Skip to main content

7. லலிதா என்கிற யானை

 

S.G.M.Shaa @ Sheik Mohammed 


https://indiankanoon.org/doc/151011628/


சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் யானை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பு  வித்தியாசமானதாகவும், மிக முக்கியமான ஒன்றாகவும் தோன்றியது. விலங்கு உலகை பற்றியும்,

 

“லலிதா” என்ற யானையை ஷேக் முகமது என்பவர் 08.05.2000ல் குஞ்சு முகமது என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார் பின்பு 2002ல் உரிமையாளர் உரிமைமாற்றம் வேண்டி விண்ணப்பித்துள்ளார். இப்போது வனவிலங்குகச் சட்டத்தின் சிக்கல்களால் அதை கிடப்பில் போட்டுவிட்டனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளார்கள் அதிகாரிகள். நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக முகமது உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

அரசு தரப்பிலிருந்து மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.  யானையை காட்டிலாகா பாதுகாப்பில் விடும்படி ஆணையிடப்பட்டுள்ளது. சட்டத்தின் வரையறை படி அரசு செய்தது சரியானதே. ஆனால் அனைத்து தருணங்களிலும் சட்ட விதிகள் சரியான முடிவெடுப்பதற்கு உகந்ததாய் இல்லை. சில நேரங்களில் ஒரு நல்ல தீர்வுக்காக விதிமுறைகளை தாண்டி யோசித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

 

தீர்ப்பின் ஆரம்பத்திலேயே இதை  குறிப்பிடும் நீதிபதி , ‘out of box’ சிந்தனை என்பதின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்துகிறார். நமது அரசு அலுவலக செயல்பாட்டில் ஊழலை காட்டிலும் முக்கிய பிரச்னை என்பது இதுதான். விளைவு எவ்வாறாயினும் அதை பற்றி கருத்தில்கொள்ளாமல் வெறும் காலகாலமாக பின்பற்றும் நடைமுறைகளையும், சட்ட விதிகளின் அடிப்படையிலும்  கண்மூடித்தனமாக செயல்படுவதினால் பல நேரங்களில் பலருக்கு பெரும் பாதிப்புதான் ஏற்படுகிறது.

 

இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு அரசு செயல்பட்டுள்ளது அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவு மற்றும் பாதிப்பு என்ன என்பதை நீதிபதி ஆராய்கிறார். பொதுவாக வழக்காடுபவர்களின் நலன் தான் தீர்ப்பிற்கு அடிப்படையாக அமையும். ஆனால் குழந்தை தன் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று தாயோ, தந்தையோ அல்லது மற்ற உறவினர்களோ கேட்கும் வழக்குகளில் மட்டும் வழக்கில் உள்ள நபர்களைவிட வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் நலனையே நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

 

தன்னுடைய தரப்பை, நலனை முன்வைக்க முடியாத, ஆனால் வழக்கின் முடிவால் பாதிக்கப்படக்கூடிய, குழந்தையை போலவே இங்கு லலிதாவும் உள்ளதாக நீதிபதி கருதுகிறார். எனவே  லலிதாவின் நலனே இவ்வழக்கை தீர்மானிக்கவேண்டிய காரணி என்றெண்ணி நீதிபதி, யாருக்கும் தெரிவிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புதூர் என்ற கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு லலிதாவை காண்கிறார்.

 

அங்கு லலிதாவிற்கு தேவையான உணவு வழங்கப்பட்டிருந்தது.  அவரை மிகவும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் படுத்திய விஷயம், லலிதா சங்கலியால் கட்டப்படவில்லை என்பது. உடலில் காயங்கள் ஏதுமில்லை, நல்ல உடல்நலத்துடனும் மகிழ்வுடனும் லலிதா காணப்பட்டாள். இவரே உணவளிக்கிறார், லலிதா இவரிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறது. சில கோவில் மற்றும் தர்காவில் நடக்கும் விழாக்களில் லலிதாவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது அவளின் கண்ணியத்தை, கம்பீரத்தை எவ்வகையிலும் குறைப்பதில்லை என்று நீதிபதி கருதுகிறார்.

 

இருபது ஆண்டு காலம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்து, குறிப்பிட்ட நபர்களிடம் நெருங்கி பழகி வாழ்ந்து வரும் லலிதாவை, அனைத்திலிருந்தும் பிரித்து வனத்துறையின் முகாமுக்கு அனுப்பினால் லலிதா அடையும் மனத்துயரையும், அதன் உளவியல் பாதிப்புகளையும் நீதிபதி கருத்தில்கொண்டு லலிதாவை மனுதாரருடனேயே, இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்துகொள்ள அனுமதிக்கிறார்.

 

அவர் இந்த முடிவை வருவதற்கு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் கொடுக்காத தெளிவை புகழ் பெற்ற ஜெர்மனிய இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் Peter Wohlleben  அவர்களின்   “The Inner Life of Animals” என்ற புத்தகம் மூலம் தான் அடைந்ததாக  நீதிபதி குறிப்பிடுகிறார். யானை நுண்ணுணர்வு மிக்கதும், தான் என்ற அறிதல் உடையதும் ஆகும் என்றும்; அவை  mirror testல் தேர்வடைந்ததையும் சுட்டிக்காட்டும் நீதிபதி Peter Wohlleben அவர்கள் பலவருட நேரடி அனுபவத்தில் கண்டடைந்து கூறிய உண்மையை ஆப்த வாக்கியமாக எடுத்துகொள்கிறார்.

 

வி.எஸ்.செந்தில்குமார், வழக்கறிஞர், சென்னை.

....

 

Comments

  1. சட்டம் பற்றிய அறிவு கிடைக்கப்பெறும் வாய்ப்பில்
    மகிழ்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. சட்டம் பயன்படுத்தும் முறையை உணர்ந்தேன்

    ReplyDelete

Post a Comment