Skip to main content

7. Defamation and right of speech - அவதூறும் பேச்சுரிமையும்.

  

...வி.செ.செந்திகுமார், வழக்கறிஞர், சென்னை. 

 

http://164.100.79.153/judis/chennai/index.php/casestatus/viewpdf/722032

 

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி ரா) மீது ஒரு தீண்டாமை வன்கொடுமை குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. கி.ரா அவர்கள் சண்டே இந்தியா என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டி கதிரேசன் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவும் நீதிமன்றத்தால் விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

அந்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி திரு. கி.ரா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இறுதியில் கி.ரா அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சில நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது.

 

ஆனால் இந்த வழக்கின் முக்கிய அம்சம் என்பது இந்த குற்ற வழக்கை ரத்து செய்ய தீர்ப்பில் கொடுக்கப்பட்ட காரணங்கள். இந்த தீர்ப்பை அளித்தவர் நீதிபதி G.R.சுவாமிநாதன் சட்ட புத்தகங்கள் மட்டுமின்றி மற்ற புத்தகங்களையும் படிக்கக்கூடிய நீதிபதி.

 

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டானது குறிப்பிட்ட சட்டப்பிரிவின் வரையறைக்குள் வருகிறதா இல்லையா என்பதை மட்டும் தான் நீதிமன்றம் பார்க்கும். சில அரிதான தருணங்களில் வழக்கின் பொருண்மைகளை (Facts) கவனத்தில் கொண்டு வழக்கை தீர்மானிப்பார்கள்.

 

இந்த வழக்கில் கி.ரா அவர்கள் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இதுதான். சண்டே இந்தியாவிற்கு பேட்டியளிக்கையில், நீங்கள் ஏன் தலித் வாழ்க்கையை பற்றி எழுதவில்லை என்ற கேள்விக்கு, “அவன்” மொழி (dialect) எனக்கு தெரியாது ஆகவே அதை எழுத நான் முயலவில்லை என்கிறார். “அவன்” என்று ஒருமையில் கூறி தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவர் இழிவுபடுத்திவிட்டார், இதன் மூலம் SC & ST Act பிரிவு மூன்றின் படி குற்றம் இழைத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. இதற்கு குறைந்தது ஆறு மாதம், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கலாம்.

 

இந்த வழக்கிலும் நீதிபதி கூறப்பட்ட குற்றச்சாட்டானது சட்டப் பிரிவின் வரையறைக்குள் வருகிறதா என விவாதிக்கிறார். அவன் என்று ஒருமையில் கூறுவது இழிவுபடுத்துவது ஆகுமா என்பதை திரு. ஜெகநாத் என்ற இளம் தமிழ் அறிஞர் உதவியுடன் சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை “அவன்” என்ற சொல் எவ்வாறு பொருள்படுகிறது என ஆராய்கிறார். புறநானூற்றில் ஆரம்பித்து திருக்குறள், திருவாசகம், திருவாய்மொழி, பெரியபுராணம், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் வரை உள்ள பாடல்களில் அவன் என்ற சொல் குறிப்பிடும் அர்த்தத்தை விளக்குகிறார்.

மேலும் வழக்குகளில் இதுபோன்ற தருணங்களில் முன்பே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, கி.ரா அவர்கள் அவன் என்று கூறியது தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்பட்டது அல்ல என்று கூறி, அதனால் அவர் மேல் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

 

இதோடு நின்றிந்தால் இந்த வழக்கு மற்ற வழக்குகள் போல் ஆயிரத்தில் ஒன்றாக மாறியிருக்கும் .ஆனால் இது சிறப்பு பெறுவதற்கு காரணம், இன்று இப்படிப்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு எவ்வாறு பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் ஒடுக்கப்படுகிறது என்று கூறி அதற்கு எதிராக கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவற்றை நீதிமன்றங்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மிக விரிவாக விளக்குகிறார் என்பதுதான்.

 

பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் திமோதி கார்டன் ஆஷ், எழுத்தாளர்  V.S.நைபால், அமெரிக்காவின் மிக போற்றத்தக்க நீதிபதிகளில் ஒருவரும் பல பிரபலமான சட்ட புத்தகங்களை எழுதியவருமான ஹாரி கால்வென் போன்றோர்கள் கருத்து சுந்திரத்தை பற்றி கூறிய புகழ் பெற்ற மேற்கோள்களை குறிப்பிடுகிறார்.

 

மேலும் சமீபத்தில் ராமச்சந்திர குகா, அபர்ணா சென், மணிரத்தினம் போன்ற முக்கிய ஆளுமைகள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரதம அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை காரணம் கூறி அவர்கள் மேல் ஒருவர் வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 49 ஆளுமைகள் பெயரிலும் குற்ற வழக்கு பதியப்பட்டமை [ அதுவும் தேச துரோக வழக்கு] எவ்வாறு அறிவார்ந்த சமூகத்தில் கணிசமான கலக்கத்தை உண்டுபண்ணியது என்பதையும் குறிப்பிடுகிறார்.

 

ஹுசைன் அவர்கள் மீது அவரின் ஓவியத்திற்காக நாடு முழுதும் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளையும், பிறகு அவற்றை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையும் பதிவு செய்கிறார். பெருமாள் முருகன் வழக்கை பற்றியும் கூறுகிறார். மிக முக்கியமாக கருத்துச் சுதந்திரத்தை பற்றிய மகாத்மா காந்தியின் வார்த்தையை எடுத்து கூறி, அவற்றை பாதுகாக்க நீதிமன்றங்களின் கடமையையும், பொறுப்பையும் வலியுறுத்திக்கிறார்.

 

இவை அனைவற்றையும் விட இந்த தீர்ப்பின் மணிமகுடம் என்று நான் கருதுவது கி.ரா என்ற மகத்தான இலக்கிய ஆளுமையை அங்கிகரித்து கவுரவித்தது.  ஞானபீட விருது அளிக்கப்படவேண்டிய மிக தகுதிவாய்ந்த நபர் கி.ரா என்று பலர் விரும்புவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். உச்சமாக, இந்த வழக்கை ரத்து செய்வதன் மூலம் இந்த குறைந்தபட்ச மரியாதையையாவது கி.ரா அவர்களுக்கு அளிக்கும் கடன்பட்டுள்ளது இந்த நீதிமன்றம் என்று முடிக்கிறார்.

 

இந்தவகையில் இதை வரலாற்றின் முக்கியமான ஒரு தீர்ப்பாக நான் பார்க்கிறேன். ஆனால் பெருமாள் முருகன் வழக்கு போல் இது அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை. 

...


Comments