Skip to main content

2. பேட்டி - A.C. முத்துசாமி

 

1946 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அர்த்தநாரி கவுண்டன் வலசில், சின்னப்ப கவுண்டர், நல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் A.C. முத்துசாமி. இளங்கலை பொருளியல் முடித்து 1971 ஆம் ஆண்டு சென்னையில் சட்டப் படிப்பு முடித்தார். ஐம்பது ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர், 

இவரின் மகன் கோவையில் மருத்துவர், தற்போது மனைவியுடன் ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். பயண ஆர்வமும் புத்தக வாசிப்பும் உண்டு, எப்போதும் இளைஞர்களுடன் காணப்படுவார். ஆங்கிலப் புலமை மிக்கவர். ஈரோட்டில் அவரது அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது. 

 

.. A.s. Krishnan, advocate, Erode. 

 

 

1. இந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபாவத்தின் வாயிலாக ஒரு வெற்றிகரமான  வழக்கறிஞரின் குணாம்சம் என எதை நினைக்கிறீர்கள் ? அவர் சட்ட அறிவு, அவர் வாதிடும் திறன், அவர் நேர்மை ?

 

முதலில் நேர்மை, அவர் அற்பணிப்புடன் இருக்க வேண்டும், பொருளியல் ரீதியாக வெற்றிகரமாக ஒரு அலுவலகத்தை நடத்த வேண்டும், அவருக்கு தொடர்புறு திறனும் வேண்டும். 

 

2. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, உங்கள் திறனை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் ?

 

நான் முதலில் திரு சிவ சுப்ரமணியத்திடமும், பின்னர் திரு V.K. முத்துசாமி இடமும் இளநிலை வழக்கறிஞராக இருந்தேன். பின்னர் அதே அலுவலகத்தை நான் ஏற்றுக் கொண்டு இன்று வரை நடத்தி வருகிறேன். முதலிலேயே குற்ற வழக்கில் ஆஜர் ஆவது இல்லை என முடிவெடுத்து விட்டேன். இந்த 50 ஆண்டுகளில் ஒரு குற்ற வழக்கில் கூட பிரதிநிதித்துவம் செய்தது இல்லை, இதனால் சில இழப்புகள் ஏற்பட்டது. 

 

எனது முதல் 3 ஆண்டில் சட்ட இதழ்களை வாசித்து முக்கிய தீர்ப்புகளை எழுதி வைத்துக் கொள்வேன் இப்போது நீங்கள் காண்பது ஏழாவது குறிப்பேடு. ஒரு வழக்கை எனது மூத்தவர் நடத்தும் முன்பு கற்பனையாக ஒரு குறுக்கு விசாரணையை தயாரித்து எழுதி வைத்துக் கொள்வேன், பின்னர் மூத்தவரின் விசாரணையுடன் ஒப்பிட்டு கொள்வேன். வழக்குரை எதிர்உரை தயாரிப்பும் இப்படித்தான். பின்னர் முழுமையாக நானே தயார் செய்து நடத்த துவங்கினேன். எனது சக வழக்கறிஞர்கள் உடன் சட்டம் சம்பந்தமான தொடர் உரையாடலில் இருந்து வந்தேன். 

 

3. மூத்தவர்கள் இளையவர்களுக்கு கற்றுத் தருவது இல்லை என்கிற கருத்தில் உண்மை உண்டா ? 

 

ஆம் இதில் ஓரளவு உண்மை உள்ளது, தனது இளையவருக்கு அடிப்படைகளை கற்பிப்பது ஒரு மூத்த வழக்கறிஞரின் கடமையாகும். ஒருவருக்கு சந்தேகங்களை தீர்ப்பதும் சில ஆலோசனை வழங்குவதும் பெரிதும் உதவாது, அவரை வழக்கை முழுமையாக நடத்த அனுமதிக்க வேண்டும் அதுவே அசல் கல்வி. சில மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு கோப்பை தன்னிடம் வைத்துக் கொண்டு அதை இளையவர் பார்கக் கூட அனுமதிக்க மாட்டார்கள். 

 

4. இப்போது 5 ஆண்டுகளுக்கு கீழ் அனுபவம் உள்ள வழக்கறிஞர்களின் குறைபாடுகள் என நீங்கள் எண்ணுவது என்ன ? அவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் என்ன ?

 

குறைந்தது 5 ஆண்டுகள் ஒருவர் இளநிலை வழக்கறிஞர் ஆக பயில வேண்டும், அப்போது தான் தொழில் திறன் உருவாகும் அதற்கு இவர்கள் தயாரில்லை. 5 ஆண்டுகளில் எவ்வளவு கற்க வேண்டுமோ அவ்வளவு கற்பதில்லை.

 

5. ஆங்கில புலமை நம் தொழிலுக்கு எவ்வளவு முக்கியம் ? தமிழ் மட்டும் தெரிந்த வழக்கறிஞர் சந்திக்கும் இடர்கள் என்ன ?  உங்கள் ஆங்கில புலமையை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள் ?

 

மிக முக்கியம். நம் சட்டம், தீர்ப்புகள் ஆகியவை ஆங்கிலத்தில் தான் உள்ளது ஆகவே தமிழ் மட்டும் தெரிந்த வழக்கறிஞர் மிகுந்த சிரமம் அடைவார். மேலும் தமிழில் வாதிடுவது மிகவும் கடினம். உகந்த சொற்களை தேடி மூளை சலித்துப் போகும், சிந்தனை தொடர் பாதிக்கும். ஆகவே ஆங்கிலமே உகந்தது. நான் தொடர்ந்து BBC வானொலி கேட்பேன், ஆங்கில உச்சரிப்பில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன். ஆங்கில புத்தகங்களை தொடர்ந்து படிப்பேன். 

 

 

6. வழக்குரை, எதிருரை வரைவு செய்தல் (draft), குறுக்கு விசாரணை, இறுதி வாதம் இவற்றில் அடிப்படை கல்வி (basics) எது என்பது பற்றி கூற முடியுமா ? 

 

உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவுகள் 6,7,8 நன்கு படித்தால் போதுமானது. உங்கள் வழக்குரை நேர்த்தியாகவும் கட்சிதமாகவும் இருக்க வேண்டும். அனைத்தையும் வழக்குரையில் சொல்வதும், அனைத்து ஆவணங்களையும் முன்பே வெளிப் படுத்துதலும் சில சமயம் பாதகமாக அமையும். எதை சொல்ல வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்கிற தேர்வு வேண்டும். 

 

7. உங்கள் நோக்கில் வழக்குரை கலை

(Art of advocacy)  என்றால் என்ன என்று கூற இயலுமா ? 

 

இப்போது நீதிமன்றத்தில் நகைச்சுவை தொலைந்துவிட்டது. இது மிக முக்கியம். வாதிடும்போது எதை நினைவில் முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் எது தேவை இல்லை என்பதை அறிய வேண்டும். நீதிமன்றத்தை மயக்கி உங்களை பின் தொடர்ந்து வரும் அளவுக்கு பேச வேண்டும், ஒருபோதும் நீதிபதி மனம் கோணும் வகையில் பேசக் கூடாது. 

 



 

8. நீதிமன்ற புறகணிப்பு போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன ? 

 

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது இத்தொழிலை அவமதிப்பது போன்றது. இது போன்ற போராட்டத்தில் ஈடுபடும் போது நாம் கட்சிக்காரருக்கு ஆற்றும் கடமையில் இருந்து தவறியவர்கள் ஆகிறோம். அது போக இது சட்டத்தை மதிக்காத செயல் ஆகும்.

நாமே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் பின் யார் மதிப்பார்கள் ?

 

 

9. ஒரு வழக்கறிஞர் சட்டம் தவிர்த்து எதைப் பற்றி எல்லாம் வாசிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பி வாசித்த சில புத்தகங்கள் யாவை ?

 

ஆங்கில அறிவு பெற நீங்கள் வாசித்துத் தான் ஆக வேண்டும். நான் ஆங்கில கட்டுரைகள் அபுனைவு நூல்களை வாசிப்பேன். புனைவு நூல்களையும் வாசிப்பேன் இப்போது நான் வாசிக்கும் மார்குவெஸின் 100 years of solitude சற்று சிக்கலானது. இருந்தும் திரும்பத் திரும்ப வாசித்து பொருள் கொள்கிறேன். பிளாடோவின் The Republic நான் பரிந்துரை செய்வேன். 

 

10. ஒரு வழக்கறிஞர் முதல் 10 ஆண்டுகளில் சந்திக்கும் சவால்கள், இடர்கள் என்னென்ன ? சமாளிக்கும் வழிகள் என்ன ?

 

முதலில் அவர் எதிர்கொள்வது ஆரோக்யமற்ற போட்டி, பின்னர் தமது கட்சிக்காரரை திருப்திபடுத்துவது சிரமம் என அறிவார், குறைந்த வாய்ப்புகளே அவருக்கு அமையும் அதை பயன்படுத்தி தன்னை நிறுவ வேண்டும். 

 

11. பொதுவாக ஒரு வழக்கறிஞரின் சட்ட அறிவுக்கும் தீர்ப்புகள் வாசிப்பிற்கும் அவரது தொழில் வெற்றிக்கும் தொடர்பில்லை, அவருக்கு வழக்குகள் தேடி வருவது பிரபல்யத்தின் அடிப்படையில் தான் என்கிற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?   

 

இல்லை.  ஒரு பாதி காட்சிக்காரர் திறமையான வழக்கறிஞரை அமர்த்துகிறார் மீதி இவர் காரியம் சாதித்துத் தருவார் என அமர்த்துகிறார். ஆக இப்போதும் கற்று திறமையாக வழக்கு நடத்தும் வழக்கறிஞருக்கு வாய்ப்பு உண்டு. 

.

 

12. ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் உரிமையற்றவர்/ குற்றவாளி என அறியும் போது மேற்கொண்டு வழக்கை தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா ? ஆஜராவதற்கு முன்பே தனது கட்சிக்காரர் உரிமையுடையவர்/குற்றமற்றவர் என உறுதி செய்துகொள்ள வேண்டுமா ? 

 

பொதுவாக ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரின் நலனை தான் முதன்மையாக கொள்ள வேண்டும், அவருக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றமுடைய கட்சிக்காரரை ஒருவர் தாவிர்ப்பார் என்றால் அவரை "praise worthy" என கூறுவேன். அவர் மேம்பட்டவர். 

 

 

13.ஒரு கட்சிக்காரருடன் ஏற்படுத்திக் கொள்ளும் தனிப்பட்ட நட்பு பற்றி (socialising) என்ன நினைக்கிறீர்கள் ?

 

கூடவே கூடாது, அவருடன் வெளியில் சென்று தேநீர் அருந்துவது, தனிப்பட்ட முறையில் பழகுவது தவறு. ஆனால் அவரின் குடும்ப விழாக்களுக்கு செல்லலாம். 

 

14. ஒரு வழக்கில் உணர்வு ரீதியான பிணைப்புடன் இருப்பது பற்றி என்ன நினக்கிறீர்கள் ? 

 

அவ்வாறு பிணைப்புடன் இருக்கக் கூடாது, ஆனால் ஒரு மனிதனால் இது இயல்வது அல்ல. இப்போதும் ஒரு வெல்ல வேண்டிய வழக்கில் நான் தோற்பது வேதனைமிக்கது, இரண்டு மூன்று நாட்கள் வலி மிக்கதாக இருக்கும். 

 

15. கடந்த 10 ஆண்டுகளில் நமது வழக்கறிஞர் துறை அடைந்திருக்கும் மாற்றம் என எதை நினைக்கிறீர்கள் ?

 

நவீனமாகி விட்டது, இணையம் தொழிலை எளிதாக்கி விட்டது. நீதிபதிகள் எளிதில் தீர்ப்புகளை எழுதலாம், அவர்களின் பணி பளு குறைந்துவிட்டது. புதிய வகை வழக்குகள் எழத் துவங்கி உள்ளது. 

 

 

16. BAR Council தேர்தல் நடைமுறையில், உறுப்பினர் தேர்வில் உள்ள குறைபாடுகள் என்ன ? நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் ?

 

இந்த பார் கவுன்சில் தேர்தல் நம் தொழிலை சீரழித்துவிட்டது. வழக்கறிஞரை கையூட்டு பெறுபவர்களாக ஆக்கிவிட்டது. இதை சீர்திருத்த எவ்வித வழியும் இல்லை. 

 

 

17. நீதித்துறை ஊழல் என்பது நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் தொடர்புடையது, கடந்த பத்து ஆண்டுகளில் இது குறைந்துள்ளதா ? மேலும் குறைக்க குறிப்பாக என்ன நடவடிக்கை தேவை ?

 

இதில் பிரதான பங்களிப்பாற்றுபவர்கள் வழக்கறிஞர்கள். ஒரு முறைப்படுத்தப் பட்ட நிறுவனம் போல ஊழல் உள்ளது, கொடுப்பது வக்கீல்கள் மூலம் மட்டும்தான், பிறதுறைகளில் உள்ள ஊழலில் இதுபோல ஒரு தரப்பு முகமை என்பது இல்லை. இதில் இரண்டாவது இடத்தையே நீதிபதிக்கு கொடுப்பேன், மூன்றில் ஒன்று பழுது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் நீதித்துறை ஊழல் பெருமளவு குறைந்து வருகிறது. மூன்றாவது நீதித்துறை ஊழியர்கள் செய்யும் ஊழல், இந்த ஊழலின் மதிப்பு குறைவு என்பதால் இதை பெரிதுபடுத்த வேண்டியது இல்லை. 

 

18. நம் தொழிலில் சாதியம் என ஏதேனும் உண்டா?

 

50 ஆண்டுகளுக்கு முன்பு பிராமணர் எதிர் பிராமணர் அல்லாதோர் என துருவப்பட்டு இருந்தது, பிராமணர்கள் தமது கட்சிக்காரர் தாழ்மையான நடத்தினர், மெல்ல அவர்கள் பிற சமூக வழக்கறிஞரை நாடத் துவங்கினர். இப்போது இந்நிலை இல்லை. ஆனால் வக்கீல் தொழிலில் ஒரு பகுதியின் பெரும்பான்மை சமூகம் எதிர் மற்ற சமூகம் என்கிற ஆபத்தான நிலை நோக்கி மெல்ல நாம் நகர்ந்துகொண்டு இருக்கிறோம். 

 

இன்றும் தலித் வழக்கறிஞர்கள் குறைவு. இத்தொழிலில் போதிய வருவாய் இல்லை, பிற அரசு நிறுவனங்களில் அவர்களுக்கு வாய்ப்பு ஆகிய காரணத்தால் அவர்கள் இத்துறையை இயல்பிலேயே தேர்வு செய்வது குறைவு. ஆனால் 2000 ஆண்டு பின்னடைவை நம் தொழில் மூலம் நிகர் செய்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.  

 

 

19. இறுதி கேள்வி, உங்கள் பிற துறை ஆர்வங்கள் HAM radio உறுப்பினர் அனுபவம் பற்றி கூற முடியுமா ? 

 

எனக்கு பயணத்தில் ஆர்வம் உண்டு அமெரிக்கா ஐரோப்பா என விரிவாக பயணித்து உள்ளேன். இந்தியாவில் அஜந்தா எல்லோரா, ஹம்பி பொன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். நான் மேற்கொள்வது பெரிதும் ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் தான், இதற்கு வேறு ஒரு நண்பர் வட்டம் உள்ளது. செல்லும் முன்பு ஒரு இடத்தைப் பற்றி படித்து அறிந்துகொண்டு தான் செல்வேன். 

 

நீங்கள் பார்த்திருப்பீர்கள் நான் என் வயது நண்பர்களை விட இளைஞர்கள் சூழ தான் இருப்பேன். என்னை யாரும் கேலி செய்யலாம் ஆகவே என்னை சுற்றி ஒரு இளையோர் வட்டம் உண்டு, நான் பதிலுக்கு செய்யும் பகடியை அவர்கள் சகிக்க வேண்டும். இவர்களுடன் பயணிப்பேன். 

 

இப்போது தொடர்பு கொள்ள தொலைபேசி, இணையம் உள்ளது. முன்பு சமூக தொடர்புக்கு இந்த HAM radio தான். இதில் உலகெங்கும் நண்பர்கள். இரவு நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். இது சார்ந்து ஒரு நட்பு வட்டம் எனக்கு உள்ளது. 

 

நான் ஒரு டென்னிஸ் வீரன். இப்போதும் டென்னிஸ் பார்க்கிறேன். இந்த பத்து ஆண்டுகளாக Serve and volley முறை மாறிவிட்டது. ஒரு புள்ளி வெல்ல நீண்ட நேரம் ஆகிறது, சிறந்த உதாரணம் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி. நடால் மெத்ததேவ் ஆட்டம் பல மணி நேரம் நீடித்தது. நான் ஒரு பெடரர் ரசிகன். நவரத்திலோவா பிடித்த வீராங்கனை. 

.....

Comments

  1. நான் ஏதாச்சும் கேள்வி கேக்கலாம்னு நினைச்சா.. அதை எல்லாமே கேட்டுவிடடார்.
    ஆன் நேரில் சந்திக்கும்போது கேட்டுக்கிறேன் சீனியர்.

    ReplyDelete
  2. ஆசிரியரைப்பிடித்தால் அவர் நடத்தும் பாடமும் மாணவனுக்கு பிடிக்கும். அப்படித்தான் என் குருவாகிய திரு. ஏசிஎம் அவர்களை பிடித்ததால் அவரிடம் கற்ற சட்டமும் பிடித்துப்போனது.

    ReplyDelete

Post a Comment