/blog-post_66.html
Comments
Post a Comment