Skip to main content

2. பேட்டி - செங்கோட்டையன்


1940 ஆம் ஆண்டு  குமாரசாமி, முத்தம்மாள்  தம்பதிக்கு  ஊஞ்சலூரில் பிறந்தவர் திரு. செங்கோட்டையன், மனைவியுடன் ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். மகனும் மகளும் அமெரிக்காவில், இன்னொரு மகன் தாராபுரத்தில் மருத்துவர். பியூசி பொருளியல் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், 1966 முதல் 68 வரை சட்டப் படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். 82 வயதாகும் திரு. செங்கோட்டையன் 54 ஆண்டுகள் துறை அனுபவம் உள்ளவர் இன்றும் நீதி மன்றத்திற்கு வந்து வழக்கு நடத்துகிறார். "மொழி" என்கிற கட்டுரை நூலையும் "தெரு வாசகம்" என்கிற கவிதை நூலையும் எழுதியுள்ளார். ஒரு சொற்றொடர் சேகரிப்பாளர், வாசிப்பு ஆர்வமும் இசையார்வமும் உண்டு. அவரை அவர் அலுவலகத்தில் சந்தித்து எடுத்த நேர்காணல் இது.

 

.....கிருஷ்ணன், வழக்கறிஞர், ஈரோடு.

 

 

1. இந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபாவத்தின் வாயிலாக ஒரு திறன்மிக்க  வழக்கறிஞரின் குணாம்சம் என எதை நினைக்கிறீர்கள் ?

 

ஒரு வழக்கறிஞருக்கு தீராத சட்டப் பசி வேண்டும், எத்தனை வழக்குகளை நடத்தி உள்ளார் என்பதல்ல, எத் தரத்தில் நடத்தி உள்ளார் என்பதே முக்கியம். ஒருவர் இளமையில் கண் காது போன்ற புலன்கள் சீராக இருக்கும்போதே கூடுமானவரை படித்து விட வேண்டும். சிறந்த வழக்கறிஞர்களின் மாதிரி வாதுரைகள் எதிர் வாதங்கள் போன்றவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். முகவர் வைத்து வழக்கு பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

2. ஒரு வெற்றிகரமான வழக்கறிஞருக்கு தேவையான திறன் என்ன என பட்டியலிட முடியுமா ?

 

மொழியில் தெளிவு வேண்டும், அவர் வாதத்தில் ஒரு சீரான முறைமையை கடைபிடிக்க வேண்டும். "You Don't know nothing about the contrary" என்பது போன்ற பொருளற்ற இரட்டை எதிர்மறை (double negative) சொற்றொடர்களை தவிர்க்க வேண்டும். கூறியது கூறல் கூடாது. இரு மொழிகளில் கலவையாக பேசக் கூடாது. சட்டச் வழக்காறுகளை (legal terminology) கற்றிருக்க வேண்டும்.

 

 

3. இளநிலை வழக்கறிஞர் ஆக உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ?

 

1968 இல் எனது முதல் மூத்த வழக்கறிஞர் கோவை கனகசபாபதி, அதன் பின் ஈரோடு M.P. சின்னராஜ். இருவரிடமும் சேர்த்து 10 ஆண்டுகள் இருந்தேன். அவர்கள் தமது இளநிலை வழக்கறிஞர்களை தானாக பணிக்க மாட்டார்கள், நாம் தான் முன் முயற்சி எடுத்து பணி செய்ய வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும்.  எனது மூத்தவர்கள் வழக்கை படித்தபின் எடுத்துக் கொள்ளும் தனிக் குறிப்புகளை சேகரித்து கொள்வேன். அதை வாசித்து ஒரு வழக்கை அணுகும் முறையை கற்றுக் கொள்வேன்.

 

4. பகுதி நேரமாக வேறு தொழில் செய்யும் வழக்கறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன ?

 

இதைத் தவறு என கூற மாட்டேன். ஆனால் அவர்கள் தம்மால் நடத்த இயலும் சாதாரண வழக்குகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுதல் நன்று. சிக்கலான வழக்கு வந்தால் ஒரு முழு நேர வழக்கறிஞரை அணுகி நடத்த வேண்டும்.

 

5. ஒரு வழக்கறிஞர் சட்டம் தவிர்த்து எதைப் பற்றி எல்லாம் வாசிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ?

 

வாசிப்பதும் இசை கேட்பதும் கிட்டத்தட்ட ஒன்று தான். சாதாரண திரை இசை கேட்கும் நேரமும் உண்டு கர்நாடக இசை கேட்கும் நேரமும் உண்டு. அதே போல சாதாரண புத்தகங்களையும் படிக்க வேண்டும், தீவிர தீர்ப்புகளையும் படிக்க வேண்டும். இந்த சாதாரண புத்தக வாசிப்பு தான் கடினமான தீர்ப்புகளை வாசிக்க உதவும்.

 

நான் விரும்பி வாசித்த ஒரு புத்தகம் என்றால் அது Pelmanism தான். இந்த வரிசையில் உள்ள notebook என்னும் புத்தகத்தை குறிப்பாக சொல்லலாம். இப்போதும் அதை வாசிக்கிறேன்.

 

 




6. ஒரு வழக்கறிஞர் முதல் 10 ஆண்டுகளில் சந்திக்கும் சவால்கள், இடர்கள் என்னென்ன ? சமாளிக்கும் வழிகள் என்ன ?

 

முதலில் சிறப்பான தொரு அலுவலகம் அமைக்க வேண்டும், இது செலவேறியது. உங்கள் கட்டணத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இந்த அலுவலக தோற்றம் ஆகும். அதன் பின் நீங்கள் சார்ந்துள்ள சமூகம். இது பலமும் பலவீனமும் ஆகும். அனைத்து சமூக வழக்காடிகள் வர சற்று காலம் பிடிக்கும்.

 

 

7. பொதுவாக ஒரு வழக்கறிஞரின் சட்ட அறிவுக்கும் தீர்ப்புகள் வாசிப்பிற்கும் அவரது தொழில் வெற்றிக்கும் தொடர்பில்லை, அவருக்கு வழக்குகள் தேடி வருவது பிரபல்யத்தின் அடிப்படையில் தான் என்கிற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?  

 

ஆம் இது உண்மை தான். ஒரு வழக்கறிஞரின் பரவலான அறிமுக வட்டம் அவரின் மிகப் பெரிய பலம். இதன் காரணமாகவே வழக்குகள் தேடி வரும், அவரின் திறனின்மையை இந்த அறிமுகம் சரி கட்டிவிடும். ஆனால் இது சரியான வளர்ச்சி அல்ல என்பேன்.

 

 

8. ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் உரிமையற்றவர்/ குற்றவாளி என அறியும் போது மேற்கொண்டு வழக்கை தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா ? ஆஜராவதற்கு முன்பே தனது கட்சிக்காரர் உரிமையுடையவர்/குற்றமற்றவர் என உறுதி செய்துகொள்ள வேண்டுமா ?

 

இயலும் என்றால் விலகிக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவர் உயர்ந்த வழக்கறிஞர். என்னால் இது இயல்வதில்லை. என்றாலும் நீதிமன்றத்தில் நமது வாதம் என்பது நமது கட்சிக்காரரின் வாதம் தான். அவருக்கு உண்மையாக இருப்பதும் தொழில் தர்மம் தான்.

 

 

9. BAR Council தேர்தல் நடைமுறையில், உறுப்பினர் தேர்வில் உள்ள குறைபாடுகள் என்ன ?

 

இதில் எனக்கு திருப்தி இல்லை. தேர்வு பெற்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை.

 

 

10.  தவறிழைக்கும் வழக்கறிஞர் மீது தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா ? இதில் என்ன மாற்றம் தேவை என எண்ணுகிறீர்கள் ? 

 

இதில் எனக்கு திருப்தி இல்லை. விசாரணைகள் பெயரளவில் நிகழ்கிறது, இது மாற வேண்டும். மேலும் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள 55 வயதுக்கு மேல் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு தொகுப்புத் தொகை வழங்கப் பட வேண்டும். அவர் மறைந்த பின் வழங்குவதால் பெரிய பயன் இல்லை.

 

11. நீதித்துறை ஊழல் என்பது நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் தொடர்புடையது, கடந்த பத்து ஆண்டுகளில் இது குறைந்துள்ளதா ? மேலும் குறைக்க குறிப்பாக என்ன நடவடிக்கை தேவை ?

 

முன்பு விதிவிலக்காக இருந்தது இப்போது விதியாகி இருக்கிறது. இது மறைவாக நிகழும் நிகழ்வு என்பதால் என்னால் இதன் அளவை அறிய முடிவதில்லை. ஒப்புநோக்க நீதித்துறையில் உள்ள பிற துறையினரை விட வழக்கறிஞர்கள் சற்று மேலான நேர்மையுடன் நடப்பது போலத் தோன்றுகிறது.

 

 

12. உங்கள் வாழ்க்கைப் பார்வையை மாற்றி அமைத்த ஓரிரு வழக்குகள் பற்றி சொல்ல முடியுமா ?

 

ஒரு குறிப்பிட்ட வழக்கை சொல்கிறேன், இது நடந்தது 1978 இக்கு முன். எனது சக கட்சித் தோழர் கொலை செய்யப்பட்டார். அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் எனது மூத்த வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டார். அவர் அலுவலகத்தில் நான் இளநிலை வழக்கறிஞர். இங்கு எனது மூத்தவருக்கு வழக்கில் உதவுவதா அல்லது இறந்த என் நண்பருக்கு நியாயமாக இருக்க இவ்வழக்கில் இருந்து விலகுவதா என்கிற பிரச்சனை எழுந்தது. நான் எனது மூத்தவரிடம் சொல்லி விலகி விட்டேன். தனி உறவையும் தொழிலையும் கலந்து கொண்டதில் அவருக்கு வருத்தம் தான். அதன்பின் எந்த குற்ற வழக்கிலும் உதவுமாறு அவர் என்னை கோரவில்லை. ஆனால் எனது இம்முடிவு சரி என நினைக்கிறேன்.

 

 

13. உங்களுக்கு இந்த சொற்றொடர் சேகரிப்பு நகைச்சுவையாக பேசுதல் ஆகியவற்றில் எப்படி ஆர்வம் வந்தது ?

 

இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. உதாரணமாக encyclopedia என்பதை நினைவில் கொள்ள "என் சைக்கிளை பிடி ஐய்யா" என நினைவில் கொள்ளும் யுக்தியை எனது கல்லூரி ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். பள்ளி காலத்தில் இருந்தே Humour club இல் இருந்தேன்.

SKM நிறுவனத்தை சேவல் பிளஸ் கோழி இக்குவல் டூ முட்டை என்பேன். நான் படிக்கும் நாளேடு தீர்ப்புகள் ஆகியவற்றில் இருந்து சுவையான சொற்றொடர்களை சேகரித்து ஒரு குறிப்பேடில் எழுதிக் கொள்வேன்.

 

இதன் தொடர்ச்சியே என் கவிதைகள், இதில் பகடியும் சமூக கண்டனமும் இருக்கும்.

 

"சின்னம் வைத்து திருடும் சிம்பல் கொள்ளைக்காரர்கள்"

 

 "ஓட்டுமிராண்டிகள்"

 

போன்றவை நான் எழுதியவை.

 

 

14. உங்கள் அரசியல் ஆர்வம் ?

 

ராம் மனோகர் லோகியாவின் சோசலிஸ்ட் பார்ட்டியில் நான் உறுப்பினர். அவரால் ஈர்க்கப் பட்டு அரசியலுக்கு வந்தேன். எனது ஊஞ்சலூர் வீடு முத்து நிலையம் என அழைக்கப் படும். நல்லசிவம் என்கிற சோஷலிஸ்ட் MLA எனது தந்தையின் நண்பர், எங்கள் வீட்டு மாடியை தனது அலுவலகம் போல பயன்படுத்துவார். ஆகவே பள்ளிக் காலம் முதலே நான் அரசியலில் இருக்கிறேன்.  அகில இந்திய அளவில் தலைவர்கள் வந்து போவார்கள். நான் ஈரோட்டில் ஜெபி என அழைக்கப்படும் ஜெயப் பிரகாஷ் நாராயணன், வினோபாவே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் பேசிய கூட்டங்களில் அமர்ந்து கேட்டுள்ளேன். லோகியாவை சந்தித்து பேசியுள்ளேன். 1967 இல் திருச்செங்கோடு பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட சோஷலிஸ்ட் பார்ட்டி சார்பில் வாய்ப்பு கிட்டியது, குடும்பத்தினரின் எதிர்ப்பால் தவிர்த்து விட்டேன்.


Comments

  1. நேர் கேள்வி...நேர்மையான பதில்....

    ReplyDelete
  2. இருபது வருடங்களுக்கு முன்பு அலுவலக நேரம் முடிந்தபின் பல இரவுகள் நாம் ஒன்றாக அமர்ந்து உங்கள் சிறப்பு ‘சொற்றொடர்’களை தொகுத்த நினைவு வருகிறது.

    ReplyDelete

Post a Comment